விராட் கோலியை டொனால்ட் டிரம்ப்புடன் ஒப்பிட்டு ஆஸி. ஊடகம் சாடல்!

விளையாட்டு உலகின் டொனால்ட் டிரம்ப் என இந்திய கேப்டன் கோலியை ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சாடியுள்ளது.
விராட் கோலியை டொனால்ட் டிரம்ப்புடன் ஒப்பிட்டு ஆஸி. ஊடகம் சாடல்!

விளையாட்டு உலகின் டொனால்ட் டிரம்ப் என இந்திய கேப்டன் கோலியை ஆஸ்திரேலிய ஊடகம் ஒன்று சாடியுள்ளது.

ராஞ்சியில் நடைபெற்று வரும் டெஸ்ட் போட்டியில், முதல் நாள் ஆட்டத்தின்போது பந்து பவுண்டரிக்கு செல்வதை பாய்ந்து சென்று தடுத்தார் கோலி. அப்போது அவருடைய வலது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து களத்தில் இருந்து வெளியேறிய அவர் மீண்டும் பீல்டிங் செய்ய வரவில்லை. தோள்பட்டையில் காயமடைந்த கோலி, 2-வது நாள் ஆட்டம் தொடங்குவதற்கு முன்னதாக நடைபெற்ற பயிற்சியில் கலந்து கொண்டார். ஆனால் 2-வது நாள் ஆட்டத்தின்போது அவர் பீல்டிங் செய்யவில்லை. அவருக்கு ஸ்கேன் எடுக்கப்பட்டதில் தோள்பட்டையில் லேசான காயம் மட்டுமே ஏற்பட்டிருப்பது தெரியவந்தது. அதனால் அவர் பேட்டிங் செய்வதில் எந்த பிரச்னையும் இல்லை என பிசிசிஐ-யால் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் ஆஸி. வீரர்கள் இந்த விவகாரத்தை முன்வைத்து இந்திய அணியின் பிஸியோ பேட்ரிக் ஃபர்ஹர்ட்டைக் கிண்டலடித்ததாகத் தெரிகிறது. இதனால் கடுப்பான கோலி செய்தியாளர் சந்திப்பின்போது கூறியதாவது: நான்கைந்து பேர் பேட்ரிக்கின் பெயரைக் குறிப்பிட்டுள்ளார்கள். ஏன் எனத் தெரியவில்லை. அவர் எங்களுடைய பிஸியோ. அவருடைய வேலை எனக்குச் சிகிச்சை அளிப்பது. அவரைக் கிண்டலடிக்க வேண்டிய காரணம் என்ன? எனக்குத் தெரியவில்லை. நீங்கள் அவர்களிடம்தான் ஏன் அவர் பெயரைக் குறிப்பிட்டுப் பேசினார் என்று கேட்கவேண்டும் என்றார். ஆனால் கோலியின் குற்றச்சாட்டை ஆஸி. கேப்டன் ஸ்மித் மறுத்தார். நாங்கள் பேட்ரிக்கைக் கிண்டல் அடிக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் கோலி காயத்திலிருந்து குணமானதற்கு அவர் முக்கிய காரணம் என்றார். இதுமட்டுமில்லாமல் கோலி - ஸ்மித் இடையே தொடர்ந்து கருத்து மோதல்கள் ஏற்பட்டு வருகின்றன.

இதையடுத்து ஆஸி. ஊடகமான டெய்லி டெலிகிராஃப், விராட் கோலியைக் கடுமையாகச் சாடியுள்ளது. அதில் வெளிவந்துள்ள கட்டுரையில் கூறப்பட்டிருப்பதாவது:

விராட் கோலி, விளையாட்டு உலகின் டொனால்ட் டிரம்ப் ஆகிவிட்டார். அதிபர் டிரம்ப் போல தனது தோல்விகளுக்கான காரணமாக ஊடகங்களைக் குறை சொல்கிறார்.

விராட் கோலியின் காயத்தை ஸ்மித் கேலி செய்யவில்லை. அதை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியும் வெளிப்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆஸி. அணியிடம் பேசியுள்ளது. ஆனால் கோலி, வார்னர் அவுட் ஆனபோது ஸ்மித் தன்னைக் கிண்டலடித்ததாக எண்ணிக்கொண்டு ஸ்மித்தை அதே பாணியில் கேலி செய்துள்ளார்.  

கோலி இந்தத் தொடரில் மோசமாக விளையாடி வருகிறார். ஆனால் அவர் தொடர்புடைய சர்ச்சைகளால் கிரிக்கெட் ஆன்மா உயிரற்றதாக உள்ளது.

கிரிக்கெட்டில் ஒற்றுமையைப் பாதுகாக்க கேப்டன்கள் முயற்சிக்கவேண்டும். ஆனால் நூறு வருடங்களுக்கு மேலாக விளையாடப்பட்டு வரும் கிரிக்கெட்டின் அஸ்திவாரங்களில் ஒன்றை அழிப்பதாக கோலியின் நடவடிக்கைகள் உள்ளன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்களை ஏமாற்றுபவர்களாகச் சித்தரித்த கோலிக்கு எவ்வித தண்டனையும் ஐசிசியால் அளிக்கப்படவில்லை. ஐசிசி, பிசிசிஐ என யாரும் அவர்மீது கை வைக்கமுடியாது. கிரிக்கெட் ஆஸ்திரேலியாவுடன் சமாதான உடன்படிக்கையை பிசிசிஐ மேற்கொண்டபோதும் கோலி தன்னுடைய வார்த்தைகளைத் திரும்பப் பெறவில்லை. இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் அர்ஜூனா ரணதுங்கா போல கோலியும் எதிரணி மீதும் விளையாட்டின் மீதும் மதிப்பு, மரியாதை இல்லாமல் உள்ளார். இதன்மூலம் அவர் அணியையும் தன்னையும் ஊக்கப்படுத்திக்கொள்கிறார் என்று கடுமையாகச் சாடியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com