கோப்பையை வெல்வது யார்? மும்பை-புணே இன்று மோதல்

ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸூம், ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸூம் மோதுகின்றன.
கோப்பையுடன் புணே கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், மும்பை கேப்டன் ரோஹித் சர்மா.
கோப்பையுடன் புணே கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், மும்பை கேப்டன் ரோஹித் சர்மா.

ஹைதராபாதில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் மும்பை இண்டியன்ஸூம், ரைஸிங் புணே சூப்பர்ஜயன்ட்ஸூம் மோதுகின்றன.
4-ஆவது முறையாக இறுதிச் சுற்றில் களமிறங்கும் மும்பை அணி, மூன்றாவது முறையாக சாம்பியன் பட்டம் வெல்வதில் தீவிரம் காட்டி வருகிறது. இதுதவிர முதல் தகுதிச் சுற்றில் புணேவிடம் கண்ட தோல்விக்கு பதிலடி கொடுக்கும் முனைப்பில் உள்ளது. ஆனால் புணே அணியோ, இந்த சீசனில் தொடர்ச்சியாக 3 முறை மும்பையை தோற்கடித்திருப்பதால் மிகுந்த நம்பிக்கையோடு இந்த ஆட்டத்தில் களமிறங்குகிறது.
மும்பை அணியில் தற்போதுள்ள வீரர்களில் கேப்டன் ரோஹித் சர்மா, கிரண் போலார்ட், ஹர்பஜன் சிங், அம்பட்டி ராயுடு ஆகியோர் 2013, 2015 ஆகிய ஆண்டுகளில் மும்பை அணி சாம்பியன் பட்டம் வென்றபோது இடம்பெற்றிருந்தனர்.
பலம் வாய்ந்த பேட்டிங்: மும்பை அணி பார்த்திவ் படேல், லென்டில் சிம்மன்ஸ், கேப்டன் ரோஹித் சர்மா, அம்பட்டி ராயுடு, கிருனால் பாண்டியா, கிரண் போலார்ட், ஹார்திக் பாண்டியா என வலுவான பேட்டிங் வரிசையைக் கொண்டுள்ளது. இவர்களில் ஒருவர் களத்தில் நின்றால்கூட, மும்பை அணி வலுவான ஸ்கோரை எட்டிவிடும்.
ஆனால் புணேவுக்கு எதிராக மும்பை பேட்ஸ்மேன்கள் இதுவரை பெரிய அளவில் சாதிக்கவில்லை. எனவே இந்த ஆட்டத்தில் மும்பை பேட்ஸ்மேன்கள் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே அந்த அணியின் வெற்றி வாய்ப்பு அமையும்.
வேகப்பந்து வீச்சில் ஜஸ்பிரித் பூம்ரா, லசித் மலிங்கா, மிட்செல் ஜான்சன், ஹார்திக் பாண்டியா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். இந்த சீசனில் ஜஸ்பிரித் பூம்ரா, தொடர்ந்து அபாரமாக பந்துவீசி வந்தாலும், அவருடைய பந்துவீச்சு, முதல் தகுதிச் சுற்றில் புணேவுக்கு எதிராக எடுபடவில்லை. எனினும் கொல்கத்தாவுக்கு எதிராக அபாரமாக பந்துவீசி 3 விக்கெட்டுகளை வீழ்த்திய பூம்ரா, புணே பேட்ஸ்மேன்களுக்கு இந்த முறை பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் கரண் சர்மா, கிருனால் பாண்டியா கூட்டணியை நம்பியுள்ளது மும்பை. கொல்கத்தாவுக்கு எதிராக 4 விக்கெட்டுகளை வீழ்த்திய கரண் சர்மா, புணே பேட்ஸ்மேன்களுக்கும் அச்சுறுத்தலாக இருப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
மிரட்டும் தோனி: புணே அணியில் அஜிங்க்ய ரஹானே, ராகுல் திரிபாதி, கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், மனோஜ் திவாரி, எம்.எஸ்.தோனி போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் உள்ளனர். மேற்கண்ட 5 பேருமே நல்ல ஃபார்மில் இருப்பது அந்த அணிக்கு பலமாகும்.
அவர்களில் குறிப்பாக தோனி அதிரடியாக ஆடி வருகிறார். மும்பைக்கு எதிரான முதல் தகுதிச் சுற்றில் 26 பந்துகளில் 5 சிக்ஸர்களுடன் 40 ரன்களை விளாசி வெற்றிக்கு வித்திட்ட தோனி மீது அதிக எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த சீசனில் ஸ்மித் 421 ரன்களும், மனோஜ் திவாரி 317 ரன்களும் குவித்துள்ளனர்.
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஜெயதேவ் உனட்கட், ஷர்துல் தாக்குர் ஆகியோர் புணேவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக திகழ்கின்றனர். இவர்களுக்குப் பக்கபலமாக டேன் கிறிஸ்டியான், பெர்குசன் ஆகியோர் பந்துவீசி வருகிறார்கள்.
சுழற்பந்து வீச்சில் வாஷிங்டன் சுந்தர் நம்பிக்கையளிக்கிறார். முதல் தகுதிச் சுற்றில் மும்பையின் 3 முக்கிய விக்கட்டுகளை வீழ்த்திய வாஷிங்டன் சுந்தர், இந்த ஆட்டத்திலும் மும்பை பேட்ஸ்மேன்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பார் என நம்பலாம்.
இதுவரை...
இவ்விரு அணிகளும் இதுவரை 5 முறை நேருக்கு நேர் மோதியுள்ளன. அதில் மும்பை அணி ஒரு முறை மட்டுமே வெற்றி கண்டுள்ளது. எஞ்சிய 4 ஆட்டங்களிலும் புணே அணியே வாகை சூடியுள்ளது.

7-ஆவது "பைனலில்'  களமிறங்கும் தோனி

புணே அணியின் விக்கெட் கீப்பர் எம்.எஸ்.தோனி, ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் 7-ஆவது முறையாக இறுதிச் சுற்றில் களமிறங்குகிறார். 2008 முதல் 2015 வரையிலான காலங்களில் 6 முறை இறுதிச் சுற்றில் விளையாடியிருக்கிறார் தோனி.
அதில் 2010, 2011 ஆகிய ஆண்டுகளில் சென்னை அணிக்கு கோப்பையை வென்று தந்துள்ளார். ஆனால் அவர் கேப்டன் பதவியில்லாமல், சாதாரண ஒரு வீரராக விளையாடவுள்ள முதல் இறுதிச் சுற்று இதுதான்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com