கோலி அசத்தல்: முதல் டெஸ்ட் டிரா

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது.
கோலி அசத்தல்: முதல் டெஸ்ட் டிரா

இந்தியா-இலங்கை அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி டிராவில் முடிந்தது.
 முன்னதாக, இப்போட்டியில் தனது 2-ஆவது இன்னிங்ûஸ ஆடிய இந்திய அணி, கடைசி நாளான திங்கள்கிழமை 88.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன்களை எட்டி டிக்ளேர் செய்தது. கேப்டன் கோலி அபாரமாக ஆடி சதம் கடந்தார். அடுத்து ஆடிய இலங்கை அணி 26.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்ட நேரம் முடிவுக்கு வர, போட்டி டிரா ஆனது.
 கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையே வியாழக்கிழமை தொடங்கிய ஆட்டத்தில் டாஸ் வென்ற இலங்கை பந்துவீச தீர்மானித்தது. மழையால் பெரும்பாலும் பாதிக்கப்பட்ட முதல்நாள் ஆட்டத்தில் தடுமாற்றத்துடன் ஆடிய இந்தியா 11.5 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 17 ரன்கள் எடுத்தது.
 2-ஆவது நாளிலும் மோசமான வானிலை காரணமாக நண்பகலுடன் ஆட்டம் நிறுத்திக் கொள்ளப்பட்டது. அன்றைய தினம் இந்தியா 32.5 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 74 ரன்கள் எடுத்தது. 3-ஆவது நாளில் 59.3 ஓவர்களில் 172 ரன்களுக்கு ஆட்டமிழந்தது இந்தியா. இதில் புஜாரா மட்டும் அதிகபட்சமாக 52 ரன்கள் எடுத்தார். இலங்கை தரப்பில் சுரங்கா லக்மல் 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
 பின்னர் தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய இலங்கை, 3-ஆவது நாள் முடிவில் 45.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 165 ரன்கள் எடுத்தது. 4-ஆவது நாளில் அந்த அணி 83.4 ஓவர்களில் 294 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. ஹெராத் அதிகபட்சமாக 67, மேத்யூஸ் 52 ரன்கள் எடுத்தனர். இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார், முகமது சமி தலா 4 விக்கெட்டுகள் எடுத்தனர்.
 இதையடுத்து முதல் இன்னிங்ஸில் 122 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய இந்தியா, ஆட்டநேர முடிவில் 39.3 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்திருந்தது.
 கோலி அபாரம்: கடைசி நாளான திங்கள்கிழமை ஆட்டத்தை கே.எல்.ராகுல் 73, புஜாரா 2 ரன்களுடன் தொடங்கினர். இதில் ராகுல் 8 பவுண்டரிகளுடன் 79 ரன்களுக்கு ஆட்டமிழக்க, களம் கண்டார் கேப்டன் கோலி. அவர் நிதானமாகவும், அபாரமாகவும் ஆடி வந்த நிலையில் புஜாரா 22 ரன்களுக்கு பெவிலியன் திரும்பினார்.
 இதனிடையே கோலி சதமடிக்க, மறுமுனையில் ரஹானே ரன்கள் இன்றியும், அஸ்வின், ரித்திமான் சாஹா, புவனேஸ்வர் குமார் ஆகியோர் அடுத்தடுத்து ஒற்றை இலக்கத்திலும் வீழ்ந்தனர். 88.4 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 352 ரன்கள் எடுத்த நிலையில் டிக்ளேர் செய்தார் கோலி. அவர் 12 பவுண்டரிகள், 2 சிக்ஸர்கள் உள்பட 104, முகமது சமி 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.
 இதையடுத்து 231 ரன்களை இலக்காகக் கொண்டு தனது 2-ஆவது இன்னிங்ûஸ தொடங்கிய இலங்கையில் அதிகபட்சமாக டிக்வெல்லா மட்டும் 27 ரன்கள் எடுக்க, இதர வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். அந்த அணி 26.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 75 ரன்கள் எடுத்த நிலையில், ஆட்டநேரம் முடிவுக்கு வந்ததால், போட்டி டிரா ஆனது. சனகா 6, ஹெராத் ரன்கள் இன்றி களத்தில் இருந்தனர். இந்திய தரப்பில் புவனேஸ்வர் குமார் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார். அவரே ஆட்டநாயகனாகவும் அறிவிக்கப்பட்டார்.

கோலி "50'
 இந்த டெஸ்டின் 2-ஆவது இன்னிங்ஸில் சதம் அடித்ததன் மூலம், சர்வதேச போட்டிகளில் தனது 50-ஆவது சதத்தை பதிவு செய்துள்ளார் கோலி.
 டெஸ்ட் போட்டியை பொருத்த வரையில் இது அவரது 18-ஆவது சதமாகும்.
 இதையடுத்து சர்வதேச போட்டிகளில் அதிக சதமடித்த வீரர்கள் பட்டியலில் கோலி 8-ஆவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் சச்சின் (100) உள்ளார். அடுத்தடுத்த இடங்களில் ரிக்கி பாண்டிங் (71), குமார் சங்ககாரா (63), ஜேக்ஸ் காலிஸ் (62), ஹசிம் ஆம்லா (54), மஹிலா ஜெயவர்தனே (54), பிரையன் லாரா (53) ஆகியோர் உள்ளனர்.
 அதிக டெஸ்ட் சதமடித்த இந்திய வீரர்கள் வரிசையில் கோலி 6-ஆவது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் சச்சின் (51) இருக்க, அவரை ராகுல் திராவிட் (36), சுனில் காவஸ்கர் (34), வீரேந்திர சேவாக் (23), முகமது அஸாருதீன் (22) ஆகியோர் தொடருகின்றனர்.
 சர்வதேச கிரிக்கெட்டில் அதிவேகமாக 50-ஆவது சதத்தை பூர்த்தி செய்த வீரர்கள் வரிசையில் தென் ஆப்பிரிக்க வீரர் ஹசிம் ஆம்லாவுடன் இணைந்துள்ளார் கோலி. இருவருமே தங்களது 348-ஆவது இன்னிங்ஸில் இந்த சாதனையை புரிந்துள்ளனர். இந்த வரிசையில் சச்சின் (376), ரிக்கி பாண்டிங் (420), பிரையன் லாரா (465) ஆகியோர் அடுத்தடுத்து உள்ளனர்.
5 நாள்களும் பேட்டிங்: புஜாரா சாதனை
 இந்த டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 5 நாள்களிலும் இந்திய வீரர் சேதேஷ்வர் புஜாரா பேட் செய்தார். இந்தச் சாதனையை செய்யும் 3-ஆவது இந்திய வீரர் புஜாரா ஆவார். முன்னதாக, 1960-ஆம் ஆண்டில் ஜெய்சிம்ஹாவும், 1984-இல் ரவி சாஸ்திரியும் இதனைச் செய்திருந்தனர். அவர்களும் ஈடன் கார்டன் மைதானத்திலேயே இந்தச் சாதனையை புரிந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 சர்வதேச அளவில், இந்தச் சாதனையை எட்டிய வீரர்கள் வரிசையில் புஜாரா 9-ஆவது இடத்தில் உள்ளார். ஜெஃப்ரி பாய்காட் (இங்கிலாந்து), கிம் ஹியூஸ் (ஆஸ்திரேலியா), ஆலன் லேம்ப் (இங்கிலாந்து), அட்ரியான் கிரிஃபித் (மேற்கிந்தியத் தீவுகள்), ஆன்ட்ரு ஃப்ளின்டாஃப் (இங்கிலாந்து), அல்விரோ பீட்டர்சன் (தென் ஆப்பிரிக்கா) உள்ளிட்டோர் இதர வீரர்கள் ஆவர்.
துளிகள்...
 ஒரு டெஸ்ட் போட்டியின் ஒரு இன்னிங்ஸில் டக் அவுட் ஆகி, மற்றொரு இன்னிங்ஸில் சதத்தையும் பதிவு செய்துள்ள முதல் இந்திய கேப்டன் விராட் கோலி ஆவார்.
 ஒரு ஆண்டில் 9 சதங்களை பதிவு செய்த முதல் இந்திய கேப்டன் விராட் கோலி ஆவார். இந்த ஆண்டில் அவர் ஒருநாள் போட்டிகளில் 6 சதம், டெஸ்ட் போட்டிகளில் 3 சதத்தை பதிவு செய்துள்ளார்.
 ஈடன் கார்டனில் நடைபெற்றுள்ள 41 டெஸ்ட் போட்டிகளில் இந்தியா 12 வெற்றிகளையும், 9 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது. 20 போட்டிகள் டிரா ஆகியுள்ளன. இந்தியாவின் வேறு எந்த மைதானத்துக்கும் இத்தகைய "டிரா' வரலாறு இல்லை.
 இந்திய வேகப்பந்து வீச்சாளர்கள் ஒரு டெஸ்ட் போட்டியில் 18 விக்கெட் வீழ்த்தியது இது 3-ஆவது முறையாகும். முன்னதாக, 1996-97-இல் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிராகவும், அதே ஆண்டில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராகவும், 2001-இல் இலங்கைக்கு எதிராகவும் இவ்வாறு நிகழ்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com