பயிற்சி ஆட்டம்: ஆஸ்திரேலியா வெற்றி

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் மார்கஸ் ஸ்டாய்னிஸ்
பந்தை பவுண்டரிக்கு விரட்டும் மார்கஸ் ஸ்டாய்னிஸ்

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய (பிசிசிஐ) தலைவர் லெவன் அணிக்கு எதிரான பயிற்சி ஆட்டத்தில் 103 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.
சென்னையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்று முதலில் பேட் செய்த ஆஸ்திரேலிய அணி, ரன் கணக்கைத் தொடங்குவதற்கு முன்னதாகவே கார்ட்ரைட்டின் விக்கெட்டை இழந்தது. இதையடுத்து டேவிட் வார்னருடன் இணைந்தார் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 106 ரன்கள் சேர்த்தது. வார்னர் 48 பந்துகளில் 64, ஸ்மித் 68 பந்துகளில் 55 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
பின்னர் வந்த கிளன் மேக்ஸ்வெல் 14 ரன்களில் நடையைக் கட்ட, டிராவிஸ் ஹெட் 63 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். 
இதன்பிறகு மார்கஸ் ஸ்டாய்னிஸும், மேத்யூ வேடும் வெளுத்து வாங்க, ஆஸ்திரேலியா 300 ரன்களைக் கடந்தது. அந்த அணி 48 ஓவர்களில் 331 ரன்களை எட்டியபோது மேத்யூ வேட் ஆட்டமிழந்தார். அவர் 24 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 45 ரன்கள் எடுத்தார். மார்கஸ் ஸ்டாய்னிஸ் 60 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்கள் சேர்த்து வெளியேற, ஆஸ்திரேலியா 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 347 ரன்கள் குவித்தது.
பிசிசிஐ தலைவர் லெவன் அணி தரப்பில் வாஷிங்டன் சுந்தர் 8 ஓவர்களில் 23 ரன்களை மட்டுமே கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். 
பின்னர் ஆடிய பிசிசிஐ தலைவர் லெவன் அணியில் ராகுல் திரிபாதி 7 ரன்களில் நடையைக் கட்ட, கோஸ்வாமியுடன் இணைந்தார் மயங்க் அகர்வால். இந்த ஜோடி 2-ஆவது விக்கெட்டுக்கு 79 ரன்கள் சேர்த்தது. அகர்வால் 47 பந்துகளில் 42, கோஸ்வாமி 54 பந்துகளில் 43 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தனர்.
இதன்பிறகு 18 ரன்கள் இடைவெளியில் நிதீஷ் ராணா (19), எஸ்.செளத்ரி (4), கேப்டன் குருகீரத் சிங் (27), ஜி.பி.போடார் (0) ஆகியோர் ஆட்டமிழக்க, பிசிசிஐ தலைவர் லெவன் அணி சரிவுக்குள்ளானது. 
இதன்பிறகு வாஷிங்டன் சுந்தர் 11 ரன்களில் வெளியேற, கடைசிக் கட்டத்தில் அக்ஷய் கர்னேவர், குஷாங் படேல் ஆகியோரின் அதிரடியால் பிசிசிஐ தலைவர் லெவன் அணி, 200 ரன்களைக் கடந்தது. அக்ஷய் கர்னேவர் 28 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன்பிறகு 48.2 ஓவர்களில் 244 ரன்களுக்கு ஆட்டமிழந்தது பிசிசிஐ தலைவர் லெவன் அணி. குஷாங் படேல் 41 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆஸ்திரேலியத் தரப்பில் ஆஷ்டன் அகர் 4 விக்கெட்டுகளை சாய்த்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com