யு-17 உலகக் கோப்பை கால்பந்து: காலிறுதிக்கு முந்தைய சுற்றில் மாலி

17 வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மாலி அணி 3-1 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்து அணியைத் தோற்கடித்தது. 

17 வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் மாலி அணி 3-1 என்ற கோல் கணக்கில் நியூஸிலாந்து அணியைத் தோற்கடித்தது. 
இதன்மூலம் 2-ஆவது வெற்றியைப் பெற்ற மாலி அணி, 6 புள்ளிகளுடன் "பி' பிரிவில் 2-ஆவது இடத்தைப் பிடித்ததோடு, நாக் அவுட் சுற்றான காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கும் தகுதி பெற்றது.
தில்லியில் வியாழக்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் அபாரமாக ஆடிய மாலி அணி 18-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இந்த கோலை 25 யார்டு தூரத்தில் இருந்து சாலம் ஜிடோவ் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் மாலி அணி 1-0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது. 
பின்னர் நடைபெற்ற 2-ஆவது பாதி ஆட்டத்தின் 50-ஆவது நிமிடத்தில் ஜெமூசா கோலடிக்க, மாலி அணி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. மறுமுனையில் போராடிய நியூஸிலாந்து அணி 72-ஆவது நிமிடத்தில் சார்லஸ் மூலம் கோலடித்தது. அதற்குப் பதிலடியாக 82-ஆவது நிமிடத்தில் மாலி வீரர் லஸானா டியே கோலடித்தார். இறுதியில் மாலி அணி 3-1 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டது.
பராகுவே முதலிடம்: நவி மும்பையில் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் பராகுவே அணி 3-1 என்ற கோல் கணக்கில் துருக்கியை தோற்கடித்தது. பராகுவே தரப்பில் ஜியோவானி 41-ஆவது நிமிடத்திலும், பெர்னாண்டோ கார்டோஸா 43-ஆவது நிமிடத்திலும், கேல்யானோ 61-ஆவது நிமிடத்திலும் கோலடித்தனர். மறுமுனையில் திணறிய துருக்கி அணி, "இஞ்சுரி' நேரத்தில் கோலடித்தது. இந்த கோலை கெரீம் அடித்தார். 
துருக்கியை வீழ்த்தியதன் மூலம் 3-ஆவது வெற்றியைப் பெற்ற பராகுவே அணி 9 புள்ளிகளுடன் "பி' பிரிவில் முதலிடத்தைப் பிடித்தது. இதே பிரிவில் மாலி அணி 6 புள்ளிகளுடன் 2-ஆவது இடத்தைப் பிடித்தது. நியூஸிலாந்து, துருக்கி அணிகள் தலா ஒரு புள்ளியை மட்டுமே பெற்றன. இதனால் அந்த இரு அணிகளும் அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறின. 


இந்தியா வெளியேற்றம்

தில்லியில் நடைபெற்ற 2-ஆவது ஆட்டத்தில் இந்திய அணி 0-4 என்ற புள்ளிகள் கணக்கில் கானா அணியிடம் படுதோல்வி கண்டது. 
இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே அபாரமாக ஆடிய கானா அணியில் எரிக் 43 மற்றும் 52-ஆவது நிமிடங்களில் கோடித்தார். அதைத் தொடர்ந்து 86 மற்றும் 87-ஆவது நிமிடங்களில் முறையே டான்úஸா, டோகு ஆகியோர் கோலடிக்க, கானா 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது. 
இந்தத் தொடரில் விளையாடிய 3 ஆட்டங்களிலும் தோற்ற இந்திய அணி, அடுத்த சுற்று வாய்ப்பை இழந்து போட்டியிலிருந்து வெளியேறியது. 
நவி மும்பையில் மற்றொரு ஆட்டத்தில் கொலம்பியா 3-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை தோற்கடித்தது. இதன்மூலம் அடுத்த சுற்று வாய்ப்பை தக்கவைத்துக் கொண்டது கொலம்பியா.
"ஏ' பிரிவில் கானா முதலிடத்தையும், அமெரிக்கா 2-ஆவது இடத்தையும் பிடித்தன. இவ்விரு அணிகளும் தலா 6 புள்ளிகளைப் பெற்றபோதிலும், கோல் வித்தியாச அடிப்படையில் கானாவுக்கு முதலிடம் கிடைத்தது. கொலம்பியா 3-ஆவது இடத்தைப் பிடித்தது. இந்தியா புள்ளி ஏதுமின்றி கடைசி இடத்தைப் பிடித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com