யு-17 உலகக் கோப்பை: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற இந்திய அணிக்கு வாய்ப்புண்டா?

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி ஒன்றில் முதல்முறையாக விளையாடும் இந்திய அணி நாக்-அவுட் சுற்றுகளுக்குத் தகுதி பெறுமா...
யு-17 உலகக் கோப்பை: காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற இந்திய அணிக்கு வாய்ப்புண்டா?

உலகக் கோப்பைக் கால்பந்து போட்டி ஒன்றில் முதல்முறையாக விளையாடும் இந்திய அணி நாக்-அவுட் சுற்றுகளுக்குத் தகுதி பெறுமா என்கிற கேள்வி இந்திய ரசிகர்களிடையே எழுந்துள்ளது. 

இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 0-3 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவிடம் தோல்வி கண்டது. இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்திய அமெரிக்காவுக்கு 30-வது நிமிடத்தில் பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் சார்ஜென்ட் கோலடித்தார். அதைத் தொடர்ந்து 51-ஆவது நிமிடத்தில் டர்கினும், 84-ஆவது நிமிடத்தில் கார்ல்டானும் கோலடிக்க, அமெரிக்கா 3-0 என்ற கோல் கணக்கில் இந்தியாவை தோற்கடித்தது. முதல் முறையாக உலகக் கோப்பையில் விளையாடும் இந்திய அணி, முதல் ஆட்டத்திலேயே படுதோல்வி கண்டது இந்திய ரசிகர்களுக்கு ஏமாற்றமாக அமைந்தது.

கொலம்பியாவிடம் இந்திய அணி போராடித் தோற்றது. தில்லியில் நடைபெற்ற ஆட்டத்தில் இந்தியா 1-2 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவிடம் தோற்றது. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முதல் பாதியில் கோல் எதுவும் விழவில்லை. பின்னர் நடைபெற்ற 2-வது பாதி ஆட்டத்தின் தொடக்கத்திலேயே (அதாவது 49-வது நிமிடத்தில்) கொலம்பிய வீரர் பீனாலோஸா கோலடிக்க, அந்த அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. இதையடுத்து போராடிய இந்திய அணி 82-வது நிமிடத்தில் ஸ்கோரை சமன் செய்தது. இந்த கோலை ஜேக்சன் அடித்தார். இதனால் ஆட்டம் டிராவில் முடியும் என இந்திய ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அடுத்த நிமிடத்திலேயே பீனாலோஸா கோலடிக்க, கொலம்பியாவின் வெற்றி உறுதியானது. இறுதியில் கொலம்பியா 2-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.

மொத்தமுள்ள 6 குருப்புகளில் இருந்து முதலிரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெறும். 16 இடங்களில் 12 இடங்கள் இவ்வாறு தேர்வு செய்யப்படும். மீதமுள்ள 4 இடங்கள், அனைத்து குரூப்புகளிலும் மூன்றாவது இடங்களைப் பிடித்த அணிகளில் இருந்து தேர்வு செய்யப்படும். 

குரூப் ஏ பிரிவில் இந்திய அணி புள்ளிகள் எதுவுமின்றிக் கடைசி இடத்தில் உள்ளது. இறுதி ஆட்டத்தில் கானாவை எதிர்கொள்கிறது. 

கடைசி ஆட்டத்தில் இந்திய அணி, கானாவை 3-0 என தோற்கடிக்க வேண்டும். மேலும் கொலம்பியாவைக் கடைசி ஆட்டத்தில் அதிக கோல் வித்தியாசத்தில் அமெரிக்கா தோற்கடிக்கவேண்டும். இதையடுத்து இதே பிரிவில் கோல்கள் வித்தியாசத்தில் இந்திய அணி 2-ம் இடம் பிடித்து காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளது.

அதேசமயம் 3-வது இடம் பிடித்த நான்கு அணிகளும் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குத் தகுதி பெறமுடியும். இதனால் மற்ற அணிகளின் வெற்றி - தோல்விகள் இந்திய அணிக்குச் சாதமாக அமையவேண்டும். எனில் இந்திய அணியால் 3-ம் இடம் பிடித்தாலும் நான்கு இடங்களுக்குள் வந்துவிட்டால், அதன் அடிப்படையிலும் நாக் அவுட் சுற்றுக்குத் தகுதி பெற வாய்ப்புள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com