அறிமுகப் போட்டியிலேயே முத்திரை பதித்த புவனேஸ்வர், பூம்ராவும் சிராஜின் சொதப்பல் பந்துவீச்சும்!

இந்திய கிரிக்கெட்டில் பலத்தப் போட்டி நடக்கும் நிலையில் முதல் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டால் பிறகு மீண்டெழுவது மிகவும்...
அறிமுகப் போட்டியிலேயே முத்திரை பதித்த புவனேஸ்வர், பூம்ராவும் சிராஜின் சொதப்பல் பந்துவீச்சும்!

கிடைத்த முதல் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தத் தவறவிட்டார் வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ். இதனால் அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையில் எந்தளவுக்கு நல்ல வாய்ப்புகள் உடனடியாகக் கிடைக்கும் என்கிற கேள்விகள் எழத் தொடங்கிவிட்டன. ஆனால், சிராஜ் அடுத்தப் போட்டியில் சிறப்பாகப் பந்துவீசுவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார் பூம்ரா. 

இந்தியாவுக்கு எதிரான டி20 கிரிக்கெட் தொடரின் 2-ஆவது ஆட்டத்தில் நியூஸிலாந்து 40 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதையடுத்து 3 ஆட்டங்களைக் கொண்ட தொடர் 1-1 என சமநிலையில் உள்ளது. இரு அணிகளுக்கு இடையே சனிக்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட் செய்த நியூஸிலாந்து 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் அடித்தது. அடுத்து ஆடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 156 ரன்கள் எடுத்தது.

கடந்த ஐபிஎல் போட்டியில் அடிப்படை விலை ரூ. 20 லட்சத்திலிருந்து ரூ. 2.60 கோடிக்கு 23 வயது சிராஜைத் தேர்வு செய்தது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. ஆட்டோ ஓட்டுநரின் மகனான சிராஜ் பல தடைகளைத் தாண்டி தற்போது இந்திய அணி வீரராகியிருக்கிறார். 2015-ல் ரஞ்சி போட்டியில் அறிமுகமான சிராஜ், அந்த வருடம் 9 போட்டிகளில் 41 விக்கெட்டுகள் எடுத்துக் கவனம் ஈர்த்தார். 3 வருடங்களுக்கு முன்பு தான் டென்னிஸ் கிரிக்கெட்டிலிருந்து அடுத்தக்கட்டத்துக்குச் சென்று தீவிரமான பயிற்சியில் இறங்கியுள்ளார். ஐபிஎல் மூலம் கவனம் ஈர்த்த சிராஜ், இன்று இந்திய அணி வீரர்.

இந்தியா ஏ அணி சார்பாக தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூஸிலாந்து அணிகளுக்கு எதிரான ஆட்டத்தில் சிறப்பாகச் செயல்பட்ட முகமது சிராஜ், புதிதாக டி20 அணியில் சேர்க்கப்பட்டார். அவருக்கு உடனடியாக நியூஸிலாந்துக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் விளையாட வாய்ப்பும் கிடைத்தது. ஆனால் அவருடைய பந்துவீச்சை நியூஸிலாந்து வீரர்கள் மிகச் சுலபமாக எதிர்கொண்டார்கள். இதனால் 4 ஓவர்களில் 53 ரன்களை வாரி வழங்கினார். இது, டி20 ஆட்டத்தில் முதல் முறையாக களம் காணும் பந்துவீச்சாளர் அளித்துள்ள 3-ஆவது அதிகபட்ச ரன்களாகும். முதல் இடத்தில் இங்கிலாந்தின் ஜேம்ஸ் ஆண்டர்சன் (64 ரன்கள்), 2-ஆவது இடத்தில் ஜோகிந்தர் சர்மா (57 ரன்கள்) உள்ளனர்.

இந்திய அணியில் இன்று நிரந்தர இடம் பிடித்துள்ள புவனேஸ்வர் குமார், பூம்ரா போன்ற ஒரு தொடக்கம் சிராஜுக்கு அமையாதது துரதிர்ஷ்டமே.

ஒருநாள், டி20 என இரண்டிலும் தனது முதல் ஓவரிலேயே விக்கெட்டுகள் எடுத்தார் புவனேஸ்வர் குமார். பூம்ராவின் முதல் ஒருநாள் போட்டியில் ஆஸி. 330 ரன்கள் எடுத்தபோதும் குறைவான ரன்கள் கொடுத்தவர் பூம்ராதான் (2/40). அந்தப் போட்டியில் பந்துவீசியவர்களில் பூம்ராவைத் தவிர யாரும் (இஷாந்த் சர்மா, உமேஷ் யாதவ், ரிஷி தவன், ஜடேஜா, குர்கீரத் சிங்) இன்று இந்திய ஒருநாள் அணியில் இல்லை. பூம்ரா விளையாடிய முதல் டி20 போட்டியிலும் அவர்தான் அதிக விக்கெட்டுகள் எடுத்தார் (3/23). கிடைத்த முதல் வாய்ப்பிலேயே கவனம் ஈர்த்து அணிக்கு உதவியதால் இருவரும் இந்திய அணியில் இன்று நிரந்தர இடம் பிடித்துள்ளார்கள். 

ஆனால், முகமது சிராஜின் பந்துவீச்சு, லட்சுமிபதி பாலாஜியின் முதல் ஒருநாள் போட்டியையே ஞாபகப்படுத்தியது. அந்த நாளன்று, கெய்லும் ஹிண்ட்ஸும் பாலாஜியின் பந்துவீச்சைப் பிரிந்து மேய்ந்தார்கள். 4 ஓவர்களில் விக்கெட் எதுவுமின்றி 44 ரன்கள். பிறகு, 14 மாதங்கள் கழித்துதான் பாலாஜியால் இந்திய அணிக்குத் திரும்பமுடிந்தது. முதல் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளாவிட்டால் அடுத்த வாய்ப்பு எப்போது கிடைக்கும் எனத் தெரியாது. இந்திய கிரிக்கெட்டில் பலத்தப் போட்டி நடக்கும் நிலையில் முதல் வாய்ப்பைத் தவறவிட்டுவிட்டால் பிறகு மீண்டெழுவது மிகவும் சிரமமாகிவிடும். 

சிராஜ் நிச்சயம் தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றுக்கொள்வார். முதல் போட்டியில் இதுபோல நடப்பது இயல்பு. பேட்ஸ்மேன்கள் நம் பந்துவீச்சைப் பதம் பார்க்கும்போதுதான் நிறைய கற்றுக்கொள்ளமுடியும். அடுத்தப் போட்டியில் இன்னும் சிறப்பாகப் பந்துவீசுவார் என்று பூம்ரா, சிராஜுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

இந்திய அணி, கடைசி டி20 போட்டியை வெல்லவேண்டிய கட்டாயத்தில் உள்ளதால் சிராஜுக்கு இன்னொரு வாய்ப்பு உடனே கிடைக்குமா எனத் தெரியாது. ஆனால் அப்படியொரு வாய்ப்பு கிடைக்கும்போது, புவனேஸ்வர், பூம்ரா போல் கிடைத்த வாய்ப்பில் சிராஜ் முத்திரை பதிக்கவேண்டியது காலத்தின் கட்டாயம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com