இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது புணே: 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது ரைஸிங் புணே
இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது புணே: 20 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்தியது

ஐபிஎல் கிரிக்கெட் போட்டியின் முதலாவது தகுதிச்சுற்று ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை 20 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி முதல் அணியாக இறுதிச்சுற்றுக்கு முன்னேறியது ரைஸிங் புணே சூப்பர் ஜயன்ட்ஸ்.
இந்த இரு அணிகளுக்கு இடையே செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த புணே 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய மும்பை 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்தது.
முன்னதாக, டாஸ் வென்ற மும்பை அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது. பேட்டிங் செய்ய வந்த புணே அணியில் அஜிங்க்ய ரஹானே, ராகுல் திரிபாதி தொடக்க வீரர்களாக களம் கண்டனர்.
இதில் ராகுல் திரிபாதி டக் அவுட் ஆனார். 2 பந்துகளை சந்தித்திருந்த அவர், மிட்செல் மெக்லனாகன் பந்துவீச்சில் போல்டானார். தொடர்ந்து வந்த கேப்டன் ஸ்மித், ஒரு ரன்னில் ஆட்டமிழந்தார்.
2 பந்துகளை சந்தித்த அவர், ஹர்திக் பாண்டியாவின் பந்துவீச்சில் மலிங்காவிடம் கேட்ச் கொடுத்தார். பின்னர் மனோஜ் திவாரி களம் கண்டார். மறுமுனையில் நிதானமாக ஆடிவந்த ரஹானே 39 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் அரைசதம் அடித்தார்.
இந்நிலையில், 43 பந்துகளைச் சந்தித்த ரஹானே 5 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் 56 ரன்கள் எடுத்திருந்த நிலையில், கரன் சர்மா வீசிய பந்தில் எல்பிடபிள்யு முறையில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த தோனி, மனோஜ் திவாரியுடன் இணைந்தார்.
இதனிடையே, 45 பந்துகளில் 4 பவுண்டரி, ஒரு சிக்ஸருடன் அரைசதம் கண்டார் மனோஜ் திவாரி. தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் கடைசி 2 ஓவர்களில் அதிரடியாக சிக்ஸர்களை பறக்க விட்டார் தோனி.
ஆட்டத்தின் கடைசி ஓவரில் பூம்ரா வீசிய கடைசி பந்தில் மனோஜ் திவாரி ரன் அவுட் செய்யப்பட்டார். 48 பந்துகளை சந்தித்திருந்த அவர் 4 பவுண்டரி, 2 சிக்ஸர்களுடன் 58 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.
இவ்வாறாக 20 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் எடுத்தது புணே அணி. தோனி 26 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 40 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
மும்பை தரப்பில் மெக்லனாகன், மலிங்கா, கரன் சர்மா தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
மும்பை: இதையடுத்து 163 ரன்களை இலக்காகக் கொண்டு களம் கண்ட மும்பை அணியில் பார்த்திவ் படேல் மட்டும் அதிகபட்சமாக 40 பந்துகளுக்கு 3 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸர்களுடன் 52 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
எஞ்சிய வீரர்களில் ஹர்திக் பாண்டியா 14, கிருனால் பாண்டியா 15, மெக்லனாகன் 12 ரன்களில் வெளியேறினர்.
கேப்டன் ரோஹித் சர்மா உள்ளிட்ட இதர வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழக்க, 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 142 ரன்கள் எடுத்து வீழ்ந்தது மும்பை. பூம்ரா 16, மலிங்கா 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
புணே தரப்பில் வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்குர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். உனட்கட்,ஃபெர்குசன் தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.
16 ரன்கள் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com