யு-17 உலகக் கோப்பை கால்பந்து காலிறுதியில் ஜெர்மனி, அமெரிக்கா

17 வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
யு-17 உலகக் கோப்பை கால்பந்து காலிறுதியில் ஜெர்மனி, அமெரிக்கா

17 வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி, அமெரிக்கா ஆகிய அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
தில்லியில் திங்கள்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் கொலம்பியாவை தோற்கடித்தது.
இந்த ஆட்டத்தின் ஆரம்பம் முதலே ஜெர்மனி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் கொலம்பிய வீரர்கள் திணறினர். அவர்களால் பந்தை தங்களின் கட்டுப்பாட்டில் வைப்பதே இயலாத காரியமானது. தொடர்ந்து தாக்குதல் ஆட்டத்தில் ஈடுபட்ட ஜெர்மனி 7-ஆவது நிமிடத்தில் முதல் கோலை அடித்தது. இந்த கோலை ஜெர்மனியின் கேப்டனும், நட்சத்திர ஸ்டிரைக்கருமான ஜான் ஃபியேட் ஆர்ப் அடித்தார். 
தொடர்ந்து ஆக்ரோஷமாக ஆடிய ஜெர்மனி 39-ஆவது நிமிடத்தில் 2-ஆவது கோலை அடித்தது. இந்த கோலை யான் பிசெக் அடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் ஜெர்மனி 2-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது.
2-ஆவது பாதி ஆட்டத்திலும் ஜெர்மனியின் ஆதிக்கமே தொடர்ந்தது. 49-ஆவது நிமிடத்தில் ஜான் இபோ கோலடிக்க, ஜெர்மனி 3-0 என்ற கோல் கணக்கில் முன்னிலை பெற்றது. அதைத் தொடர்ந்து 65-ஆவது நிமிடத்தில் ஆர்ப் தனது 2-ஆவது கோலை அடித்தார். ஒட்டுமொத்தமாக இந்தத் தொடரில் அவர் அடித்த 4-ஆவது கோல் இது. 
மறுமுனையில் கொலம்பியா அணி போராடினாலும், அதற்கு கடைசி வரை பலன் கிடைக்கவில்லை. இதனால் ஜெர்மனி 4-0 என்ற கோல் கணக்கில் அபார வெற்றி கண்டது.
ஜெர்மனி தனது காலிறுதியில் பிரேசில் அல்லது ஹோண்டுராஸை சந்திக்கவுள்ளது. இந்த ஆட்டம் வரும் 22-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறுகிறது.
அமெரிக்கா அபாரம்: மற்றொரு காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்கா 5-0 என்ற கோல் கணக்கில் பராகுவே அணியை வீழ்த்தியது. அமெரிக்க வீரர் டிம் வியே ஹாட்ரிக் கோலடித்து அசத்தினார். அவர் 19, 53, 77-ஆவது நிமிடங்களில் கோலடித்தார். கார்ல்டான் (63), சார்ஜன் (74) ஆகியோர் தலா ஒரு கோலடித்தனர். 
குரூப் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்றதோடு, 10 கோல்களையும் அடித்திருந்த பராகுவே, காலிறுதிக்கு முந்தைய சுற்றில் அமெரிக்காவுக்கு எதிராக ஒரு கோல்கூட அடிக்க முடியாமல் தோற்றது பெரும் ஏமாற்றமாக அமைந்தது. அமெரிக்கா தனது காலிறுதியில் இங்கிலாந்து அல்லது ஜப்பானை சந்திக்கவுள்ளது. 

காலிறுதிக்கு முந்தைய சுற்று இன்றைய ஆட்டங்கள் 
ஈரான்-மெக்ஸிகோ
இடம்: மர்கோவா, நேரம்: மாலை 5
பிரான்ஸ்-ஸ்பெயின்
இடம்: குவாஹாட்டி, நேரம்: மாலை 5
இங்கிலாந்து-ஜப்பான்
இடம்: கொல்கத்தா, நேரம்: இரவு 8
மாலி-இராக்
இடம்: மர்கோவா, நேரம்: இரவு 8

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com