ஆஸி., வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடாதது ஏன்? சேவாக் அதிரடி விளக்கம்!

இந்தியாவுக்கு எதிரான கிரிக்கெட் தொடரின் போது ஆஸ்திரேலியா வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடாத காரணம்.....
ஆஸி., வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் ஈடுபடாதது ஏன்? சேவாக் அதிரடி விளக்கம்!

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் தற்போது நடந்து முடிந்தது. இதில், 4-1 என்ற கணக்கில் இந்திய அணி வென்று தொடரைக் கைப்பற்றி அசத்தியது.

வழக்கமாக எந்த ஒரு அணியுடனான கிரிக்கெட் தொடராக இருந்தாலும் ஆஸ்திரேலிய அணி வீரர்கள் ஸ்லெட்ஜிங்கில் (எதிரணி வீரர்களுடன் வாய்த்தகராறில் ஈடுபடுவது) வழக்கம்.

இதன்மூலம் எதிரணி வீரர்களின் கவனத்தை திசை திருப்பி அவர்களை எளிதில் வீழ்த்தி விடலாம் என்பது அவர்களது விளக்கம். மேலும், இந்த யுக்தியை கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அவர்கள் கையாண்டு வருகின்றனர்.

ஆனால், இதனையும் மீறி சில வீரர்கள் (குறிப்பாக சச்சின் டெண்டுல்கர்) அதனை பெரிதாக எடுத்துக் கொண்டு பதிலுக்கு வாய்த்தகராறில் ஈடுபடுவதை விடுத்து தங்கள் ஆட்டத்தால் பதிலடி தருவர். 

கிரிக்கெட் அரங்கில் அனைவரும் இந்தியா-பாகிஸ்தான் ஆட்டங்களே இதுபோன்று இருக்கும் என்று கூறுவர். உண்மையில் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் போது இந்த ஸ்லெட்ஜிங் உச்சகட்டத்தைத் தொடும். கவாஸ்கர் காலம் முதல் கோலி காலம் வரை இவ்வாறு தான் இருந்தது.

குறிப்பாக விராட் கோலிக்கும் ஆஸ்திரேலிய அணிக்கும் இந்த ஸ்லெட்ஜிங்கில் ஏழாம் பொருத்தம் தான். எந்த போட்டித்தொடராக இருந்தாலும் ஆஸ்திரேலியா கோலியை சீண்டாமல் இருந்ததில்லை. 

அப்படி இருக்கையில் இம்முறையோ காட்சி வேறானது. தொடர் தோல்விகளுக்கு மத்தியிலும் ஆஸ்திரேலியா அமைதியாக விளையாடியது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

இந்நிலையில், ஆஸ்திரேலியாவின் இந்த அமைதி முறை ஆட்டம் குறித்த ரகசியத்தை சமீபத்தில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரர் விரேந்திர சேவாக், தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அளித்த பேட்டியின் போது உடைத்தார்.

அதில், அவர் பேசியதாவது:

அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள ஐபிஎல் தொடரை நினைத்து ஆஸ்திரேலிய வீரர்கள் இப்போதே கலக்கத்தில் உள்ளனர். அதில் நன்றாக விளையாட வேண்டும் என்பதால் அல்ல, இந்திய வீரர்களுடன் நட்பு பாராட்டாமல் இருந்தால் எங்கே அதிக தொகைக்கு போணியாகாமல் இருந்து விடுவோமா என்ற அச்சம் தான்.

அப்படி ஸ்லெட்ஜிங்கில் ஈடுபட்டு இந்திய வீரர்களை பகைத்துக் கொண்டால் ஐபிஎல் போட்டிகளில் அவர்களுடன் இணைந்து விளையாடுவது கடினமாக இருக்கும் என்பது தான் அவர்களது கனிப்பாக இருக்கும்.

முன்பெல்லாம் ஆஸ்திரேலிய அணி என்றால் அதில் எல்லோரும் நன்கு விளையாடுவார்கள். ஒருவர் சொதப்பினாலும் அடுத்தவர் கை கொடுப்பார். ஆனால் இன்று நிலைமை வேறு. ஸ்டீவன் ஸ்மித், டேவிட் வார்னர் போன்ற மிக குறைவான எண்ணிகையிலேயே சிறந்த வீரர்கள் திகழ்கின்றனர்.

மேலும், அவர்களின் அடுத்த தலைமுறை அணிக்கு போதிய அனுபவம் இல்லை. இதுவே அவர்களின் இந்த சரிவுக்கு காரணமாக இருக்கலாம் என்றார்.

எந்த விவகாரத்திலும் எதற்கும் அஞ்சாமல் மனதில் பட்டதை வெளிப்படுத்துவதில், தனது பேட்டிங்கைப் போன்றே வீரேந்திர சேவாக்கின் விமர்சனங்களும் அதிரடியாக அமையும் என்பது அனைவரும் அறிந்ததுதான்.

தற்போது சேவாக்கின் இந்த கிண்டலுக்கு அடுத்து நடைபெறவுள்ள 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி பதிலடி கொடுக்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com