தர்மசாலா டெஸ்ட்: இந்தியா நிதான ஆட்டம் (248/6)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 91 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.
தர்மசாலா டெஸ்ட்: இந்தியா நிதான ஆட்டம் (248/6)

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 91 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது.

ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கட்டுக்கோப்பாக பந்துவீசியதால் இந்திய பேட்ஸ்மேன்களால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியவில்லை. ஆஸ்திரேலியாவின் முதல் இன்னிங்ஸ் ஸ்கோரை எட்டுவதற்கு இந்தியா இன்னும் 52 ரன்கள் எடுக்க வேண்டியுள்ளது.
ஹிமாசலப் பிரதேச தலைநகர் தர்மசாலாவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி தனது முதல் இன்னிங்ஸில் 88.3 ஓவர்களில் 300 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் 111, மேத்யூ வேட் 57, டேவிட் வார்னர் 56 ரன்கள் சேர்த்தனர்.
இந்தியத் தரப்பில் குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளையும், உமேஷ் யாதவ் 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
பின்னர் முதல் இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஒரு ஓவரில் ரன் ஏதும் எடுக்கவில்லை.
ராகுல் 60: 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து ஆடிய இந்திய அணியில் முரளி விஜய் 11 ரன்கள் சேர்த்த நிலையில் ஹேஸில்வுட் பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் மேத்யூ வேட்டிடம் கேட்ச் ஆனார்.
இதையடுத்து கே.எல்.ராகுலுடன் இணைந்தார் புஜாரா. அவர், ஒருபுறம் நிதானமாக ஆட, மறுமுனையில் அசத்தலாக ஆடிய ராகுல் 98 பந்துகளில் அரை சதம் கண்டார். இந்தத் தொடரில் அவர் அடித்த 5-ஆவது அரை சதம் இது.
இந்திய அணி 40.2 ஓவர்களில் 108 ரன்கள் எடுத்திருந்தபோது ராகுலின் விக்கெட்டை இழந்தது. 124 பந்துகளைச் சந்தித்த அவர் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 60 ரன்கள் சேர்த்து கம்மின்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 87 ரன்கள் சேர்த்தது.
புஜாரா அரை சதம்: இதையடுத்து புஜாராவுடன் இணைந்தார் கேப்டன் அஜிங்க்ய ரஹானே. இந்த ஜோடி நிதானமாக ஆட, இந்தியாவின் ஸ்கோர் மெதுவாக உயர்ந்தது. தடுப்பாட்டம் ஆடிய புஜாரா 132 பந்துகளில் அரை சதம் கண்டார். டெஸ்ட் போட்டியில் அவர் அடித்த 15-ஆவது அரை சதம் இது. தேநீர் இடைவேளைக்குப் பிறகு புஜாரா 151 பந்துகளில் 6 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். புஜாரா-ரஹானே ஜோடி 3-ஆவது விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தது.
கருண் நாயர் ஏமாற்றம்: பின்னர் வந்த கருண் நாயர் 5 ரன்களில் நடையைக் கட்ட, அஸ்வின் களம்புகுந்தார். ரஹானே நிதானமாக ஆடியபோதும், அஸ்வின் சற்று வேகமாக ரன் சேர்த்தார். தடுப்பாட்டம் ஆடுவதிலேயே தீவிர கவனம் செலுத்திய ரஹானே 4 ரன்களில் அரை சதத்தை நழுவவிட்டார். அவர் 104 பந்துகளில் 1 சிக்ஸர், 7 பவுண்டரிகளுடன் 46 ரன்கள் சேர்த்து லயன் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.
இதையடுத்து களம்புகுந்த விக்கெட் கீப்பர் ரித்திமான் சாஹா நிதானமாக ஆட, மறுமுனையில் வேகமாக ரன் சேர்த்த அஸ்வின் 49 பந்துகளில் 4 பவுண்டரிகளுடன் 30 ரன்கள் சேர்த்த நிலையில் லயன் பந்துவீச்சில் எல்பிடபிள்யூ முறையில் வெளியேறினார்.
இதையடுத்து சாஹாவுடன் ஜோடி சேர்ந்தார் ஜடேஜா. இந்த ஜோடி மேலும் விக்கெட் எதுவும் விழாமல் பார்த்துக் கொண்டது. 2-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 91 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 248 ரன்கள் எடுத்துள்ளது. சாஹா 10, ஜடேஜா 16 ரன்களுடன் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலியத் தரப்பில் நாதன் லயன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.
3-ஆவது நாள் ஆட்டம் திங்கள்கிழமை நடைபெறுகிறது. கடைசி 3 நாள்களும் ஆடுகளம் பந்துவீச்சுக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்திய அணி முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவது மிகவும் கடினமாகும். முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றாலொழிய இந்தப் போட்டியில் இந்திய அணி வெல்வது மிகவும் கடினமாகும்.


துளிகள்...


63
இரண்டாவது நாளில் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நாதன் லயன், இந்தியாவுக்கு எதிராக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய சுழற்பந்து வீச்சாளர்கள் வரிசையில் (63 விக்கெட்டுகள்) மேற்கிந்தியத் தீவுகளின் லான்ஸ் கிப்ஸூடன் 2-ஆவது இடத்தைப் பகிர்ந்து கொண்டார். இலங்கையின் முத்தையா முரளீதரன் முதலிடத்தில் உள்ளார். அவர் 105 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

5
இந்தத் தொடரில் 5 அரை சதங்களை விளாசியுள்ளார் கே.எல்.ராகுல். இதன்மூலம் ஒரு தொடரில் சதமடிக்காமல் அதிக அரை சதங்களை விளாசிய இந்தியர்களான திலீப் சர்தேசாய், குண்டப்பா விஸ்வநாத் ஆகியோரின் சாதனையை சமன் செய்தார் ராகுல்.

54
இந்திய வீரர் கருண் நாயர் கடந்த டிசம்பரில் சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்டில் முச்சதம் அடித்தார். ஆனால் அதன்பிறகு 4 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள அவர் முறையே 26, 0, 23, 5 என மொத்தம் 54 ரன்களை மட்டுமே எடுத்துள்ளார்.

1316
இந்த சீசனில் புஜாரா 1,316 ரன்கள் குவித்துள்ளார். இதன்மூலம் ஒரு சீசனில் அதிக ரன் குவித்தவர்கள் வரிசையில் 2-ஆவது இடத்தைப் பிடித்துள்ளார். முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டனான ரிக்கி பாண்டிங் 2005-06 சீசனில் 1,483 ரன்கள் குவித்ததே இன்றளவும் சாதனையாக உள்ளது.

10
டெஸ்ட் போட்டியில் 1,000 ரன்கள் மற்றும் 100 விக்கெட்டுகளை வீழ்த்திய 10-ஆவது இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் ரவீந்திர ஜடேஜா. அவர், இந்த சீசனில் மட்டும் 500 ரன்களையும், 50 விக்கெட்டுகளையும்
எடுத்துள்ளார்.


ஸ்கோர் போர்டு

ஆஸ்திரேலியா-300
(ஸ்டீவன் ஸ்மித் 111, மேத்யூ வேட் 57, டேவிட் வார்னர் 56,
குல்தீப் யாதவ் 4வி/68, உமேஷ் யாதவ் 2வி/69)
 

இந்தியா

கே.எல்.ராகுல் (சி) வார்னர் (பி) கம்மின்ஸ் 60 (124)
முரளி விஜய் (சி) வேட் (பி) ஹேஸில்வுட் 11 (36)
புஜாரா (சி) ஹேண்ட்ஸ்கம்ப் (பி) லயன் 57 (151)
ரஹானே (சி) ஸ்மித் (பி) லயன் 46 (104)
கருண் நாயர் (சி) வேட் (பி) லயன் 5 (16)
அஸ்வின் எல்பிடபிள்யூ (பி) லயன் 30 (49)
ரித்திமான் சாஹா நாட் அவுட் 10 (43)
ரவீந்திர ஜடேஜா நாட் அவுட் 16 (23)
உதிரிகள் 13


விக்கெட் வீழ்ச்சி: 1-21 (விஜய்), 2-108 (ராகுல்), 3-157 (புஜாரா),
4-167 (நாயர்), 5-216 (ரஹானே), 6-221 (அஸ்வின்).


பந்துவீச்சு: ஹேஸில்வுட் 18-6-40-1,
பட் கம்மின்ஸ் 21-5-59-1, நாதன் லயன் 28-5-67-4,
ஸ்டீவன் ஓ"கீஃப் 24-4-69-0.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com