தென்னிந்திய விளையாட்டுப் போட்டி: தமிழக கல்வி நிறுவனங்கள் வெற்றி

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழக கல்லூரி, பல்கலைக்கழக அணிகள் வெற்றி பெற்றுள்ளன.

கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற தென்னிந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகளில் தமிழக கல்லூரி, பல்கலைக்கழக அணிகள் வெற்றி பெற்றுள்ளன.
கோவை காருண்யா பல்கலைக்கழகத்தில் 25-ஆவது இவாஞ்சலின் நினைவு, தென்னிந்திய அளவிலான விளையாட்டுப் போட்டிகள் கடந்த 26-ஆம் தேதி தொடங்கின. ஆடவர் பிரிவில் வாலிபால், கால்பந்து, கூடைப்பந்து, கபடி, ஹாக்கி போட்டிகளும், மகளிர் பிரிவில் வாலிபால், கூடைப்பந்து, கபடி போட்டிகளும் நடைபெற்றன.
இந்தப் போட்டிகளில் தமிழகம், கேரளம், ஆந்திரம், கர்நாடகம், புதுவையைச் சேர்ந்த சுமார் 150 கல்லூரி, பல்கலைக்கழகங்களின் 345 அணிகள் பங்கேற்ற நிலையில், இறுதிப் போட்டிகள் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 29) நடைபெற்றன.
இதில், ஆடவர் கால்பந்துப் போட்டியில் கேரளத்தின் மலப்புரம் எஸ்.எஸ். கல்லூரி முதலிடத்தையும், காருண்யா பல்கலைக்கழகம் 2-ஆவது இடத்தையும் பிடித்தன. கேரளத்தின் மஞ்சேரி என்.எஸ்.எஸ். கல்லூரி 3-ஆவது இடம் பிடித்தது.
ஆடவர் கூடைப்பந்துப் போட்டியில் கோட்டயம் பெர்க்மென்ஸ் கல்லூரி முதலிடத்தையும், திருச்சூர் ஸ்ரீ கேரள வர்மா கல்லூரி 2-ஆவது இடத்தையும் பிடித்தன. சென்னை சத்யபாமா பல்கலைக்கழகம் 3-ஆவது இடம் பிடித்தது.
மகளிர் கூடைப்பந்துப் போட்டியில் கோவை பி.எஸ்.ஜி.ஆர். கிருஷ்ணம்மாள் கல்லூரி முதலிடத்தையும், திருச்சூர் புனித ஜோசப் கல்லூரி 2-ஆவது இடத்தையும், கேரளத்தின் பிராவிடன்ஸ் கல்லூரி3-ஆவது இடம் பிடித்தது.
ஆடவர் வாலிபால் போட்டியில் சத்யபாமா கல்லூரி முதலிடத்தையும், டாக்டர் என்.ஜி.பி. கல்லூரி 2-ஆவது இடத்தையும், சென்னை மாநிலக் கல்லூரி3-ஆவது இடம் பிடித்தன. 
மகளிர் வாலிபால் போட்டியில் கோபிசெட்டிப்பாளையம் பி.கே.ஆர். கலை, அறிவியல் கல்லூரி முதலிடத்தையும், கிருஷ்ணம்மாள் கல்லூரி 2-ஆவது இடத்தையும் பிடித்தன. அண்ணாமலைப் பல்கலைக்கழகம்3-ஆவது இடம் பிடித்தது.
ஹாக்கியில் சென்னை எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் முதலிடத்தையும், காருண்யா இரண்டாவது இடத்தையும் பிடித்தன. ஓசூர் அதியமான் கல்லூரி3-ஆவது இடம் பிடித்தது.
ஆடவர் கபடியில் அண்ணாமலை பல்கலைக்கழகம் முதலிடத்தையும், வேல்ஸ் பல்கலைக்கழகம் 2-ஆவது இடத்தையும், காருண்யா, வேல்டெக் ஆகியவை 3, 4-ஆவது இடங்களையும் பிடித்தன.
மகளிர் கபடியில் சேலம் ஏ.வி.எஸ். கல்லூரி முதலிடம் பிடித்தது. மதுரை அமெரிக்கன் கல்லூரி 2-ஆவது இடத்தையும், கோவை ரத்தினம் கல்லூரி, சங்கரா கல்லூரி ஆகியவை முறையே 3, 4-ஆவது இடங்களையும் பிடித்தன.
வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழாவில் பல்கலைக்கழக வேந்தர் பால் தினகரன், கேரள மாநில முன்னாள் டி.ஜி.பி. ஜேக்கப் தாமஸ், பல்கலைக்கழகத் துணைவேந்தர் இ.ஜே.ஜேம்ஸ், ஸ்டெல்லா தினகரன், இவாஞ்சலின் பால் தினகரன், அறங்காவலர் ஜெயக்குமார் டேனியல், உடற்பயிற்சி இயக்குநர் காலேப் ராஜன் ஆகியோர் விழாவில் கலந்து கொண்டனர்.
விழாவில், 25 ஆண்டுகளாக நடுவர்களாகப் பணியாற்றி வரும் கோவை மாவட்ட கால்பந்து கழக துணைச் செயலரும், தேசிய நடுவருமான டி.கிருஷ்ணமூர்த்தி, அப்துல் ஹக் ஆகியோருக்கு வேந்தர் பால் தினகரன் தங்க நாணயம் வழங்கி கெளரவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com