உலக சாம்பியன்ஷிப் வெல்வதே இலக்கு

பாட்மிண்டன் போட்டியில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதே அடுத்த இலக்கு என்று இந்திய வீரர் கே. ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
ஹைதராபாத் விமான நிலையத்தில் பெற்றோருடன் ஸ்ரீகாந்த்.
ஹைதராபாத் விமான நிலையத்தில் பெற்றோருடன் ஸ்ரீகாந்த்.

பாட்மிண்டன் போட்டியில் உலக சாம்பியன்ஷிப் பட்டம் வெல்வதே அடுத்த இலக்கு என்று இந்திய வீரர் கே. ஸ்ரீகாந்த் கூறியுள்ளார்.
தொடர்ச்சியாக இந்தோனேஷிய ஓபன், ஆஸ்திரேலிய ஓபன் ஆகிய பாட்மிண்டன் போட்டிகளில் பட்டம் வென்றுள்ள நிலையில் ஸ்ரீகாந்த் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்தத் தொடர் வெற்றிகளால் சர்வதேச தரவரிசையில் அவர் முதல் 10 இடங்களுக்குள் மீண்டும் வந்துள்ளார்.
ரியோ ஒலிம்பிக் போட்டிக்குப் பிறகு கணுக்கால் காயம் கண்ட ஸ்ரீகாந்த், 3 மாதங்களுக்குப் பிறகு மீண்டு வந்த நிலையில் தொடர் வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறார். இந்நிலையில், ஆஸ்திரேலிய ஓபன் போட்டிக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை நாடு திரும்பிய அவர், ஹைதராபாத் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
சர்வதேச தரவரிசையில் முதல் 10 இடங்களுக்குள் மீண்டும் வந்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது. ஆனால், தரவரிசையில் முன்னேற்றம் காணுவதற்காக போட்டிகளில் விளையாடுவதில்லை. வெற்றி பெறுவதற்காகவே அதில் விளையாடுகிறேன்.
உலக சாம்பியன்ஷிப் போட்டியில் பட்டம் வெல்வதே அடுத்த இலக்காகும். கடந்த 2 வாரங்கள் சிறப்பானதாக அமைந்தது. எனக்கு மட்டுமல்லாமல், ஹெச்.எஸ்.பிரணாய், சாய் பிரனீத் ஆகியோருக்கும் அவ்வாறாகவே அமைந்தது.
கடந்த 2 மாதங்களாகவே எனது முழு திறனையும் வெளிப்படுத்தும் வகையில் சிறப்புடன் ஆடினேன். வரும் மாதங்களிலும் கடுமையாக பயிற்சி மேற்கொள்ள விரும்புகிறேன். நிலைத்த தன்மையுடன் ஆடுவதற்கு அதுதான் ஒரே வழியாகும்.
என்னைப் பொருத்த வரையில் ஒவ்வொரு வெற்றியுமே முக்கியமானது. எந்த வெற்றியையும், மற்றொன்றுடன் நான் ஒப்பிட்டுப் பார்ப்பதில்லை. எனினும், நடப்பு ஒலிம்பிக் சாம்பியனை ஆஸ்திரேலிய ஓபன் இறுதிப் போட்டியில் வீழ்த்தியது மிகப்பெரிய வெற்றியாகும்.
காயத்துக்குப் பிறகு உடனடியாக போட்டிகளில் பங்கேற்க விரும்பவில்லை. முதலில் முறையாகப் பயிற்சி மேற்கொண்டு தகுந்த ஃபார்முக்கு வந்த பிறகே போட்டிகளில் பங்கேற்றேன். தேசிய பயிற்சியாளர் கோபிசந்த், எனது புதிய பயிற்சியாளர் ஆகியோரது உதவியாலேயே இந்த நிலையை அடைந்துள்ளேன் என்று ஸ்ரீகாந்த் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com