மியாமி மாஸ்டர்ஸ்: அரையிறுதியில் நடால், ஃபாக்னினி

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
அரையிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் நடால்.
அரையிறுதிக்கு முன்னேறிய மகிழ்ச்சியில் நடால்.

மியாமி மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்பெயினின் ரஃபேல் நடால், இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினி ஆகியோர் அரையிறுதிக்கு முன்னேறியுள்ளனர்.
அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் வியாழக்கிழமை நடைபெற்ற காலிறுதியில் போட்டித் தரவரிசையில் 5-ஆவது இடத்தில் இருக்கும் நடால் 6-2, 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்காவின் ஜேக் சாக்கை தோற்கடித்தார்.
1 மணி, 22 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் செட்டில் இரு முறை ஜேக் சாக்கின் சர்வீஸை முறியடித்த நடால், அந்த செட்டை மிக எளிதாக 6-2 என்ற கணக்கில் தன்வசமாக்கினார்.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது செட்டின் முதல் கேமிலேயே நடாலின் சர்வீஸை முறியடித்த ஜேக் சாக், 3-ஆவது கேமில் நடாலின் சர்வீஸை தன்வசமாக்குவதை நூலிழையில் தவறவிட்டார்.
இதன்பிறகு சுதாரித்துக் கொண்ட நடால், ஜேக் சாக்கின் சர்வீஸை முறியடிக்க, இருவரும் 2-2 என்ற கணக்கில் சமநிலையை எட்டினர். தொடர்ந்து அபாரமாக ஆடிய நடால் மீண்டும் ஜேக் சாக்கின் சர்வீஸை முறியடித்து அந்த செட்டை 6-3 என்ற கணக்கில் கைப்பற்றி வெற்றி கண்டார்.


மியாமி மாஸ்டர்ஸ் போட்டியில் 5-ஆவது முறையாக பங்கேற்றுள்ள நடால், இதுவரை ஒரு முறைகூட இங்கு பட்டம் வென்றதில்லை. அந்த குறையை இந்த முறை தீர்ப்பதில் தீவிரமாக இருக்கிறார்.
நடால் தனது அரையிறுதியில் இத்தாலியின் ஃபாபியோ ஃபாக்னினியை எதிர்கொள்கிறார். ஃபாக்னினி தனது காலிறுதியில் 6-4, 6-2 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் 2-ஆவது இடத்தில் இருந்த ஜப்பானின் கெய் நிஷிகோரிக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.
நடாலும், ஃபாக்னினியும் இதுவரை 10 முறை நேருக்கு நேர் மோதியுள்ளனர். அதில் நடால் 7 முறையும், ஃபாக்னினி 3 முறையும் வெற்றி கண்டுள்ளனர். எனவே அரையிறுதியில் நடாலுக்கே அதிக வெற்றி வாய்ப்புள்ளது.
அரையிறுதி ஆட்டம் குறித்துப் பேசிய நடால், 'நாங்கள் இருவருமே ஒருவருக்கொருவர் நன்கு பரிச்சயமானவர்கள். அவர் சில ஆட்டங்களில் என்னை தோற்கடித்துள்ளார். எனவே அரையிறுதி ஆட்டம் எங்கள் இருவருக்குமே சவாலான பரீட்சையாகும். அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது. அரையிறுதியில் நான் எனது முழு பலத்தையும் வெளிப்படுத்தி ஆடுவது மிக முக்கியமானதாகும்' என்றார்.
கெர்பரை வெளியேற்றினார் வீனஸ்!


மகளிர் ஒற்றையர் காலிறுதியில் அமெரிக்காவின் வீனஸ் வில்லியம்ஸ் 7-5, 6-3 என்ற நேர் செட்களில் போட்டித் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த ஜெர்மனியின் ஏஞ்ஜெலிக் கெர்பரை வீழ்த்தினார். வீனஸ் வில்லியம்ஸ் தனது அரையிறுதியில் பிரிட்டனின் ஜோஹன்னா கோன்டாவை சந்திக்கிறார். முன்னதாக கோன்டா தனது காலிறுதியில் 3-6, 7-6 (7), 6-2 என்ற செட் கணக்கில் போட்டித் தரவரிசையில் 3}ஆவது இடத்தில் இருந்த ருமேனியாவின் சைமோனா ஹேலப்புக்கு அதிர்ச்சித் தோல்வியளித்தார்.

* அரையிறுதியில் மோதவுள்ள நானும், ஃபாக்னினியும் நன்கு பரிச்சயமானவர்கள். அரையிறுதி ஆட்டம் எங்கள் இருவருக்குமே சவாலான பரீட்சையாகும். அதில் நான் முழு பலத்தையும் வெளிப்படுத்தி ஆடுவது மிக முக்கியமானதாகும்.
-ரஃபேல் நடால்*

* நிஷிகோரியை வீழ்த்துவது அவ்வளவு எளிதல்ல. ஆனால் இப்போது அவரை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
-ஃபாக்னினி *

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com