ரஹானே கேப்டனாக நீடிக்க வேண்டும்: சர்ச்சையை உருவாக்கும் ஜான்சன்!

கோலி வெர்சஸ் ரஹானே என்றொரு போட்டி இதுவரை இல்லை. ஏன், தோனி வெர்சஸ் கோலி என்றொரு போட்டியே கூட...
ரஹானே கேப்டனாக நீடிக்க வேண்டும்: சர்ச்சையை உருவாக்கும் ஜான்சன்!

கோலி வெர்சஸ் ரஹானே என்றொரு போட்டி இதுவரை இல்லை. ஏன், தோனி வெர்சஸ் கோலி என்றொரு போட்டியே கூட இல்லாமல் இருந்ததுதானே. 

ஆனால் இந்த விவகாரத்தில் புதிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஜான்சன். 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 'பார்டர்-கவாஸ்கர் டிராபி'க்கான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி வாகை சூடியது. இது, கடந்த 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு தோல்வியின்றி இந்தியா பதிவு செய்துள்ள 7-ஆவது டெஸ்ட் தொடர் வெற்றியாகும். கடைசி டெஸ்டில் காயம் காரணமாக கோலி இடம்பெறவில்லை. இதனால் ரஹானே இந்திய அணியை அருமையாக வழிநடத்தி வெற்றி தேடித்தந்தார்.

இதைவைத்துதான் புதிய சர்ச்சை ஒன்றை உருவாக்கியுள்ளார் ஆஸி. அணியின் முன்னாள் வேகப்பந்துவீச்சாளர் மிட்செல் ஜான்சன். அவர் ட்விட்டரில் கூறியதாவது:

ரஹானே கேப்டனாக நீடிக்கவேண்டும். இது மிகவும் கடினமான தொடர். ஆனால் சச்சரவுகள் ஆடுகளத்துக்கு வெளியே தொடரக்கூடாது என்று அவர் கூறியுள்ளார். இதேபோல ரஹானேவின் தலைமைப் பண்பு குறித்து ஸ்மித்தும் சாதகமாகப் பேசியுள்ளார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பாக, ஆஸ்திரேலிய அணியினரை நண்பர்களாக குறிப்பிட்ட கோலி, தற்போது அந்த எண்ணத்திலிருந்து மாறியதாக தெரிவித்துள்ளார். இந்தத் தொடரின்போது, டிஆர்எஸ் முறை சர்ச்சை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான ஒப்பீடு, மேக்ஸ்வெல் கேலி செய்தது என களத்துக்கு உள்ளேயும், வெளியேயுமான பல விமர்சனங்களை சந்தித்தார் கோலி. இந்நிலையில், அதுகுறித்து போட்டிக்குப் பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது கோலி கூறியதாவது: இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக நான் குறிப்பிட்ட சூழ்நிலைகள் தற்போது மாறியுள்ளன. முதல் போட்டிக்கு முன்பாக நான் கூறியது தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அதுபோன்ற வார்த்தைகளை இனி எப்போதும் நான் கூறப்போவதில்லை. எங்கள் மீதான விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளோம் என்றார். இதையடுத்து டெஸ்ட் தொடர் முடிந்தபிறகும் கோலி - ஸ்மித் இடையேயான மோதல் நீடிக்கிறது. இத்தருணத்தில்தான் ரஹானே கேப்டனாக நீடிக்கவேண்டும் என்கிற குரல் ஆஸி. தரப்பிலிருந்து எழுந்துள்ளது.

ஆனால் ஜான்சனின் இந்த யோசனைக்கு இந்திய ரசிகர்களிடம் அதிருப்தியை உருவாக்கியுள்ளது. ட்விட்டர் தளத்திலேயே ஜான்சனுக்கு விமரிசனங்கள் கிடைத்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com