நியூஸி.க்கு எதிரான பயிற்சி ஆட்டம்: பிசிசிஐ தலைவர் அணி வெற்றி

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் (50 ஓவர்) 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) தலைவர் லெவன் அணி வெற்றி பெற்றது.

நியூஸிலாந்துக்கு எதிரான முதல் பயிற்சி ஆட்டத்தில் (50 ஓவர்) 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய கிரிக்கெட் வாரிய (பிசிசிஐ) தலைவர் லெவன் அணி வெற்றி பெற்றது.
மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூஸிலாந்து அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதையடுத்து பேட் செய்த பிசிசிஐ தலைவர் அணிக்கு பிருத்வி ஷா-கே.எல்.ராகுல் ஜோடி சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்தது. 
இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 25.1 ஓவர்களில் 147 ரன்கள் குவித்தது. கே.எல்.ராகுல் 75 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 68 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 
இதையடுத்து கருண் நாயர் களமிறங்க, மறுமுனையில் சிறப்பாக ஆடிய பிருத்வி ஷா 80 பந்துகளில் 1 சிக்ஸர், 9 பவுண்டரிகளுடன் 66 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 
இதன்பிறகு ஒருபுறம் கருண் நாயர் அசத்தலாக ஆட, மறுமுனையில் கேப்டன் ஷ்ரேயஸ் ஐயர் 17, ரிஷப் பந்த் 15, குருகீரத் சிங் 11 ரன்களில் ஆட்டமிழந்தனர். 
இதையடுத்து மிலிந்த் குமார் களமிறங்க, பிசிசிஐ தலைவர் அணி 46.1 ஓவர்களில் 276 ரன்கள் எடுத்திருந்தபோது கருண் நாயரின் விக்கெட்டை இழந்தது. அவர் 64 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 78 ரன்கள் குவித்தார். இறுதியில் 50 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 295 ரன்கள் குவித்தது பிசிசிஐ தலைவர் அணி. நியூஸிலாந்து தரப்பில் டிரென்ட் போல்ட் 5 விக்கெட்டுகளை சாய்த்தார். 
நியூஸிலாந்து தோல்வி: பின்னர் ஆடிய நியூஸிலாந்து அணியில் மார்ட்டின் கப்டில் 22 ரன்களில் வெளியேற, காலின் மன்றோவுடன் இணைந்தார் கேன் வில்லியம்சன். 
இந்த ஜோடி 69 ரன்கள் சேர்த்தது. மன்றோ 26 ரன்களில் வெளியேற, வில்லியம்சன் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். 
இதனபிறகு 4-ஆவது விக்கெட்டுக்கு இணைந்த ராஸ் டெய்லர்-டாம் லதாம் ஜோடி 73 ரன்கள் சேர்த்தது. டெய்லர் 34 ரன்களில் வெளியேற, டாம் லதாம் 59 ரன்களில் ஆட்டமிழந்தார். இதன்பிறகு நியூஸிலாந்து அணியின் சரிவு தவிர்க்க முடியாததானது. இறுதியில் அந்த அணி 47.4 ஓவர்களில் 265 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. 
பிசிசிஐ தலைவர் அணி தரப்பில் ஜெயதேவ் உனட்கட், சபேஸ் நதீம் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை சாய்த்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com