சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அளிக்கும் நெருக்கடிகள்: மிதாலி ராஜ் அழுத்தமான பதில்!

எந்நேரமும் கிரிக்கெட் போட்டிக்கான உடைகளை மட்டுமே அணிந்திருக்க முடியாது. ஆடுகளத்தைத் தாண்டிய ஒரு வாழ்க்கை...
சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அளிக்கும் நெருக்கடிகள்: மிதாலி ராஜ் அழுத்தமான பதில்!

சமூகவலைத்தளங்களில் பிரபலங்கள் நிறைய தொல்லைகளைச் சந்திக்க நேரிடும். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் மிதாலி ராஜும் இதற்கு விதிவிலக்கல்ல.

சமூகவலைத்தளங்களில் வெளிப்படும் கேலி, கிண்டல், விமரிசனங்களை மிதாலி ராஜ் எவ்வாறு எடுத்துக்கொள்கிறார்? ஒரு பேட்டியில் அவர் கூறியதாவது:     

மக்களுக்கு நிறைய நேரம் இருக்கிறது என நினைக்கிறேன். அதனால் தான் சமூகவலைத்தளங்களில் பிரபலங்களை இதுபோல கிண்டல் செய்ய முடிகிறது. பிரபலங்களின் எதிர்மறை விஷயங்களை மட்டும் வெளிப்படுத்தி விமரிசனம் செய்கிறார்கள். அதுபோன்ற தருணங்களில் என்னை ஆதரிப்பவர்களுக்கு நன்றி. சமூகவலைத்தளங்களில் பெண்களுக்கு இதுபோல தொல்லைகள் நேரும்போது அவர்கள் மனம் உடைந்துபோகக் கூடாது. 

சமூகவலைத்தளங்கள் வழியாக எல்லோரும் பிரபலங்களை அணுகமுடியும். எல்லோருக்கும் அவரவர் உணர்வுகளை வெளிப்படுத்த உரிமையுண்டு. ஆனால் ஒன்றை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். அவர்களுக்கு எங்களை விமரிசனம் செய்ய எந்தளவுக்கு உரிமை உள்ளதோ அதேபோல என்ன பதிவு எழுதவேண்டும், என்னென்ன புகைப்படங்களை வெளியிட வேண்டும் என்கிற உரிமைகளும் எங்களுக்கு உண்டு. அது பிடிக்கவில்லையென்றால் சமூகவலைத்தளங்களில் எங்களைப் பின்தொடரவேண்டாம்.

நான் விளையாட்டு வீராங்கனை என்பதற்காக எந்நேரமும் கிரிக்கெட் போட்டிக்கான உடைகளை மட்டுமே அணிந்திருக்கமுடியாது. ஆடுகளத்தைத் தாண்டிய ஒரு வாழ்க்கை எங்களுக்கு உண்டு. இயல்பான வாழ்க்கையை வாழ எங்களுக்கு உரிமை உண்டு. அதை மக்கள் ஏற்றுக்கொள்ளவேண்டும். 

யாரை நீங்கள் தாக்கி எழுதுகிறீர்களோ சம்பந்தப்பட்ட நபரின் குடும்பத்தினரை அது பாதிக்கக் கூடாது. எனக்கு இதெல்லாம் ஒரு பெரிய விஷயமில்லை. வாழ்க்கையில் இதைவிடவும் பெரிய சவால்களைச் சந்தித்துள்ளேன். அதனால் சமூகவலைத்தளங்களில் வெளிப்படும் கேலிகள் என்னைப் பாதிக்காது. சிரித்தபடி அவற்றைக் கடந்துவிடுவேன். ஆனால் இதே உணர்வுகள் என் பெற்றோர்களுக்கு இருக்காது. அவர்கள் சாதாரண குடும்பத்தில் இருந்து வந்தவர்கள். அவர்களுக்கு இவை எல்லாம் அதிர்ச்சியாக இருக்கும் என்றார். 

அதேசமயம், சமூகவலைத்தளங்கள் பெண்கள் கிரிக்கெட் வளர்ச்சிக்கு மிகவும் உதவுகின்றன. உலகக் கோப்பைப் போட்டி சமயத்தில் மகளிர் கிரிக்கெட் குறித்து ஏராளமான கட்டுரைகள் எழுதப்பட்டன. ட்விட்டரில் என்னுடைய ஃபாலோயர்கள் எண்ணிக்கையும் அதிகமானது என்று அவர் கூறியுள்ளார். 

மிதாலி ராஜ், மகளிர் ஒரு நாள் கிரிக்கெட்டில் 6,000 ரன்கள் குவித்த முதல் வீராங்கனை என்ற உலக சாதனையைப் படைத்துள்ளார். இதுவரை 186 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ள 35 வயதான மிதாலி ராஜ் 6,190 ரன்கள் குவித்துள்ளார். 1999-இல் அறிமுகப் போட்டியில் களமிறங்கியபோதே, அதில் சதமடித்து தனது திறமையை உலகுக்குக் காட்டியவர் மிதாலி ராஜ். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் அதிக அரை சதங்கள் விளாசியவர் என்ற சாதனையும் மிதாலி ராஜ் வசமேயுள்ளது.

கடந்த ஜூலை மாதம், மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் 9 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தி 4-வது முறையாகக் கோப்பையைக் கைப்பற்றியது இங்கிலாந்து. அதேநேரத்தில் இரண்டாவது முறையாக உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தில் விளையாடிய மிதாலி ராஜ் தலைமையிலான இந்திய அணி, முதல்முறையாக கோப்பையைக் கைப்பற்றி வரலாறு படைக்கும் வாய்ப்பை நழுவவிட்டது. மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் மிதாலி ராஜ் 409 ரன்கள் குவித்தார். ஐசிசி மகளிர் கனவு அணியின் கேப்டனாக அவர் தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com