விடைபெற்றார் ஆஷிஷ் நெஹ்ரா! குறைவாக ரன்கள் கொடுத்து அசத்தல்!

ஆட்டம் முடிந்த பிறகு அணி வீரர்களுடன் மைதானத்தை வலம் வந்த நெஹ்ரா ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார்...
விடைபெற்றார் ஆஷிஷ் நெஹ்ரா! குறைவாக ரன்கள் கொடுத்து அசத்தல்!

நியூஸிலாந்துக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டத்தில் இந்தியா 53 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என முன்னிலை வகிக்கிறது.

இந்த ஆட்டத்துடன், இந்திய அணியின் மூத்த வேகப்பந்து வீச்சாளரான ஆஷிஷ் நெஹ்ரா சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். ஆட்டத்துக்கு முன்பான பயிற்சியின்போது கேப்டன் கோலி, தோனி ஆகியோர் அணியின் சார்பில் நெஹ்ராவுக்கு நினைவுப் பரிசு வழங்கினர்.

இந்திய அணி பந்துவீச்சின்போது முதல் ஓவரையும், கடைசி ஓவரையும் நெஹ்ராவே வீசினார். எனினும் அவர் விக்கெட் ஏதும் வீழ்த்தவில்லை. 16.4வது ஓவரின்போது நியூஸிலாந்தின் 8-வது விக்கெட் விழுந்தது. இதனால் அடுத்த ஓவரை நெஹ்ரா வீசுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இல்லையெனில் அவருக்குப் பதிலாக பந்துவீசுபவர், மீதமுள்ள 2 விக்கெட்டுகளையும் எடுத்துவிட்டால் நெஹ்ராவுக்குக் கடைசி ஓவர் கிடைக்காமல் போய்விடும். ஆனால் 19 ஓவர் வரை விக்கெட் விழவில்லை. 20-வது ஓவரை வீசிய நெஹ்ரா 7 ரன்கள் கொடுத்தார். மொத்தமாக 4 ஓவர்கள் வீசிய நெஹ்ரா விக்கெட் எதுவும் எடுக்காமல் 29 ரன்கள் கொடுத்திருந்தார். 

இந்திய அணியில் நான்கு வேகப்பந்துவீச்சாளர்கள் விளையாடினார்கள். நெஹ்ரா, புவனேஸ்வர் குமார், பூம்ரா, பாண்டியா. இவர்களில் ரன்கள் குறைவாகக் கொடுத்தவர், நெஹ்ரா. மற்ற மூன்று பேரை விடவும் குறைவான எகானமி இவருக்குத்தான் கிடைத்தது. நெஹ்ரா - 7.25,  புவனேஸ்வர் - 7.66, பூம்ரா - 9.25, பாண்டியா - 11. நெஹ்ரா அணியில் சேர்க்கப்பட்டதால் இந்திய அணியில் நேற்று அளவுக்கு அதிகமாகவே பந்துவீச்சாளர்கள் இருந்தார்கள். எனினும் தொடக்க வீரர்கள் சிறப்பாக விளையாடியதால் பெரிய பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. (இதற்கு முந்தைய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான குவாஹாட்டி டி20 போட்டியில் பாண்டியாவைச் சேர்ந்து 5 பந்துவீச்சாளர்கள்தான் விளையாடினார்கள். நேற்று 6 பந்துவீச்சாளர்கள் அணியில் இடம்பிடித்தார்கள்.)

ஆட்டம் முடிந்த பிறகு அணி வீரர்களுடன் மைதானத்தை வலம் வந்த நெஹ்ரா ரசிகர்களிடம் இருந்து விடைபெற்றார். கடைசித் தருணங்களில் வீரர்களுடன் சேர்ந்து செஃல்பி எடுத்துக்கொண்டார். கோலியும் தவனும் நெஹ்ராவை தங்கள் தோளில் தூக்கிக்கொண்டு சிறிது தூரம் மைதானத்தை வலம் வந்தார்கள். 

நெஹ்ரா பிரியாவிடை தருவதால் ஆட்டம் முடிந்தபிறகு எந்த ஒரு ரசிகரும் வெளியேறவில்லை. அனைவரும் தங்கள் செல்போன்களில் நெஹ்ராவின் கடைசித் தருணங்களைப் பதிவு செய்துகொண்டார்கள். 

நேற்றைய ஆட்டம் நடைபெற்ற ஃபெரோஸ் ஷா கோட்லா மைதானத்தின் இரு 'என்ட்'களில் ஒன்றுக்கு புதன்கிழமை 'ஆஷிஷ் நெஹ்ரா என்ட்' என பெயர் சூட்டப்பட்டிருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறும் நெஹ்ராவை கெளரவிக்கும் விதமாக தில்லி மாவட்ட கிரிக்கெட் சங்கம் புதன்கிழமைக்கு மட்டுமாக இந்த ஏற்பாட்டைச் செய்திருந்தது. சர்வதேச கிரிக்கெட்டில் இத்தகைய கெளரவத்தை பெறும் 2-ஆவது பந்துவீச்சாளர் நெஹ்ரா ஆவார். முன்னதாக, இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சனுக்கு இத்தகைய கெளரவம் அளிக்கப்பட்டிருந்தது.

ஓய்வு பெறும் ஆஷிஷ் நெஹ்ரா குறித்து விராட் கோலி புதன்கிழமை கூறுகையில், 'நெஹ்ரா இப்போது வரை விளையாடி வருகிறார். ஒரு வேகப்பந்துவீச்சாளராக 19 ஆண்டுகள் விளையாடியது சாதனையாகும். என் உடன் விளையாடிய வீரர்களில் நெஹ்ரா மிகச் சிறந்த ஒருவர். இளம் வீரர்களுக்கு உதவும் அவர் போன்றவர்கள் ஓய்வு பெறுவது வருத்தமளிக்கிறது' என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com