தினேஷ் கார்த்திக்கின் கனவு நிறைவேறுமா?

உள்ளூர் போட்டிகளில் சிறப்பாக விளையாடி வருவதால் சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்குத் தேர்வாகக்கூடிய வாய்ப்பு அதிகரித்துள்ளது.
தினேஷ் கார்த்திக்கின் கனவு நிறைவேறுமா?

31 வயது ஆகிவிட்டது. தோனிக்குப் பிறகு சாஹா டெஸ்ட் அணியில் வலுவான இடத்தைப் பிடித்துவிட்டார். ஒருநாள் அணியில் இதைவிடவும் கடுமையான போட்டி நடக்கிறது. இந்நிலையில் தினேஷ் கார்த்திக்கால் எந்தளவுக்குப் போராட முடியும்?

தினேஷ் கார்த்திக் கடைசியாக 2014-ம் ஆண்டு இந்திய அணிக்காக விளையாடினார். அடுத்ததாக மீண்டும் இந்திய அணிக்குத் தேர்வு ஆவதற்கான எல்லா வேலைகளையும் செய்துமுடித்துவிட்டார். தேர்வுக்குழு அவரை முறைப்படி தேர்வு செய்து சாம்பியன்ஸ் டிராபிக்காக இங்கிலாந்துக்கு அனுப்பவேண்டியதுதான் பாக்கி.

விஜய் ஹசாரே டிராபி கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் பெங்கால் அணியை 37 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தமிழக அணி சாம்பியன் ஆனது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட் செய்த தமிழக அணி, 47.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 217 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய பெங்கால் அணி, 45.5 ஓவர்களில் 180 ரன்களுக்கு சுருண்டது. இதில் தினேஷ் கார்த்திக் அபாரமாக ஆடி சதம் கடந்தார். மொத்தம் 120 பந்துகளை சந்தித்த அவர், 14 பவுண்டரிகளுடன் 112 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். சதமடித்த தினேஷ் கார்த்திக் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

மேலும் இந்தப் போட்டியில் 607 ரன்கள் பெற்று அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடமும் பிடித்துள்ளார் கார்த்திக்.

தோனி இந்திய அணியில் இருந்தபோது வாய்ப்பு மறுக்கப்பட்ட விக்கெட் கீப்பர்களில் தினேஷ் கார்த்திக்கும் ஒருவர். பேட்ஸ்மேனாக அவர் இங்கிலாந்தில் சாதித்து மேலும் பல வாய்ப்புகள் பெற்றாலும் அவரால் நிரந்தரமாக இந்திய அணியில் நீடிக்கமுடியவில்லை.

ஆனால், தற்போது நல்ல ஃபார்மில் இருக்கும் கார்த்திக், இந்தியாவுக்காக ஆட விருப்பப்படுகிறார்.

விஜய் ஹசாரே இறுதிப்போட்டிக்குப் பிறகு அவர் கூறியதாவது: நான் பொய் கூற விரும்பவில்லை. இந்திய அணிக்காக மீண்டும் விளையாடவேண்டும் என்று கனவு காண்கிறேன். அதுதான் என் லட்சியம். ஒரு பேட்ஸ்மேனாகவே விளையாடமுடியும் என நினைக்கிறேன். இந்தியாவுக்காக நான் நெ.1 இடத்திலிருந்து நெ.7 வரை விளையாடியுள்ளேன். என்னுடைய ஆட்டம் முன்னேற்றம் அடைந்துள்ளது. மாநிலத்துக்காக நன்றாக விளையாடும்போது அப்படியே நாட்டுக்காகவும் ஆடவே ஒவ்வொரு வீரரும் விரும்புவார்கள். ஐபிஎல்-க்கு முன்பு தியோதர் டிராபி உள்ளது. அதிலும் நன்றாக விளையாட ஆசைப்படுகிறேன் என்கிறார்.

2013-ல் சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணி வென்றபோது அதில் தினேஷ் கார்த்திக் இடம்பெற்றிருந்தார். இந்திய அணி ஆடிய எல்லா ஆட்டங்களிலும் இடம்பெற்றார். இந்தியா சமீபத்தில் விளையாடிய ஒருநாள் தொடரில் யுவ்ராஜ் சிங், ஜாதவ் ஆகியோர் சிறப்பாக விளையாடினார்கள். இதனால் தினேஷ் கார்த்திக்கால் ஒரு பேட்ஸ்மேனாக இந்திய அணியில் இடம்பெறுவது மிகவும் சிரமம். இதில், சாம்பியன்ஸ் டிராபி நடக்கும் சமயத்தில் ரோஹித் சர்மாவும் இந்திய அணியில் விளையாடும் அளவுக்கு உடற்தகுதி பெற்றுவிடுவார். இதனால் வழக்கமான வீரர்களுக்கு இடம் அளிக்கவே மிகுந்த சிரமம் ஏற்படும். இந்நிலையில் கார்த்திக் எப்படித் தேர்வாகி அணியில் இடம்பிடிப்பார் என்கிற கேள்வியும் எழுகிறது.

ஆனால் இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழு உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் நன்றாக விளையாடுபவர்களுக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கிறது. அதன்படியே அபிவன் முகுந்த் இந்திய டெஸ்ட் அணிக்குத் தேர்வானார். இதன் வரிசையில் தினேஷ் கார்த்திக்கும் இந்திய அணிக்குக் கட்டாயம் தேர்வு செய்யப்படுவார் என்கிற எதிர்பார்ப்பும் தற்போது ஏற்பட்டுள்ளது.

தினேஷ் கார்த்திக்கின் பேட்டிங் திறமை முழுவதுமாக வெளிப்பட்டது இங்கிலாந்தில்தான். தொடக்க வீரராக இருந்து இந்திய டெஸ்ட் அணி இங்கிலாந்தில் தொடரை வெல்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தார். மீண்டும் அவர் இங்கிலாந்தில் தன் திறமையை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்குமா?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com