ஆசிய கோப்பை ஹாக்கி இந்திய மகளிர் அணிக்கு ராணி ராம்பால் கேப்டன்

ஒன்பதாவது ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய மகளிர் அணிக்கு ராணி ராம்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 
ஆசிய கோப்பை ஹாக்கி இந்திய மகளிர் அணிக்கு ராணி ராம்பால் கேப்டன்

ஒன்பதாவது ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டியில் பங்கேற்கும் 18 பேர் கொண்ட இந்திய மகளிர் அணிக்கு ராணி ராம்பால் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். 
ஆசிய கோப்பை ஹாக்கிப் போட்டி வரும் 28-ஆம் தேதி ஜப்பானின் ககாமிகாரா நகரில் தொடங்குகிறது. 
ஐரோப்பிய ஹாக்கித் தொடரில் விளையாடிய இந்திய அணியோடு ஒப்பிடுகையில், இப்போது 5 மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. மூத்த பின்கள வீராங்கனையான சுஷீலா சானு, முன்கள வீராங்கனைகள் நவநீத் கெளர், நவ்ஜோத் கெளர், சோனிகா ஆகியோர் மீண்டும் அணிக்குத் திரும்பியுள்ளனர். 
புதிய பயிற்சியாளரான ஹரேந்திரா சிங் பயிற்சியின் கீழ் இந்திய மகளிர் அணி பங்கேற்கவுள்ள முதல் தொடர், ஆசிய கோப்பை போட்டியாகும். இந்தப் போட்டி, 2018-இல் லண்டனில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கான தகுதிச் சுற்றாகும். 
ஆசிய கோப்பை போட்டியில் இந்திய அணி, 'ஏ' பிரிவில் இடம்பெற்றுள்ளது. அதே பிரிவில் சீனா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய அணிகளும் இடம்பெற்றுள்ளன. இந்தியா தனது முதல் ஆட்டத்தில் சிங்கப்பூர் அணியை சந்திக்கிறது. இந்த ஆட்டம் வரும் 28-ஆம் தேதி நடைபெறுகிறது. 
அணி விவரம்: கோல் கீப்பர்கள்: சவீதா (துணை கேப்டன்), ரஜானி எடிமார்பு. பின்களம்: தீப் கிரேஸ் இக்கா, சுனிதா லகரா, சுஷீலா சானு, சுமன் தேவி, குருஜித் கெளர்.

நடுகளம்: நிக்கி பிரதான், நமீதா டோப்போ, மோனிகா, லில்லிமா மின்ஸ், நேஹா கோயல். முன்களம்: ராணி ராம்பால் (கேப்டன்), வந்தனா கட்டாரியா, லால்ரேம்சியாமி, சோனிகா, நவநீத் கெளர், நவ்ஜோத் கெளர். 
உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதே இலக்கு
உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கு தகுதி பெறுவதே எங்களின் இலக்கு என்று இந்திய மகளிர் அணியின் பயிற்சியாளர் ஹரேந்திரா சிங் தெரிவித்தார். 
இது தொடர்பாக ஹரேந்திரா சிங் மேலும் கூறியதாவது: எங்கள் அணியில் இளமை, அனுபவம் என சமபலம் கொண்ட வீராங்கனைகள் உள்ளனர். இது எங்களுக்கு மிகப்பெரிய பலமாகும். ஆசிய கோப்பை போட்டிக்கு தயாராகும் வகையில் ஐரோப்பாவில் சுற்றுப்பயணம் செய்து முன்னணி அணிகளுடன் விளையாடினோம். அதன்மூலம் எங்கள் வீராங்கனைகளின் ஆட்டத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
எங்கள் வீராங்கனைகளின் ஆட்ட நுணுக்கங்களில் சிறு சிறு மாற்றங்களை செய்துள்ளோம். அதனால் அவர்கள் இனிவரக்கூடிய ஆட்டங்களில் தேவையில்லாத தவறுகளை செய்யமாட்டார்கள். ஆசிய கோப்பை போட்டியில் சாம்பியன் பட்டம் வெல்வதும், அதன்மூலம் உலகக் கோப்பை போட்டிக்கு தகுதிபெறுவதும்தான் எங்கள் லட்சியம் என்றார். 
இந்திய கேப்டன் ராணி ராம்பால் கூறுகையில், 'எங்களுடைய ஆட்டம் எந்தெந்த இடங்களில் பலவீனமாக இருந்ததோ, அதில் தீவிர கவனம் செலுத்தி சரி செய்துள்ளோம். வீராங்கனைகள் அனைவரும் ஓர் அணியாக இணைந்து சிறப்பாக செயல்பட்டு வருகிறோம். வீராங்கனைகளிடம் நல்ல ஒற்றுமை இருக்கிறது. ஆசிய கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடி, உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதில் உறுதியாக இருக்கிறோம்' என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com