டிராவை நோக்கி இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட்

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
டிராவை நோக்கி இந்தியா-இலங்கை முதல் டெஸ்ட்

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி டிராவில் முடிவது ஏறக்குறைய உறுதியாகியுள்ளது.
 இப்போட்டியின் 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
 இதையடுத்து தனது 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய இந்தியா ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. இரு அணிகளும் தலா ஒரு இன்னிங்ஸ் ஆட வேண்டிய நிலையில், இப்போட்டி முடிவடைய ஒருநாள் மட்டுமே இருப்பதால் போட்டி டிரா ஆகும் நிலையில் உள்ளது.
 கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய இந்தப் போட்டியில் முதலில் பேட் செய்த இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 59.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அணியில் அதிகபட்சமாக சேதேஷ்வர் புஜாரா மட்டும் 52 ரன்கள் எடுத்தார். கே.எல்.ராகுல், கோலி டக் அவுட் ஆகினர். இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
 இதையடுத்து தனது முதல் இன்னிங்ûஸ தொடங்கிய இலங்கை அணி, 3-ஆவது நாள் ஆட்டநேர முடிவில் 45.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்திருந்தது.
 4-ஆவது நாள் ஆட்டத்தை அந்த அணியின் சண்டிமல் 13, டிக்வெல்லா 14 ரன்களுடன் தொடங்கினர். இதில் 5 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்திருந்த டிக்வெல்லா, 52-ஆவது ஓவரில் ஆட்டமிழந்தார்.
 முகமது சமி வீசிய அந்த ஓவரில் டிக்வெல்லா அடித்த பந்து கோலியிடம் கேட்ச் ஆனது. அவரைத் தொடர்ந்து வந்த டாசன் சனகாவை டக் அவுட் ஆக்கினார் புவனேஸ்வர் குமார். பின்னர் தில்ருவன் பெரேரா களத்துக்கு வர, மறுமுனையில் 3 பவுண்டரிகள் உள்பட 28 ரன்களில் வீழ்ந்தார் கேப்டன் சண்டிமல்.
 பின்னர் ரங்கனா ஹெராத் களமிறங்க, பெரேரா 5 ரன்களில் வெளியேறினார். நிதானமாக ஆடிய ஹெராத் அரைசதம் கடந்து 9 பவுண்டரிகள் உள்பட 67 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். கடைசி விக்கெட்டாக சுரங்கா லக்மல் 16 ரன்களுக்கு வீழ்ந்தார். இவ்வாறாக இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 83.4 ஓவர்களில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. காமேஜ் ரன்கள் இன்றி ஆட்டமிழக்காமல் இருந்தார்.
 இந்தியத் தரப்பில் புவனேஸ்வர் குமார், முகமது சமி அதிகபட்சமாக தலா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினர். உமேஷ் யாதவ் இரு விக்கெட்டுகள் எடுத்தார்.
 இந்தியா-171/1: இதையடுத்து, முதல் இன்னிங்ஸில் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கியது இந்தியா. முந்தைய இன்னிங்ஸில் எதிர்பாராமல் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்த கே.எல்.ராகுல்-தவன் ஜோடி, இந்த இன்னிங்ஸில் சிறப்பாக ஆடியது.
 அரைசதத்தை கடந்த இந்த ஜோடி, முதல் விக்கெட்டுக்கு 166 ரன்கள் சேர்த்தது. எனினும், தவன் சதத்தை நெருங்கிய நிலையில் சனகா பந்துவீச்சில் டிக்வெல்லாவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 11 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் விளாசிய அவர் 94 ரன்களை எட்டியிருந்தார்.
 இவ்வாறாக 4-ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை ஆட்டநேர முடிவில் இந்தியா 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்துள்ளது. கே.எல்.ராகுல் 73, புஜாரா 2 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இந்தியா மொத்தமாக இலங்கையை விட 49 ரன்கள் முன்னிலையில் உள்ளது.

துளிகள்...
 2 ஒரு டெஸ்ட் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் இந்தியாவின் தொடக்க ஜோடி 100 ரன்களை எட்டுவது கடந்த 7 ஆண்டுகளில் இது 2-ஆவது முறையாகும். முன்னதாக, கடந்த 2010-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் இவ்வாறு நிகழ்ந்திருந்தது.
 3 சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் இந்தியாவின் வேகப்பந்துவீச்சாளர்கள் 10 விக்கெட் வீழ்த்துவது இது 3-ஆவது முறையாகும். இதுபோல முதலாவதாக 1981-82 காலகட்டத்தில் மும்பையில், இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில் விக்கெட் வீழ்த்தப்பட்டது. 2-ஆவதாக 1983-84 காலகட்டத்தில் ஆமதாபாதில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஆட்டத்தில் நிகழ்ந்தது.
 4 இலங்கையின் இன்னிங்ஸில் புவனேஸ்வர், சமி தலா 4 விக்கெட்டுகளும், உமேஷ் 2 விக்கெட்டுகளும் வீழ்த்தினர். சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டியின் ஒரே இன்னிங்ஸில் இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் மூவர் 2 அல்லது அதற்கு மேற்பட்ட விக்கெட்டுகள் எடுப்பது இது 4-ஆவது முறையாகும். முன்னதாக, இவ்வாறு கடந்த 1986-ஆம் ஆண்டு நிகழ்ந்திருந்தது.
 2010 இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட இலங்கை அதிக ரன்கள் ஸ்கோர் செய்தது. கடைசியாக இதுபோன்று கடந்த 2010-ஆம் ஆண்டு நிகழ்ந்தது. அதைத் தொடர்ந்து நடந்த 8 டெஸ்டுகளிலும் முதல் இன்னிங்ஸில் இந்தியாவே அதிக ரன்கள் ஸ்கோர் செய்திருந்தது.
 "டிஆர்எஸ்' சர்ச்சை
 இலங்கையின் முதல் இன்னிங்ஸில் முகமது சமி வீசிய 57-ஆவது ஓவரில் தில்ருவன் பெரேரா எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்ததாக முதலில் கள நடுவர் அறிவித்தார். இதையடுத்து களத்திலிருந்து வெளியேறத் தொடங்கிய பெரேரா, மீண்டும் களத்துக்கு திரும்பி (டிஆர்எஸ்) மேல்முறையீடு செய்தார் பெரேரா. இதனால், மேல்முறையீடு தொடர்பாக ஓய்வு அறையில் இருந்து அணியினரின் ஆலோசனையை அவர் பெற்றாரா என சர்ச்சை எழுந்தது. எனினும், அதுதொடர்பாக இலங்கை அணி வெளியிட்டுள்ள அறிக்கையில், "இலங்கைக்கான டிஆர்எஸ் வாய்ப்புகள் முடிந்துவிட்டதாகக் கருதியே பெரேரா பெவிலியன் நோக்கி திரும்பினார். இந்நிலையில், அதுதொடர்பாக ரங்கனா ஹெராத் கள நடுவரிடம் கேட்டபோது, அணிக்கு டிஆர்எஸ் வாய்ப்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்தே பெரேரா களத்துக்கு திரும்பி டிஆர்எஸ் கோரினார்' என்று கூறப்பட்டிருந்தது.
 
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com