தேசிய விளையாட்டுப் போட்டிகளை விரைவாக நடத்துங்கள்

தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் தொடர் தாமதம் நீடித்து வரும் நிலையில், அந்தப் போட்டிகளை விரைவாக நடத்துமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர்
தேசிய விளையாட்டுப் போட்டிகளை விரைவாக நடத்துங்கள்

தேசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதில் தொடர் தாமதம் நீடித்து வரும் நிலையில், அந்தப் போட்டிகளை விரைவாக நடத்துமாறு இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் என்.ராமச்சந்திரனை விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல் அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியாவில் தேசிய விளையாட்டுப் போட்டியானது இரு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட வேண்டும். முன்னதாக கடந்த 2015-ஆம் ஆண்டு கேரளாவில் நடைபெற்ற தேசிய விளையாட்டுப் போட்டிகளானது 4 ஆண்டுகள் இடைவெளிக்குப் பிறகு நடைபெற்றது.
அடுத்த தேசிய விளையாட்டுப் போட்டியானது கோவா மாநிலத்தில் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றிருக்க வேண்டும். எனினும், அந்தப் போட்டிகளுக்கான ஏற்பாடுகள் இன்னும் மேற்கொள்ளப்படவில்லை.
இந்நிலையில், விளையாட்டுத் துறை அமைச்சர் விஜய் கோயல், இந்திய ஒலிம்பிக் சங்கத் (ஐஓஏ) தலைவர் என்.ராமச்சந்திரனை புதன்கிழமை சந்தித்தார். அப்போது விளையாட்டுத் துறைச் செயலர் இஞ்செதி ஸ்ரீனிவாஸும் உடனிருந்தார்.
இந்தச் சந்திப்புக்குப் பிறகு விஜய் கோயல் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
ஐஓஏ தலைவருடன் நீண்ட நேரம் கலந்தாலோசித்தேன். அப்போது, தேசிய விளையாட்டுப் போட்டிகளானது அந்தந்த நேரத்தில் நடைபெற வேண்டும் என்று அவரிடம் அறிவுறுத்தினேன். இதையடுத்து விரைவில் கோவா செல்வதாகவும், அங்கு உள்ள சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதாகவும் அவர் உறுதி அளித்துள்ளார்.
மேலும், தேசிய விளையாட்டுச் சம்மேளனங்களில் நிலவும் சர்ச்சைகளை உடனடியாக தீர்த்து வைக்குமாறும் அவரிடம் அறிவுறுத்தினேன் என்று விஜய் கோயல் கூறினார்.
அப்போது, பாட்டியாலா என்ஐஎஸ் வளாகத்தில் தடை செய்யப்பட்ட ஊக்கமருந்தை வைத்திருந்ததாக இந்தியாவின் சர்வதேச தடகள வீரர் ஒருவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறித்து செய்தியாளர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர்.
அதற்கு, 'ஊக்கமருந்து விவகாரத்தில் கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். முன்பை விட அதிகமாக வீரர்களிடம் சோதனை மேற்கொள்ளப்படுகிறது.
ஊக்கமருந்து பயன்பாட்டை குற்றச்செயலாக அறிவிப்பதற்காக முன்மொழிந்துள்ளோம்' என்றார்.
இதனிடையே, ராமச்சந்திரனுடனான சந்திப்பின்போது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் ஆசிய பீச் விளையாட்டுப் போட்டிகளை இந்தியாவில் நடத்துவதற்கான வாய்ப்புகள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாகத் தெரிகிறது.
அடுத்த 3 ஆசிய விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான நாடுகள் தேர்வு செய்யப்பட்டுவிட்ட நிலையில், 2020-ஆம் ஆண்டுக்கான ஆசிய பீச் விளையாட்டுப் போட்டிகளை நடத்தும் முனைப்பில் இந்தியா உள்ளது.
இதுகுறித்து கேட்டதற்கு, 'ஆசிய விளையாட்டுப் போட்டியை நடத்துவதற்கான ஏலத்தில் பங்கேற்பது குறித்து யோசிக்க வேண்டும். ஆசிய பீச் விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான வாய்ப்பை பெறும் நம்பிக்கை உள்ளது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com