ஆஸி. வீரர்கள் எல்லோரையும் அப்படிச் சொல்லவில்லை: விராட் கோலி புதிய விளக்கம்!

ஆஸி. வீரர்களுடனான நட்பு குறித்து செய்தியாளர் சந்திப்பில் தான் கூறியது ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ளது...
ஆஸி. வீரர்கள் எல்லோரையும் அப்படிச் சொல்லவில்லை: விராட் கோலி புதிய விளக்கம்!

ஆஸி. வீரர்களுடனான நட்பு குறித்து செய்தியாளர் சந்திப்பில் தான் கூறியது ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ளது என இந்திய அணி கேப்டன் விராட் கோலி விளக்கம் அளித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 4-ஆவது மற்றும் கடைசி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 'பார்டர்-கவாஸ்கர் டிராபி'க்கான 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என்ற கணக்கில் இந்தியா கைப்பற்றி வாகை சூடியது. இது, கடந்த 2015-ஆம் ஆண்டுக்குப் பிறகு தோல்வியின்றி இந்தியா பதிவு செய்துள்ள 7-ஆவது டெஸ்ட் தொடர் வெற்றியாகும். முன்னதாக, இலங்கை, தென் ஆப்பிரிக்கா, மேற்கிந்தியத் தீவுகள், நியூஸிலாந்து, இங்கிலாந்து, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்தியா கைப்பற்றியுள்ளது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான டெஸ்ட் தொடர் தொடங்கும் முன்பாக, ஆஸ்திரேலிய அணியினரை நண்பர்களாக குறிப்பிட்ட கோலி, தற்போது அந்த எண்ணத்திலிருந்து மாறியதாக தெரிவித்துள்ளார். இந்தத் தொடரின்போது, டிஆர்எஸ் முறை சர்ச்சை, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடனான ஒப்பீடு, மேக்ஸ்வெல் கேலி செய்தது என களத்துக்கு உள்ளேயும், வெளியேயுமான பல விமர்சனங்களை சந்தித்தார் கோலி. இந்நிலையில், அதுகுறித்து போட்டிக்குப் பிறகான செய்தியாளர்கள் சந்திப்பில் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது கோலி கூறியதாவது: இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பாக நான் குறிப்பிட்ட சூழ்நிலைகள் தற்போது மாறியுள்ளன. முதல் போட்டிக்கு முன்பாக நான் கூறியது தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, அதுபோன்ற வார்த்தைகளை இனி எப்போதும் நான் கூறப்போவதில்லை. எங்கள் மீதான விமர்சனங்களுக்கு தகுந்த பதிலடி கொடுத்துள்ளோம். வெளிநாடுகளில் தொடரை வெல்ல வேண்டும்: தற்போது பெற்றுள்ள வெற்றிக்காக மிகுந்த சந்தோஷம் கொள்ள முடியாது. தற்போது உலகின் நம்பர் 1 அணியாக இருக்கிறோம். இப்போது தான் எங்களுக்கான சவால் தொடங்கியுள்ளது. வெளிநாடுகளில் தொடரை வெல்லும்போது தான் நான் இன்னும் அதிக மகிழ்ச்சி அடைவேன். அது ஒரு கெளரவமான தருணம் என்று கோலி கூறினார்.

இந்நிலையில் தன்னுடைய பேட்டி குறித்து விளக்கம் அளித்துள்ளார் கோலி. ட்விட்டரில் அவர் கூறியதாவது: செய்தியாளர் சந்திப்பில் நான் அளித்த பேட்டி ஊதிப் பெரிதாக்கப்பட்டுள்ளது. முழு ஆஸ்திரேலிய அணியைக் குறித்தும் அவ்வாறு நான் பேசவில்லை. சிலபேரை மட்டுமே அவ்வாறு குறிப்பிட்டுள்ளேன். எனக்குப் பழக்கமுள்ள, பெங்களூர் ஐபிஎல் அணியுடன் விளையாடியுள்ள ஆஸி. வீரர்கள் சிலருடனான நட்பு எப்போதும் நல்லமுறையில் இருந்து வருகிறது. அது ஒருபோதும் மாறாது என்று கூறியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com