புரோ கபடி: யு.பி.யோதாவை வெளியேற்றியது புணேரி பால்டான்

புரோ கபடி லீக் போட்டியின் பிளே ஆஃப் சுற்றில் புணேரி பால்டான் அணி 40-38 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று யு.பி.யோதா அணியை வெளியேற்றியது.
புள்ளியை கைப்பற்றும் முயற்சியில் புணே ரைடர்.
புள்ளியை கைப்பற்றும் முயற்சியில் புணே ரைடர்.

புரோ கபடி லீக் போட்டியின் பிளே ஆஃப் சுற்றில் புணேரி பால்டான் அணி 40-38 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று யு.பி.யோதா அணியை வெளியேற்றியது. மற்றொரு ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் அணி 69-30 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணியை வெளியேற்றியது.
மும்பையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் "வெளியேற்றும்' (எலிமினேஷன்) ஆட்டத்தில் யு.பி.யோதா-புணேரி பால்டான் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தின் தொடக்கம் யு.பி.யோதா அணிக்கு அருமையானதாக அமைந்தது. அந்த அணியின் கேப்டன் நிதின் தோமர், நிஷாங்க் ஆகியோர் அற்புதமாக ரைடு செல்ல, 3 நிமிடங்களின் யு.பி.யோதா 5-0 என முன்னிலை பெற்றது.
3-ஆவது நிமிடத்திலேயே புணே வீரர் அக்ஷய் ஜாதவ் தனது ரைடின் மூலம் அணியின் ஸ்கோரை தொடங்கினார். 4-ஆவது நிமிடத்தில் சூப்பர் டேக்கிள் செய்த புணே அணி 3-5 என்ற நிலையை எட்டியது. இந்நிலையில் புணேவை அதிரடியாக ஆல் அவுட் செய்த யு.பி.யோதா அணி 10-3 என முன்னிலை பெற்றது.
அப்போது புணே வீரர் ரிஷங்க் 3 புள்ளிகளை பெற்றுத் தர அந்த அணி 6-10 என நெருங்கியது. எனினும், 7-ஆவது நிமிடத்தில் யு.பி.யோதா ரைடுகள் மூலம் 13-6 என முன்னேற, விடாப்பிடியாக சூப்பர் டேக்கிள் மூலம் புள்ளிகளை வென்று 9-14 என்ற நிலையை எட்டியது புணே.
ஆட்டத்தின் 15-ஆவது நிமிடத்தில் புணே வீரர் தீபக் ஹூடா 2 ரைடு புள்ளிகளை வென்று வர, 13-15 என்ற புள்ளிகள் கணக்கில் இருந்தது அந்த அணி. இந்நிலையில், 17-ஆவது நிமிடத்தில் யு.பி.யோதாவை ஆல் அவுட் செய்து முதல் முறையாக முன்னிலை பெற்றது புணே. எனினும், யு.பி.யோதா கேப்டன் நிதின் தோமர் தனது ரைடின் மூலம் ஆட்டத்தை சமன் செய்தார். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் 18-18 என சமனிலையில் இருந்தன.
பின்னர் தொடங்கிய 2-ஆவது பாதியின் முதல் நிமிடத்தில் இரு அணிகளுமே தலா ஒரு புள்ளிகள் பெற ஆட்டம் 19-19 என்ற நிலையை எட்டியது. இந்நிலையில் ஆட்டத்தின் 24-ஆவது நிமிடத்தில் யு.பி.யோதா அணியை மீண்டும் ஆல் அவுட் செய்த புணே 27-19 என முன்னிலை பெற்றது.
26-ஆவது நிமிடத்தில் புணே வீரர் தீபக் ஹூடாவும், 28-ஆவது நிமிடத்தில் யு.பி.யோதா வீரர் ரிஷங்கும் "சூப்பர் 10' (10 ரைடு புள்ளிகள்) அந்தஸ்தை பெற்றனர். அப்போது புணே 30-21 என்ற கணக்கில் முன்னிலையில் இருந்தது. பின்னர் மீண்டு வந்த யு.பி.யோதா அணி, 33-34 என புணேவை பின்தொடர்ந்தது.
ஆட்டத்தின் 37-ஆவது நிமிடத்தில் புணே தனது முன்னிலையை 36-33 என அதிகரித்துக் கொண்டது. இறுதிக் கட்டத்தில் புள்ளிகள் 39-38 என்ற நிலையில் இருக்க, ஒரு டேக்கிள் புள்ளி மூலம் 40-38 என வெற்றி பெற்றது புணே.
அந்த அணியில் தீபக் ஹூடா 10 ரைடு புள்ளிகள், கிரிஷ் 7 டேக்கிள் புள்ளிகள் பெற்றனர். யு.பி.யோதா தரப்பில் ரிஷங்க் 15 ரைடு புள்ளிகள், ஜீவா 2 டேக்கிள் புள்ளிகள் வென்றனர்.
பாட்னா வெற்றி: இதனிடையே 2-ஆவது வெளியேற்றும் சுற்றில் பாட்னா பைரேட்ஸ் அணி 69-30 என்ற புள்ளிகள் கணக்கில் வென்று ஹரியாணா ஸ்டீலர்ஸ் அணியை வெளியேற்றியது. இதையடுத்து 3-ஆவது வெளியேற்றும் சுற்றில் புணேரி பால்டான்-பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதுகின்றன.

இன்றைய ஆட்டம்

முதல் தகுதிச்சுற்று
குஜராத் ஃபார்ச்சூன்ஜயன்ட்ஸ்-பெங்கால் வாரியர்ஸ்
நேரம்: இரவு 8 மணி
3-ஆவது வெளியேற்றும் சுற்று
புணேரி பால்டான்-
பாட்னா பைரேட்ஸ்
நேரம்: இரவு 9 மணி
இடம்: மும்பை
நேரடி ஒளிபரப்பு: ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com