யு-17 உலகக் கோப்பை கால்பந்து: காலிறுதியில் ஸ்பெயின், ஈரான்

பதினேழு வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின், ஈரான் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
யு-17 உலகக் கோப்பை கால்பந்து: காலிறுதியில் ஸ்பெயின், ஈரான்

பதினேழு வயதுக்குள்பட்டோருக்கான (யு-17) உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஸ்பெயின், ஈரான் அணிகள் காலிறுதிக்கு முன்னேறியுள்ளன.
குவாஹாட்டியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஸ்பெயின் அணி 2-1 என்ற கோல் கணக்கில் வலுவான பிரான்ஸ் அணியை வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தது. 
விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் இரு அணிகளும் அபாரமாக ஆட, முதல் அரை மணி நேரம் கோல் எதுவும் விழவில்லை. 34-ஆவது நிமிடத்தில் பிரான்ஸ் வீரர் அமைன் கோய்ரி வசம் பந்து செல்ல, அவர் பந்தை லென்னி பின்டார்ஸýக்கு கடத்தினார். அதை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பின்டார்ஸ் கோலாக்கினார். 
அடுத்த 10-ஆவது நிமிடத்தில் பிரான்ஸýக்கு பதிலடி கொடுத்தது ஸ்பெயின். கோல் கம்பத்தின் வலது புறத்தில் இருந்து ஃபெரான் டோரஸ் பந்தை கிராஸ் செய்ய, அப்போது மின்னல் வேகத்தில் கோல் கம்பத்தை நோக்கி விரைந்த ஜுவான் மிரான்டா கோலடித்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் இருந்தன. 
முதல் பாதி ஆட்டத்தின் கடைசிக் கட்டத்தில் அடித்த கோலால் உத்வேகம் பெற்ற ஸ்பெயின் அணி, 2-ஆவது பாதி ஆட்டத்தில் அபாரமாக ஆடியது. எனினும் 89-ஆவது நிமிடம் வரை கோல் விழவில்லை. இதனால் இந்த ஆட்டம் டிராவில் முடியும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி நிமிடத்தில் ஸ்பெயினுக்கு பெனால்டி வாய்ப்பு கிடைக்க, அதில் கேப்டன் அபேல் ரூயிஸ் கோலடித்தார். இதனால் ஸ்பெயின் 2-1 என்ற கோல் கணக்கில் பிரான்ûஸ வீழ்த்தியது.
ஸ்பெயின் தனது காலிறுதியில் ஈரான் அணியை சந்திக்கிறது. மர்கோவாவில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காலிறுதிக்கு முந்தைய சுற்றில் ஈரான் 2-1 என்ற கோல் கணக்கில் மெக்ஸிகோவை வீழ்த்தி காலிறுதியை உறுதி செய்தது. 

பிரேசில்-ஹோண்டுராஸ் இன்று பலப்பரீட்சை

17 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் கொச்சியில் புதன்கிழமை நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் பிரேசிலும், ஹோண்டுராஸýம் மோதுகின்றன.
குரூப் சுற்றில் 3 ஆட்டங்களிலும் வென்று "டி' குரூப்பில் முதலிடம் பிடித்த பிரேசில் அணி, உச்சகட்ட ஃபார்மில் இருக்கிறது. அதேநேரத்தில் ஒரே வெற்றியுடன் "இ' குரூப்பில் மூன்றாவது இடத்தைப் பிடித்த ஹோண்டுராஸ் அணிக்கு கடும் சவால் காத்திருக்கிறது. 
பிரேசில் அணியின் மிகப்பெரிய பலமே அதன் நட்சத்திர ஸ்டிரைக்கர்களான லின்கான், பாலின்ஹோ தான். குரூப் சுற்றில் ஆதிக்கம் செலுத்திய லின்கான், பாலின்ஹோ கூட்டணி, ஹோண்டுராஸýக்கு எதிராக கோல் மழை பொழியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் பிரேசிலுக்கே அதிக வெற்றி வாய்ப்புள்ளது. 
17 வயதுக்குள்பட்டோருக்கான உலகக் கோப்பை கால்பந்து வரலாற்றில் இவ்விரு அணிகளும் இதற்கு முன்னர் ஒரேயொரு முறை மட்டுமே மோதியுள்ளன. 2013-இல் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் பிரேசில் அணி 3-0 என்ற கோல் கணக்கில் வெற்றி கண்டுள்ளது. புதன்கிழமை நடைபெறும் ஆட்டத்தில் பிரேசில் அணி வெல்லும்பட்சத்தில், அந்த அணி தனது காலிறுதியில் ஜெர்மனியை சந்திக்கும். இந்த ஆட்டம் வரும் 22-ஆம் தேதி கொல்கத்தாவில் நடைபெறவுள்ளது.

போட்டி நேரம்: இரவு 8 கானா-நைஜர் மோதல்

நவி மும்பையில் புதன்கிழமை நடைபெறும் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் கானாவும், நைஜரும் மோதுகின்றன. இந்த ஆட்டத்தைப் பொறுத்தவரையில் இரு முறை உலக சாம்பியன் பட்டம் வென்ற அணியான கானா வெற்றி பெற அதிக வாய்ப்புள்ளது. 
குரூப் சுற்றில் "ஏ' பிரிவில் இடம்பெற்றிருந்த கானா இரு வெற்றி, ஒரு தோல்விகளுடன் அந்தப் பிரிவில் முதலிடம் பிடித்தது. ஆனால் நைஜர் அணி ஒரு வெற்றியுடன் 3-ஆவது இடத்தைப் பிடித்த சிறந்த அணிகளின் அடிப்படையில் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. 

போட்டி நேரம்: மாலை 5
நேரடி ஒளிபரப்பு: சோனி டென் 2, 3, டிடி ஸ்போர்ட்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com