ஐ.பி.எல் சீசன் 10 :  விலகுகிறார்களா அஸ்வின், முரளி விஜய்?

எதிர் வரும் 5-ஆம் தேதி துவங்க உள்ள ஐ.பி.எல் டி -20 போட்டித் தொடர் சீசன் 10-இல் தமிழக வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முரளி விஜய் ...
ஐ.பி.எல் சீசன் 10 :  விலகுகிறார்களா அஸ்வின், முரளி விஜய்?

சென்னை: எதிர் வரும் 5-ஆம் தேதி துவங்க உள்ள ஐ.பி.எல் டி -20 போட்டித் தொடர் சீசன் 10-இல் தமிழக வீரர்கள் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் முரளி விஜய் ஆகிய இருவரும் விளையாடுவார்களா என்பது கேள்விக்குறியாக உள்ளது.

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் பிரமாண்ட கிரிக்கெட் திருவிழா ஐ.பி.எல் 10-வது சீசன் வரும் ஏப்ரல் 5-ந்தேதி அன்று துவங்க உள்ளது. இந்த தொடருக்காக் ஒவ்வொரு அணியும் தயாராகி வரும் வேலையில் முன்னணி வீரர்கள் தொடர்ச்சியாக காயம் காரணமாக விலகிக் கொண்டு வருகின்றனர்.

டெல்லி அணியில் இடம்பிடித்திருந்த தென் ஆப்பிரிக்க வீரர்களான ஜே.பி. டுமினி தனிப்பட்ட காரணத்திற்காகவும், அந்த அணியின் விக்கெட் கீப்பர் குயிண்டான் டி காக்  காயம் காரணமாகவும் முதலில் இந்த தொடரில் இருந்து விலகினார்கள்.

அவர்களைத் தொடர்ந்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி தோள்பட்டை காயம் காரணமாக பெங்களூர் அணியின் முதல் சில போட்டிகளில் விளையாடுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. அதே நேரம் அந்த அணியின் மற்றொரு முன்னணி வீரர் லோகேஷ் ராகுல் தோள்பட்டை காயம் காரணமாக தொடரில் இருந்து விலகியுள்ளார்.

சமீபத்தில் வங்கதேச அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர் முஷ்டாபிஜூர் ரஹ்மான் ஐதராபாத் அணியில் தான் இணைவது சந்தேகம் எனத் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் ரைசிங் புனே சூப்பர்ஜெயன்ட் அணியில் இடம்பிடித்துள்ள தமிழகத்தைச் சேர்ந்த முன்னணி சுழற்பந்து வீச்சாளர் அஸ்வின் காயம் காரணமாக அந்த அணியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார் .

தனது காயம் காரணமாக 6 முதல் 8 வாரங்கள் ஓய்வில் இருக்க வேண்டும் என்றும், காயத்திற்கான சிகிச்சையை விரைவில் மேற்கொள்ள உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதற்கு பின்னர் ஜூன் மாதம் இங்கிலாந்தில் நடைபெற இருக்கும் ஐ.சி.சி சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கலந்து கொள்ள அவர் திட்டமிட்டுள்ளார்.

இவரைப் போலவே பஞ்சாப் அணியில் இடம்பிடித்துள்ள முரளி விஜய்யும் இந்த தொடரில் கலந்து கொள்வது சந்தேகம் எனத் தெரிகிறது. தனது தோள்பட்டை காயத்திற்கு அவர் வெளிநாடு சென்று அறுவை சிகிச்சை செய்ய திட்டமிட்டு உள்ளதாகத் தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com