டேவிஸ் கோப்பை டென்னிஸ் : கனடா அணி வலுவானது 

2015 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றில் இந்தியா எதிர்கொண்ட செக்.குடியரசு அணியைவிட, தற்போதைய கனடா அணி வலுவானது
டேவிஸ் கோப்பை டென்னிஸ் : கனடா அணி வலுவானது 

2015 டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றில் இந்தியா எதிர்கொண்ட செக்.குடியரசு அணியைவிட, தற்போதைய கனடா அணி வலுவானது என்று இந்திய டேவிஸ் கோப்பை அணியின் கேப்டன் (நான் பிளேயிங்) மகேஷ் பூபதி தெரிவித்துள்ளார்.
டேவிஸ் கோப்பை போட்டியின் ஆசிய-ஓசியானியா குரூப் சுற்றில் கடந்த சில ஆண்டுகளாக ஆதிக்கம் செலுத்தி வருகிறது இந்திய அணி. எனினும் உலக குரூப் பிளே ஆஃப் சுற்றை தாண்ட முடியவில்லை. 
உலக குரூப் பிளே ஆஃப் சுற்றில் 2014-இல் செர்பியாவிடமும், 2015-இல் செக்.குடியரசிடமும், 2016-இல் ஸ்பெயினிடமும் தோற்றது இந்தியா. இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான உலக குரூப் பிளே ஆஃப் சுற்றில் கனடாவை எதிர்கொள்கிறது இந்தியா. இந்தப் போட்டி வரும் 15 முதல் 17-ஆம் தேதி வரை கனடாவின் எட்மான்டன் நகரில் நடைபெறுகிறது. 
கனடா அணியில் உலகின் 51-ஆம் நிலை வீரரான டெனிஸ் ஷபோவெலாவ், 82-ஆம் நிலை வீரரான வசேக் போஸ்பிஸில், முன்னணி இரட்டையர் வீரரான டேனியல் நெஸ்டர் உள்ளிட்டோர் இடம்பெற்றுள்ளனர். கனடாவுடன் மோதுவதற்காக நியூயார்க்கில் ஒரு வார பயிற்சி முகாமில் பங்கேற்றது இந்திய அணி. அதைத் தொடர்ந்து இப்போது எட்மான்டன் சென்றடைந்துள்ளது. 
இது தொடர்பாக மகேஷ் பூபதி மேலும் கூறியதாவது: கனடா தரமான அணி. அதநேரத்தில் நாங்களும் உலக குரூப் சுற்றுக்கு தகுதி பெறுவதற்காகவே எட்மான்டன் வந்துள்ளோம். நாங்கள் 2015-இல் மோதிய செக்.குடியரசு அணியைவிட, தற்போதைய கனடா அணி மிக வலுவானது என நினைக்கிறேன். 
நியூயார்க்கில் ஒரு வார காலம் உள் விளையாட்டரங்கில் பெற்ற பயிற்சி, இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாட உதவும் என நம்புகிறேன். வீரர்கள் சிறப்பான முறையில் பயிற்சி பெற்று நம்பிக்கையோடு இருக்கிறார்கள். கனடாவுடன் மோதுவதற்காக காத்திருக்கிறோம். 
வெற்றி நம்பிக்கையைத் தரும். மிகப்பெரிய வெற்றி பெரிய அளவிலான நம்பிக்கையைத் தரும். சமீபத்தில் முன்னணி வீரர்களான கேல் மான்பில்ஸ், டொமினிக் தீம் ஆகியோருக்கு எதிராக முறையே இந்தியாவின் யூகி பாம்ப்ரி, ராம்குமார் ஆகியோர் வெற்றி பெற்றிருக்கிறார்கள். இதை, தரவரிசையில் முதல் 100 இடங்களுக்குள் இந்திய வீரர்கள் முன்னேறுவதற்கான முயற்சியாகவே பார்க்கிறேன். 
யூகி பாம்ப்ரி, ராம்குமார் ஆகியோர் கடந்த காலங்களில் ஏராளமான ஆட்டங்களில் விளையாடி குறிப்பிடத்தக்க வெற்றிகளை பெற்றிருக்கிறார்கள். இந்திய அணியை முன்னின்று வழிநடத்தக்கூடியவரான ரோஹன் போபண்ணா, இந்த ஆண்டு மான்ட்ரியால் மாஸ்டர்ஸ் டென்னிஸ் போட்டியில் இறுதிச் சுற்று வரை முன்னேறியிருக்கிறார். சாகேத் மைனேனியின் ஆட்டத்தில் வேகமான முன்னேற்றம் இருக்கிறது. காயத்திலிருந்து மீண்ட பிறகு விரைவாக ஃபார்முக்கு திரும்புவது எளிதல்ல. சாகேத் மைனேனி அர்ப்பணிப்புமிக்க வீரர். 
இந்திய வீரர்கள் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். அவர்கள் சரியான திசையில் பயணிக்கிறார்கள். அதனால் நிச்சயம் வெற்றி பெறுவார்கள். தற்போது ஆசியாவில் ஜப்பான், தாய்லாந்து போன்ற நாடுகளில் இருந்து டாப்-10 வீரர்கள் உருவாகியிருக்கிறார்கள். அதேபோன்று இந்தியாவாலும் முன்னணி வீரர்களை உருவாக்க முடியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com