ஆஷஸ் டெஸ்ட் தொடர்: வாய்ப்பு மறுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள்!

சொந்த மண்ணில் டெஸ்ட் விளையாடவேண்டும் என்கிற மேக்ஸ்வெல்லின் ஆசை இந்தமுறையும் நிறைவேறவில்லை...
ஆஷஸ் டெஸ்ட் தொடர்: வாய்ப்பு மறுக்கப்பட்ட ஆஸ்திரேலிய வீரர்கள்!

இன்று அறிவிக்கப்பட்ட ஆஷஸ் தொடருக்கான ஆஸ்திரேலிய அணி, சில வீரர்களுக்கு அதிர்ச்சியையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இங்கிலாந்துக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 13 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 7 வருடங்களுக்குப் பிறகு ஆஸ்திரேலிய டெஸ்ட் அணியில் டிம் பெய்ன் விக்கெட் கீப்பராக இடம்பெற்றுள்ளார். நெவில், மேத்யூ வேட் ஆகிய இருவரையும் தாண்டி பெய்ன் அணியில் இடம்பெற்றிருப்பது பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது. 

ஆஸ்திரேலிய அணி அறிவிப்பு யார் யாருக்கு அதிர்ச்சியை உண்டாக்கியிருக்கும்? வாய்ப்பைத் தவறவிட்டவர்கள் யார் யார்?

க்ளென் மேக்ஸ்வெல்

6-ம் நிலையில் களமிறங்கும் இவர் அதியசத்தை உண்டாக்குவார் என்கிற நம்பிக்கை பொய்த்துப் போனதால் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். 

இந்த வருடம் இந்தியா, வங்கதேசம் ஆகிய அணிகளுக்கு எதிராக தலா 2 டெஸ்டுகள் விளையாடிய 29 வயது மேக்ஸ்வெல், எடுத்த ரன்கள்:

104, 2, 8, 45, 23, 14, 38, 25*.

இது தவிர சமீபத்திய ஷெஃப்ஃபீல்டு ஷீல்ட் போட்டியில் 6 இன்னிங்ஸ்களில் 200 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். இதனால்தான் மேக்ஸ்வெல்லைத் தேர்வு செய்துள்ளோம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு அவர் எதையும் சாதிக்கவில்லை. இதனால் மேக்ஸ்வெல்லை நீக்குவது ஆஸி. தேர்வாளர்களுக்கு எளிதாகப் போய்விட்டது. 

இதுவரை விளையாடிய 7 டெஸ்டுகளும் வெளிநாடுகளில் விளையாடியவை. சொந்த மண்ணில் டெஸ்ட் விளையாடவேண்டும் என்கிற மேக்ஸ்வெல்லின் ஆசை இந்தமுறையும் நிறைவேறவில்லை. 

ஹில்டன் கார்ட்ரைட்

இதுவரை 2 டெஸ்டுகள் மட்டுமே விளையாடியுள்ளார். 37, 18 என ரன்கள் எடுத்ததால் இவர் மீதான நம்பிக்கை போய்விட்டது. ஷெஃப்ஃபீல்டு ஷீல்ட் போட்டியிலும் பிரமாதமாக விளையாடவில்லை. 6 இன்னிங்ஸ்கள், 152 ரன்கள். சிறந்த ஆல்ரவுண்டராக வருவார் என நம்பிக்கை வைத்தார்கள். ஆனால் இதுவரை அதற்கான சுவடுகள் இல்லாததால் ஆஷஸ் அணியில் இடம்பெறவில்லை. 

மேத்யூ ரென்ஷா

கடந்த 12 மாதங்களாக டேவிட் வார்னருடன் தொடக்க வீரராகக் களமிறங்கியவர். 10 டெஸ்டுகள் விளையாடியுள்ள 21 வயது ரென்ஷா, 3 அரை சதங்களும் ஒரு சதமும் எடுத்துள்ளார். இந்தியாவுக்கு எதிரான தொடரில் அனைத்து டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடிய ரென்ஷா, இரு அரை சதங்கள் எடுத்தார். ஆனால் வங்கதேசத்துக்கு எதிரான இரு டெஸ்டுகளிலும் அவரால் ஒரு அரை சதம் கூட எடுக்கமுடியவில்லை. அதாவது கடந்த 9 இன்னிங்ஸ்களில் ஒரு அரை சதமும் இல்லை. மேலும் ஷெஃப்ஃபீல்டு ஷீல்ட் போட்டியில் 6 இன்னிங்ஸ்களில் 70 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

இதனால் நல்ல ஃபார்மில் உள்ள கேம்ரூன் பான்கிராஃப்டைத் தேர்வு செய்வது வசதியாகப் போய்விட்டது. 

மேத்யூ வேட்

ஷெஃப்ஃபீல்டு ஷீல்ட் போட்டியில் 5 இன்னிங்ஸ்களில் 38 ரன்கள் மட்டுமே எடுத்தார் வேட். டெஸ்ட் போட்டிகளில் கடந்த 25 இன்னிங்ஸ்களில் ஒரு சதமும் இரு அரை சதங்களும் மட்டுமே எடுத்துள்ளார். இதனால் 7 ஆண்டுகளாக டெஸ்ட் அணியில் இடம்பெறாவிடாலும் பெய்னால் சிறப்பாக விளையாட முடியும் என்கிற நம்பிக்கை ஏற்பட்டதால் அவரை தேர்வு செய்துள்ளார்கள். டாஸ்மானியா அணியில் வேட், பெய்ன் ஆகிய இருவரும் இடம்பெற்றார்கள். வேட் விக்கெட் கீப்பராகப் பணியாற்றினாலும் ஆஷஸ் தொடரில் விக்கெட் கீப்பராகத் தேர்வானது பெய்ன் தான். 

பீட்டர் நெவில்

பெய்ன் தேர்வினால் பாதிக்கப்பட்ட இன்னொரு நபர். சிறந்த விக்கெட் கீப்பர் என்று பெயர் நெவிலால் ரன்களைக் குவிக்க முடியாததால் அணியில் தேர்வாகவில்லை. ஷெஃப்ஃபீல்டு ஷீல்ட் போட்டியில் 4 இன்னிங்ஸ்களில் 80 ரன்கள் மட்டுமே எடுத்தார். 2015 ஆஷஸ் தொடரின்போது அறிமுகமான நெவில் கடந்த நவம்பரில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான தொடருக்குப் பிறகு அணியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டார். எப்படியும் ஆஷஸ் அணியில் இடம்பெற்றுவிடுவார் என்கிற நம்பிக்கை பலருக்கும் இருந்தது. ஆனால் பெய்ன் தேர்வு வேட், நெவில் ஆகிய இருவரையும் பின்னுக்குத் தள்ளிவிட்டது. 

ஜேக் வெதரால்ட்

ஷெஃப்ஃபீல்டு ஷீல்ட் போட்டியில் 6 இன்னிஸ்களில் 419 ரன்கள் எடுத்து கவனம் ஈர்த்தார். ஆனால் இந்தத் தொடக்க வீரர், கடைசி 3 டெஸ்ட் போட்டிகளுக்குத் தேர்வாக வாய்ப்புள்ளதாகப் பலரும் கருதுகிறார்கள். 

ஃபெர்குஸன்

ஒரே ஒரு டெஸ்ட் விளையாடியுள்ள ஃபெர்குஸன், இந்த வருட ஷெஃப்ஃபீல்டு ஷீல்ட் போட்டியில் 6 இன்னிங்ஸ்களில் 343 ரன்கள் எடுத்தார். 114 முதல்தரப் போட்டிகளில் விளையாடியுள்ளவர், இந்த ஆஷஸ் தொடரில் இடம்பெறமுடியாமல் போனது துரதிர்ஷ்டமே. அவரை விடவும் சிறந்த வீரர்கள் உள்ளதால் இவருக்கான வாய்ப்பு இந்தமுறை கிடைக்கவில்லை.

ஆஷஸ் தொடருக்கான அஸ்திரேலிய அணி:

ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், கேம்ரூன் பான்கிராஃப்ட், உஸ்மான் கவாஜா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், ஷான் மார்ஷ், டிம் பெய்ன் (விக்கெட் கீப்பர்), மிட்செல் ஸ்டார்க், பேட் கம்மின்ஸ், நாதன் லயன், ஜோஷ் ஹேஸில்வுட், ஜாக்ஸன் பேர்ட், சாட் சேயர்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com