புரோ கபடி: புணேவுக்கு 11-ஆவது வெற்றி

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 102-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டான் 34-33 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி.யோதா அணியை தோற்கடித்தது.இதன்மூலம் புணே அணி 11-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது.
புள்ளியைக் கைப்பற்ற ரைடு செல்லும் புணே வீரர்.
புள்ளியைக் கைப்பற்ற ரைடு செல்லும் புணே வீரர்.

5-ஆவது சீசன் புரோ கபடி லீக் போட்டியின் 102-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டான் 34-33 என்ற புள்ளிகள் கணக்கில் யு.பி.யோதா அணியை தோற்கடித்தது.
இதன்மூலம் புணே அணி 11-ஆவது வெற்றியைப் பெற்றுள்ளது. அதேநேரத்தில் யு.பி.யோதாவுக்கு இது 7-ஆவது தோல்வியாகும்.
சென்னையில் சனிக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தின் ஆரம்பத்தில் இரு அணிகளும் நிதானம் காட்ட, முதல் 5 நிமிடங்களில் புணேரி பால்டான் 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. 6-ஆவது நிமிடத்தில் வாழ்வா, சாவா ரைடு சென்ற புணேரி பால்டான் கேப்டன் தீபக் ஹூடா, சூப்பர் ரைடு மூலம் 3 புள்ளிகளை தட்டி வர, அந்த அணி 5-2 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. அதற்குப் பதிலடியாக 8-ஆவது நிமிடத்தில் யு.பி.யோதா வீரர் ரிஷாங்க் 8-ஆவது நிமிடத்தில் சூப்பர் ரைடு மூலம் 3 புள்ளிகளைக் கைப்பற்ற, ஸ்கோர் சமநிலையை (5-5) எட்டியது.
அதைத் தொடர்ந்து 10-ஆவது நிமிடத்தில் தீபக் ஹூடா இரண்டாவது முறையாக சூப்பர் ரைடு மூலம் 3 புள்ளிகளைக் கைப்பற்ற, புணே 9-5 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. இதன்பிறகு சூப்பர் டேக்கிள் மூலம் புணே வீரர் சந்தீப் நர்வாலை வீழ்த்திய யு.பி.யோதா அணி, சரிவிலிருந்து மீள ஆரம்பித்தது. 13-ஆவது நிமிடத்தில் புணே வீரர் ராஜேஷ் மான்டலை வீழ்த்திய யு.பி.யோதா அணி, ஸ்கோரை சமன் (9-9) செய்தது.
இதன்பிறகு 14-ஆவது நிமிடத்தில் வாழ்வா, சாவா ரைடு சென்ற யு.பி.யோதா வீரர் ரிஷாங்க், புணே வீரர்களிடம் சிக்கினார். 19-ஆவது நிமிடத்தில் புணே வீரர் மானு தனது ரைடின் மூலம் இரு புள்ளிகளைக் கைப்பற்ற, அந்த அணி 15-12 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது. 20-ஆவது நிமிடத்தில் யு.பி.யோதா ஆல்அவுட்டாக, முதல் பாதி ஆட்டநேர முடிவில் புணே அணி 18-14 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது.
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் ஆரம்பத்தில் வாழ்வா, சாவா ரைடு சென்ற தீபக் ஹூடா, 4 புள்ளிகளைக் கைப்பற்றினார். 
இதன்மூலம் இந்த ஆட்டத்தில் மூன்றாவது முறையாக சூப்பர் ரைடு சாதனை படைத்த தீபக் ஹூடா, சூப்பர்-10 (ஓர் ஆட்டத்தில் 10 புள்ளிகள் பெறுவது) அந்தஸ்தையும் பெற்றார். 
புணே அணி தொடர்ந்து அபாரமாக ஆட, 26-ஆவது நிமிடத்தில் இரண்டாவது முறையாக ஆல் அவுட்டானது யு.பி.யோதா. இதனால் புணே அணி 28-17 என்ற கணக்கில் வலுவான முன்னிலையை எட்டியது. இதனால் அந்த அணி அபார வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. 
ஆனால் இதன்பிறகு அசத்தலாக ஆடிய யு.பி.யோதா ஒவ்வொரு புள்ளியாகக் கைப்பற்றிய அதேவேளையில், புணேவின் ரைடர்களை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது. இதனால் 33-ஆவது நிமிடத்தில் புணே ஆல் அவுட்டானது. 
தொடர்ந்து ஆதிக்கம் செலுத்திய யு.பி.யோதா அணி 38-ஆவது நிமிடத்தில் ஸ்கோரை சமன் (32-32) செய்தது. ரிஷாங்கின் ரைடின் மூலம் 33-32 என்ற கணக்கில் முன்னிலை பெற்றது யு.பி.யோதா. இதன்பிறகு மாற்று வீரர் சுரேஷ் குமாரின் ரைடு மூலம் ஸ்கோரை சமன் (33-33) செய்த புணே அணி, கடைசி நிமிடத்தில் ரைடு வந்த யு.பி.யோதா கேப்டன் நிதின் தோமரை வீழ்த்தி 34-33 என்ற கணக்கில் த்ரில் வெற்றி கண்டது.
புணே தரப்பில் அதன் கேப்டன் தீபக் ஹூடா 18 ரைடுகளில் 16 புள்ளிகளைக் கைப்பற்றி, அந்த அணியின் வெற்றிக்கு உதவினார். யு.பி.யோதா தரப்பில் 14 முறை ரைடு சென்ற ரிஷாங்க் 9 புள்ளிகளைக் கைப்பற்றினார். 
அந்த அணியின் பின்கள வீரரான சாகர் கிருஷ்ணா தனக்கு கிடைத்த 7 டேக்கிள் வாய்ப்புகளில் 6-ஐ வெற்றிகரமாக முடித்து 6 புள்ளிகளைப் பெற்று தந்தார்.
ஜெய்ப்பூர் வெற்றி: இதனிடையே, தமிழ் தலைவாஸ்-ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் மோதிய மற்றொரு ஆட்டத்தில் ஜெய்ப்பூர் அணி 27-26 என்ற புள்ளிகள் கணக்கில் தமிழ் தலைவாஸ் அணியை வென்றது.

இன்றைய ஆட்டங்கள்

ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-
பெங்கால் வாரியர்ஸ்
நேரம்: இரவு 8
தமிழ் தலைவாஸ்-யு மும்பா
நேரம்-இரவு 9
இடம்: சென்னை
நேரடி ஒளிபரப்பு:
ஸ்டார் ஸ்போர்ட்ஸ்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com