யு-17 உலகக் கோப்பை கால்பந்து: இந்திய அணியின் போட்டிகள் தில்லிக்கு இடம் மாறுகிறது?

வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இந்திய அணி விளையாடும் ஆட்டங்களை மும்பையில் இருந்து தில்லிக்கு இடமாற்றுவதற்கு சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிஃபா தயார் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.

வயதுக்கு உள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்துப் போட்டியில் இந்திய அணி விளையாடும் ஆட்டங்களை மும்பையில் இருந்து தில்லிக்கு இடமாற்றுவதற்கு சர்வதேச கால்பந்து அமைப்பான ஃபிஃபா தயார் நிலையில் இருப்பதாகத் தெரிகிறது.
இதுதொடர்பான இந்திய அரசின் கோரிக்கையை தீவிரமாக எடுத்துக்கொண்டுள்ளதாக ஃபிஃபா தெரிவித்துள்ளது.
இந்தியாவில் முதல் முறையாக ஃபிஃபா உலகக் கோப்பை கால்பந்துப் போட்டி நடைபெறவுள்ளது. இந்தப் போட்டி வரும் அக்டோபர் 6 முதல் 28-ஆம் தேதி வரையில் இந்தியாவின் 6 நகரங்களில் நடைபெறவுள்ளது.
இதில், போட்டியை ஒருங்கிணைக்கும் நாட்டின் அணி என்ற முறையில் இந்திய அணி "ஏ' பிரிவில் முதலிடத்தில் உள்ளது. அட்டவணைப் படி, "ஏ' பிரிவு அணிகளுக்கான ஆட்டங்களை நவி மும்பையிலும், "பி' பிரிவு அணிகளுக்கான ஆட்டங்களை தில்லியிலும் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
இந்திய அணி மோதும் ஆட்டங்களை மும்பையில் நடத்தவே, அகில இந்திய கால்பந்து சம்மேளனமும் (ஏஐஎஃப்எஃப்) முதலில் விருப்பம் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், இந்திய அணி மோதும் ஆட்டங்கள் தலைநகரான தில்லியில் நடைபெறுவது பொருத்தமானதாக இருக்கும் என்று விளையாட்டு அமைச்சகம் கருதியது. அதை செயல்படுத்துவது தொடர்பாக ஏஐஎஃப்எஃப்-க்கும் அழுத்தம் கொடுத்தது.
இதையடுத்து, இந்திய அணியின் ஆட்டங்களை மும்பையில் இருந்து தில்லிக்கு மாற்றுமாறு ஃபிஃபாவிடம் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதனால், இந்திய அணி இடம்பெற்றுள்ள "ஏ' பிரிவு அணிகளுக்கான போட்டிகளை மும்பையில் இருந்து தில்லிக்கும், "பி' பிரிவு அணிகளுக்கான போட்டிகளை தில்லியில் இருந்து மும்பைக்கும் மாற்ற வேண்டியுள்ளது.
இந்நிலையில், ஃபிஃபா நிகழ்ச்சிகளுக்கான தலைவர் ஜேமி யார்ஸா இதுகுறித்து புதன்கிழமை கூறியதாவது:
போட்டிக்கு சாதகமான வகையில் இருக்கும் முடிவுகளை மேற்கொள்வது தொடர்பாக பணியாற்றி வருகிறோம். அதேவேளையில், உலகக் கோப்பை போட்டிக்கான கூட்டாளி என்ற முறையில் இந்திய அரசின் கோரிக்கையையும் தீவிரமாக கருத்தில் கொண்டுள்ளோம். இந்த விவகாரத்தில் அனைத்துத் தரப்பினரும் ஏற்றுக்கொள்ளக் கூடிய முடிவை எடுப்போம்.
இந்திய அரசு, ஏஐஎஃப்எஃப் ஒத்துழைப்புடன் நடைபெறவுள்ள இந்த உலகக் கோப்பை கால்பந்து போட்டியானது, இந்தியாவில் கால்பந்து விளையாட்டின் எதிர்காலத்தை மாற்றக்கூடிய வகையில் இருக்கும் என்று ஜேமி யார்ஸா கூறினார்.
இதனிடையே, இந்திய அணிக்கான போட்டிகளை மும்பையில் இருந்து தில்லிக்கு இடமாற்றுவதற்கான முனைப்பில் ஃபிஃபா இருப்பதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com