வலுவான நிலையில் இந்தியா: விராட் கோலி புது சாதனை

இலங்கைக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய கேப்டன் விராட் கோலி சதம் விளாசி புது சாதனைப் படைத்தார்.
வலுவான நிலையில் இந்தியா: விராட் கோலி புது சாதனை

இந்தியா, இலங்கை அணிகளுக்கு இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் சங்க மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது.

இப்போட்டியில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இலங்கை அணி 205 ரன்களுக்கு ஆல்-அவுட்டானது. அதிகபட்சமாக கேப்டன் சண்டிமல் 57 ரன்கள் எடுத்தார். இந்திய தரப்பில் அஸ்வின் 4, இஷாந்த் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியின் துவக்க வீரர் ராகுல் 7 ரன்களுடன் பெவிலியன் திரும்பினார். இந்நிலையில், 3-ஆவது வரிசையில் இறங்கிய புஜாராவுடன் ஜோடி சேர்ந்த முரளி விஜய் சிறப்பாக ஆடி சதமடித்து 128 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இந்த ஜோடி 209 ரன்கள் சேர்த்தது.

பின்னர் புஜாராவுடன் இணைந்த கேப்டன் விராட் கோலி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி சதம் விளாசினார். மறுமுனையில் நங்கூரமாய் நின்ற புஜாரா 143 ரன்கள் எடுத்தபோது தனது விக்கெட்டை பறிகொடுத்தார்.

சிறப்பாக ஆடி வரும் கோலி 123 ரன்களுடனும், ரஹானே ரன் கணக்கை துவங்காமலும் களத்தில் உள்ளனர். இந்திய அணி 3-ஆம் நாள் உணவு இடைவேளை வரை 3 விக்கெட்டுகளை இழந்து 404 ரன்கள் குவித்து 199 ரன்கள் முன்னிலைப் பெற்று வலுவான நிலையில் உள்ளது.

சாதனைத் துளிகள்:

இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி, 19-ஆவது சதத்தை பதிவு செய்தார். 

அதுமட்டுமல்லாமல் நடப்பு ஆண்டில் மட்டும் 10 சதங்களை விளாசியுள்ளார். இதன்மூலம் ஒரு வருடத்தில் அதிக சதங்கள் விளாசிய கேப்டன்கள் வரிசையில் ஆஸ்திரேலியாவின் ரிக்கி பாண்டிங் சாதனையை முறியடித்தார்.

ரிக்கி பாண்டிங், தனது கிரிக்கெட் வாழ்க்கையில் ஒரே ஆண்டில் 9 சதங்களை இரு முறைப் பதிவு செய்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும், இந்திய மண்ணில் அதிவேகமாக 3,000 ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன் என்ற புதிய சாதனையைப் படைத்தார் புஜாரா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com