சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கிறது இந்தியா: இன்று அணியை அறிவிக்கிறது பிசிசிஐ

மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்கிறது.

மினி உலகக் கோப்பை என்றழைக்கப்படும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பங்கேற்கிறது.
அதற்கான இந்திய அணி திங்கள்கிழமை அறிவிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து வீரர்கள் பட்டியல் ஐசிசியிடம் உடனடியாக அளிக்கப்படவுள்ளது. இதன்மூலம் சாம்பியன்ஸ் டிராபியில் இந்திய அணி பங்கேற்பதில் நீடித்து வந்த இழுபறி நிலை முடிவுக்கு வந்துள்ளது.
தில்லியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற பிசிசிஐ பொதுக்குழு கூட்டத்தின்போது சாம்பியன்ஸ் டிராபி போட்டிக்கு இந்திய அணியை அனுப்புவது என ஒரு மனதாக முடிவெடுக்கப்பட்டது. இதுதவிர பிசிசிஐக்கான வருவாய் பகிர்வு குறைப்பு விஷயத்தில் ஐசிசிக்கு எதிராக சட்ட நடவடிக்கையில் இறங்கும் முடிவையும் கைவிட்டுள்ளது பிசிசிஐ. அதற்குப் பதிலாக ஐசிசியுடன் பேச்சுவார்த்தை நடத்துவது என முடிவெடுக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக பிசிசிஐயின் மூத்த நிர்வாகியான ராஜீவ் சுக்லா கூறுகையில், 'பிசிசிஐ பொதுக்குழுவில் சுமுக முடிவு எடுக்கப்பட்டது. சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி பங்கேற்கிறது. திங்கள்கிழமை (மே 8) இந்திய அணி அறிவிக்கப்படுகிறது.
பிசிசிஐக்கான வருவாய் குறைப்பு விவகாரம் தொடர்பாக பிசிசிஐ செயலர் அமிதாப் செளத்ரி, ஐசிசியிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்துவார். ஐசிசியுடன் மோதல் போக்கை கடைப்பிடிக்காமல், பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணும் வகையிலேயே எங்களின் அணுகுமுறை இருக்கும். வருவாய் குறைப்பு, பிசிசிஐயின் அதிகாரம் குறைக்கப்பட்டது உள்ளிட்ட 6 பிரச்னைகள் தீர்க்கப்பட வேண்டியுள்ளன' என்றார்.
சாம்பியன்ஸ் டிராபி போட்டியை புறக்கணிப்பது, ஐசிசிக்கு நோட்டீஸ் அனுப்புவது, அடுத்த 8 ஆண்டுகளுக்கு ஐசிசி சார்பில் நடைபெறும் போட்டிகளை புறக்கணிப்பது போன்ற விஷயங்களில் பிசிசிஐ தொடர்ந்து தீவிரம் காட்டி வந்தது. ஆனால் உச்ச நீதிமன்றத்தால் பிசிசிஐயை கண்காணிக்க நியமிக்கப்பட்டுள்ள முன்னாள் சிஏஜி வினோத் ராய் தலைமையிலான நிர்வாகக் குழு கொடுத்த நெருக்கடியின் காரணமாகவே இப்போது பிசிசிஐ பணிந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக வினோத் ராய் கூறுகையில், 'சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பது என பிசிசிஐ முடிவெடுத்திருப்பது நிம்மதியளிக்கிறது. சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்க வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் அனில் கும்ப்ளே, கேப்டன் விராட் கோலி ஆகியோரிடம் ஏற்கெனவே தனிப்பட்ட முறையில் பேசியிருந்தேன்.
பிசிசிஐ நோட்டீஸ் அனுப்பி, அதை ஐசிசி கண்டுகொள்ளவில்லை என்றால், அதன்பிறகு நாம் என்ன செய்ய முடியும்? சாம்பியன்ஸ் டிராபியை புறக்கணிக்க முடியுமா? அதை இந்திய ரசிகர்கள் அனுமதிப்பார்களா? அடுத்த 8 ஆண்டுகளுக்கு ஐசிசி போட்டிகளில் விளையாடாவிட்டால் அது இந்திய அணிக்கு மிகப்பெரிய ஆபத்தாகும் என பிசிசிஐயிடம் ஏற்கெனவே கூறினேன்.
ஐசிசியின் வருவாய் குறைப்பால் ஏற்பட்டுள்ள இழப்பை இரு தரப்பு தொடரை நடத்தி ஈடுகட்டிக் கொள்ளலாம். ஒரு போட்டியை நடத்தினாலே ரூ.45 கோடி வருவாய் கிடைக்கிறது' என்றார்.
ஸ்கைப் மூலம் இந்தக் கூட்டத்தில் பங்கேற்ற முன்னாள் பிசிசிஐ தலைவரான என்.சீனிவாசன், சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என கூறியபோது, அதற்கு மற்ற நிர்வாகிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர். அதனால் சீனிவாசனின் வாதம் எடுபடாமல் போனது. இதன்மூலம் சீனிவாசனுக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com