ரஞ்சிப் போட்டி: முதல் இன்னிங்ஸில் ஆந்திரம் 55 ரன்கள் முன்னிலை!

ஆந்திர அணி 2-ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது...
ரஞ்சிப் போட்டி: முதல் இன்னிங்ஸில் ஆந்திரம் 55 ரன்கள் முன்னிலை!

தமிழக அணிக்கு எதிரான ரஞ்சி கிரிக்கெட் போட்டியில் ஆந்திர அணி 2-ம் நாள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் அந்த அணி 3 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 55 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. 

சென்னையில் வெள்ளிக்கிழமை தொடங்கிய இந்த ஆட்டத்தில் தமிழக அணியில் முரளி விஜய், அஸ்வின் ஆகியோர் இடம்பெற்றனர். டாஸ் வென்ற தமிழக கேப்டன் அபிநவ் முகுந்த் பேட்டிங்கை தேர்வு செய்தார். இதையடுத்து பேட் செய்த தமிழக அணி  85 ஓவர்களில் 176 ரன்களுக்கு சுருண்டது. பின்னர் முதல் இன்னிங்ஸை ஆடிய ஆந்திர அணி, முதல் நாள் ஆட்டநேர முடிவில் 3 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 8 ரன்கள் எடுத்தது. கே.எஸ்.பாரத் 7, பிரசாந்த் 1 ரன்களுடன் களத்தில் இருந்தார்கள். 

இந்நிலையில் இன்றைய ஆட்டத்தில் தமிழகப் பந்துவீச்சாளர்கள் ஆந்திரா அணிக்குத் தொடர்ந்து நெருக்கடி கொடுத்தாலும் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெறுவதைத் தடுக்கமுடியாமல் போனது. அஸ்வின், கே விக்னேஷ், எல் விக்னேஷ் ஆகிய மூன்று பேரின் அபாரமான பந்துவீச்சால் 64 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது ஆந்திரா அணி. அதன்பிறகு ஜோடி சேர்ந்த சுமந்த் - அஸ்வின் ஹெப்பர் ஆகிய இருவரும் மிகச்சிறப்பாக விளையாடி அணியை பெரிய சிக்கலில் இருந்து மீட்டார்கள். அஸ்வின் ஹெப்பர் 64 ரன்களில் கே விக்னேஷ் பந்துவீச்சில் வீழ்ந்தார். 

2-ம் நாளின் முடிவில் ஆந்திர அணி 7 விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்துள்ளது. இதனால் அந்த அணி 3 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் முதல் இன்னிங்ஸில் 55 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது. சுமந்த் 72, சோயிப் முகமது 14 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com