ராஞ்சி டெஸ்ட்: புஜாரா இரட்டை சதம்; அசத்தல் சாதனைகள்!

ராஞ்சியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா அட்டகாசமான இரட்டை சதம் அடித்தார்.
ராஞ்சி டெஸ்ட்: புஜாரா இரட்டை சதம்; அசத்தல் சாதனைகள்!

ராஞ்சி: ராஞ்சியில் நடைபெறும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் புஜாரா அட்டகாசமான இரட்டை சதம் அடித்தார்.

இந்தியா – ஆஸ்திரேலியா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில் நடந்து வருகிறது. இந்த் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 451 ரன்கள் சேர்த்தது. பின்னர் தனது முதல் இன்னிங்சை ஆடத் தொடங்கிய இந்தியா நேற்று 3–வது நாள் ஆட்ட நேர முடிவில் முதல் இன்னிங்சில் 6 விக்கெட் இழப்புக்கு 360 ரன்கள் சேர்ந்திருந்தது.

இந்நிலையில் நான்காவது நாள் ஆட்டம் இன்று தொடர்ந்தது. தொடர்ந்து புஜாரா-சஹா இணை சிறப்பாக விளையாடியது. உணவு இடைவேளை வரையில் 6 விக்கெட்கள் இழப்பிற்கு இந்தியா 435 ரன்களை எடுத்து இருந்தது. இது ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை விட 16 ரன்கள் மட்டுமே குறைவாகும். அப்பொழுது புஜாரா 150 ரன்களை கடந்தும்,  விருத்திமான் சஹா 59 ரன்களுடனும் விளையாடி வந்தனர்.

உணவு இடைவேளைக்குப் பிறகும் இந்த ஜோடி தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தியது. ஆட்டத்தின் 191.3 வது ஓவரில் புஜாரா இரட்டை சதம் அடித்தார். அவரைத் தொடர்ந்து விருத்திமான் சஹாவும் சதம் அடித்து சிறப்பாக ஆடினார். தொடர்ந்த இந்த வெற்றிக் கூட்டணிக்கு ஆஸியின் சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயோன் முற்றுப்புள்ளி வைத்தார். 193.2 வது ஓவரில் லயோன் ஓவரில் புஜாரா மேஸ்வெல்லிடம் கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். அவர் 525 பந்துகளை சந்தித்து 21 பவுண்டரிகள் உதவியுடன் 202 ரன்கள் எடுத்திருந்தார். டெஸ்ட் போட்டிகளில் புஜாரா அடிக்கும் 3-வது இரட்டை சதம் இதுவாகும்.

மேலும் இந்த இன்னிங்ஸ் மூலம் டெஸ்ட் போட்டியில் 500-க்கும் அதிகமான பந்துகளை எதிர்க்கொண்ட முதல் வீரர் என்ற பெருமையையம் புஜாரா தனதாக்கி உள்ளார். இதற்கு முன்னால் பாகிஸ்தானுக்கு எதிராக 2004-ஆம் ஆண்டு  முல்தான் டெஸ்ட் போட்டியில் ராகுல் திராவிட் 495 பந்துகளை எதிர் கொண்டிருந்தார்.   .

மேலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 7-வது விக்கெட்டுக்கு இந்த இணை 199 ரன்கள் குவித்தது. இதுவும் ஒரு உலக சாதனையாகும். இதன் மூலம் 69 வருட சாதனையொன்று முறியடிக்கப்பட்டது.  

புஜாராவைத் தொடர்ந்து 117 ரன்கள் எடுத்த விருத்திமான் சஹாவும் அவுட் ஆனார். தற்பொழுது ஜடேஜா மற்றும் உமேஷ் யாதவ் ஆகியஇருவரும் விளையாடி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com