ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி: டெஸ்ட் தொடரை சமன் செய்தது

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.

வங்கதேசத்துக்கு எதிரான 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வியாழக்கிழமை வெற்றி பெற்றது.
மொத்தம் 2 ஆட்டங்களைக் கொண்ட இந்த டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பதிவு செய்ததை அடுத்து, தொடர் 1-1 என்ற கணக்கில் சமன் ஆனது.
வங்கதேசத்தின் சிட்டகாங் நகரில் கடந்த 4-ஆம் தேதி தொடங்கிய 2-ஆவது டெஸ்ட் கிரிக்கெட் ஆட்டத்தில் டாஸ் வென்ற வங்கதேசம் முதலில் பேட் செய்தது. அந்த அணி தனது முதல் இன்னிங்ஸில் 113.2 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 305 ரன்கள் எடுத்தது.
அணியின் முஷ்ஃபிகர் ரஹிம் அதிகபட்சமாக 68 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் அதிகபட்சமாக 7 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து தனது முதல் இன்னிங்ஸை தொடங்கிய ஆஸ்திரேலியா 119.5 ஓவர்களில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்தது. டேவிட் வார்னர் அதிகபட்சமாக சதம் கடந்து 123 ரன்கள் விளாசினார். வங்கதேச தரப்பில், முஷ்டாஃபிஸுர் ரஹ்மான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகள் எடுத்தார்.
பின்னர், முதல் இன்னிங்ஸில் 72 ரன்கள் பின்தங்கிய நிலையில் தனது 2-ஆவது இன்னிங்ஸை தொடங்கிய வங்கதேசம் 71.2 ஓவர்களில் 157 ரன்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் முஷ்ஃபிகர் ரஹிம் 31 ரன்கள் எடுத்தார். ஆஸ்திரேலிய தரப்பில் நாதன் லயன் அதிகபட்சமாக 6 விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து, 86 ரன்கள் என்ற வெற்றி இலக்குடன் வியாழக்கிழமை தனது 2-ஆவது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலியா 15.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 87 ரன்கள் எடுத்து வெற்றி கண்டது. ஹேண்ட்ஸ்காம்ப் 16, கிளென் மேக்ஸ்வெல் 25 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். வங்கதேசத்தின் முஷ்டாஃபிஸுர் ரஹ்மான், ஷகிப் அல் ஹசன், தைஜுல் இஸ்லாம் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இரு இன்னிங்ஸ்களிலும் மொத்தமாக 13 விக்கெட்டுகள் வீழ்த்திய ஆஸ்திரேலியாவின் நாதன் லயன் ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். தொடர் நாயகன் விருதை அவரும், டேவிட் வார்னரும் பகிர்ந்து கொண்டனர்.
தரவரிசையில் 5-ஆவது இடம்
வங்கதேசத்துக்கு எதிரான டெஸ்ட் தொடரை சமன் செய்துள்ள ஆஸ்திரேலியா, டெஸ்ட் அணிகளுக்கான தரவரிசை பட்டியலில் 97 புள்ளிகளுடன் 5-ஆவது இடத்துக்கு இறங்கியுள்ளது. முன்னதாக, 100 புள்ளிகளுடன் 4-ஆவது இடத்தில் இருந்தது ஆஸ்திரேலியா.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com