அமெரிக்க ஓபன்: மகளிர் அரையிறுதியில் மோதும் நால்வரும் அமெரிக்கர்கள்!

1981-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்ற பெருமையை அமெரிக்கா அடைந்துள்ளது...
மேடிசன் கீஸ்
மேடிசன் கீஸ்

அமெரிக்க ஓபன் டென்னிஸ் போட்டியில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அரையிறுதிக்குத் தகுதி பெற்ற நால்வரும் அமெரிக்க வீராங்கனைகள்!

இந்த ஆண்டின் கடைசி கிராண்ட்ஸ்லாம் போட்டியான இதில், மகளிர் ஒற்றையர் காலிறுதிச் சுற்று ஒன்றில் உலகின் 9-ஆம் நிலை வீராங்கனையான வீனஸ் வில்லியம்ஸும், போட்டித் தரவரிசையில் 13-ஆவது இடத்தில் இருந்த பெட்ரா கிவிட்டோவாவும் மோதினர். இருவருக்கும் இடையே விறு விறுப்பாக 2 மணி நேரம் 34 நிமிடங்கள் நடைபெற்ற இந்த ஆட்டத்தின் முடிவில் வீனஸ் 6-3, 3-6, 7-6 (2) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். இதையடுத்து, வீனஸ் தனது அரையிறுதியில் சகநாட்டவரான ஸ்லோனே ஸ்டீபன்ஸை எதிர்கொள்கிறார். 

கடந்த 1994-ஆம் ஆண்டில் விம்பிள்டனில் விளையாடிய மார்டினா நவ்ரத்திலோவாவுக்குப் பிறகு, கிராண்ட்ஸ்லாம் போட்டியின் அரையிறுதியில் விளையாடும் உலகின் வயதான வீராங்கனை (37) என்ற பெருமையை வீனஸ் பெற்றுள்ளார். இந்த ஆண்டு விம்பிள்டன் மற்றும் ஆஸ்திரேலிய ஓபன் போட்டிகளில் இறுதிச்சுற்று வரை சென்றார் வீனஸ். அமெரிக்க ஓபனிலும் அவர் இறுதிச்சுற்றுக்கு முன்னேறும் பட்சத்தில், கடந்த 2002-ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரே ஆண்டில் 3 கிராண்ட்ஸ்லாம் போட்டிகளின் இறுதிச்சுற்றுக்கு முன்னேறிய பெருமையைப் பெறுவார்.

முன்னதாக ஸ்டீபன்ஸ், தனது காலிறுதியில் லாத்வியாவின் அனஸ்தாஸிஜா செவஸ்டோவாவை 6-3, 3-6, 7-6(4) என்ற செட் கணக்கில் வீழ்த்தியிருந்தார்.

இதனிடையே, மற்ற இரு காலிறுதிகளில் அமெரிக்காவின் மேடிசன் கீஸ் மற்றும் கோகோ வான்டெவெக் ஆகியோர் வெற்றி பெற்று, அரையிறுதியில் மோதும் அனைத்து வீராங்கனைகளுமே அமெரிக்கர்கள் என்கிற பெருமையை அடைந்தார்கள். 1981-ஆம் ஆண்டுக்குப் பிறகு இதுபோன்ற பெருமையை அமெரிக்கா அடைந்துள்ளது.

உலகின் முதல் நிலை வீராங்கனையான செக். குடியரசின் கரோலினா பிளிஸ்கோவா, காலிறுதியில் அமெரிக்கரான கோகோ வான்டெவெக்கைச் சந்தித்தார். இதில் 7-6 (4), 6-3 என்ற நேர் செட்களில் கோகோ வாண்டெவெக் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார்.  

அமெரிக்காவின் மேடிசன் கீஸ் எஸ்டோனியாவின் கையா கானேபியை சந்தித்தார். இதில் 6-3, 6-3 என்ற நேர் செட்களில் வென்று அரையிறுதிக்கு முன்னேறினார். இந்தக் காலிறுதிச்சுற்று 69 நிமிடங்களே நீடித்தது. இதையடுத்து, மேடிசன் கீஸ் தனது அரையிறுதியில் சகநாட்டவரான கோகோ வான்டெவெக்கை எதிர்கொள்கிறார்.

வீனஸ் வில்லியம்ஸ்
வீனஸ் வில்லியம்ஸ்
கோகோ வாண்டெவெக்
கோகோ வாண்டெவெக்
ஸ்லோனே ஸ்டீபன்ஸ்
ஸ்லோனே ஸ்டீபன்ஸ்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com