சென்னை ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பலத்தை மேலும் நிரூபிக்குமா இந்தியா?

அஸ்வின், ஜடேஜா இல்லாமல் ஆஸி. அணியை வெல்லமுடியுமா? ஆஸி. அணி இந்திய அணிக்கு எந்தளவுக்குச் சவாலாக இருக்கப்போகிறது?...
சென்னை ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவை வீழ்த்தி பலத்தை மேலும் நிரூபிக்குமா இந்தியா?

இலங்கையில் விளையாடிய ஒவ்வொரு போட்டியையும் வென்ற இந்திய அணி, அதே பலத்தை ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் வெளிப்படுத்துமா? ஆஸி. அணி இந்திய அணிக்கு எந்தளவுக்குச் சவாலாக இருக்கப்போகிறது? அஸ்வின், ஜடேஜா இல்லாமல் ஆஸி. அணியை வெல்லமுடியுமா? 

ஒருநாள் தொடரை முன்வைத்து ரசிகர்கள் மனத்தில் உள்ள முக்கியமான கேள்விகள் இவை.

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள், 5 போட்டிகள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடர், 3 போட்டிகள் டி20 தொடர் ஆகியவற்றில் மோதுகின்றன. ஒரு நாள் தொடரின் முதல் ஆட்டம் சென்னையில் நாளை நடைபெறுகிறது.

இலங்கைக்கு எதிரான 5 ஆட்டங்களைக் கொண்ட ஒருநாள் தொடரில் இலங்கையை 5-0 என்ற கணக்கில் ஒயிட்வாஷ் செய்தது இந்தியா. எனவே மிகுந்த நம்பிக்கையுடன் இந்தப் போட்டியை இந்திய அணி எதிர்கொள்ளும்.

இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவனின் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவர் முதல் 3 ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார்.  இந்திய அணியின் சமீபத்திய வெற்றிகளில் அவருடைய பங்கு மிக முக்கியமானதாகும். சாம்பியன்ஸ் டிராபி முதல் இலங்கைக்கு எதிரான தொடர் வரை அவர் தனது பேட்டிங்கால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் பெரிய அளவில் ரன் குவித்த ரஹானே, தொடர் நாயகன் விருதையும் பெற்றார். அவரால் எந்த நேரத்திலும் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளது.

காயம் காரணமாக 6 மாத காலம் ஓய்வில் இருந்த ரோஹித் சர்மா, கடந்த ஏப்ரலில் மீண்டும் அணிக்குத் திரும்பினார். அதைத்தொடர்ந்து விளையாடிய 10 ஆட்டங்களில் 3 சதங்களை விளாசினார். அதுகுறித்து அவர் கூறியதாவது:

காயத்திலிருந்து மீண்டு அணிக்குத் திரும்புவது எளிதல்ல. பெரிய அறுவை சிகிச்சைக்குப் பிறகு மீண்டும் அணிக்குத் திரும்புவது மிகக் கடினமாகும். களத்தில் விளையாடுகிறபோது அறுவை சிகிச்சை செய்து கொண்டது தொடர்பான நினைவு நமது மனதிற்குள் இருக்கும். காயத்திலிருந்து மீண்ட பிறகு ஐபிஎல் போட்டி எனக்கு சிறப்புமிக்கதாக அமைந்தது. மும்பை அணியின் கேப்டனாக செயல்பட்டபோது, மீண்டும் காயம் ஏற்பட்டுவிட்டால் என்னவாகும் என்பதைப் பற்றியெல்லாம் நான் சிந்திக்கவில்லை. அதனால்தான் இந்திய அணிக்காக களமிறங்கியபோது என் மனதில் எதிர்மறையான சிந்தனைகள் எதுவும் இல்லை என்கிறார் ரோஹித் சர்மா. 

கேப்டன் கோலி, தோனி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கின்றனர். வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் எந்த மாற்றமும் இருக்காது என தெரிகிறது.  

கே.எல்.ராகுல், இலங்கைத் தொடரில் மிடில் ஆர்டரில் களமிறங்கியிருந்தாலும், ஆரம்பத்தில் தொடக்க வீரராகத்தான் களம் கண்டார். இலங்கைத் தொடரில் பின்வரிசையில் களமிறக்கப்பட்ட கே.எல்.ராகுல் சரியாக விளையாடவில்லை. எனினும் நாளைய போட்டியிலும் அவர் மிடில் ஆர்டரில் களமிறங்க வாய்ப்புண்டு. 

இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் கலக்கிய மணீஷ் பாண்டே, குல்தீப் யாதவ், சாஹால் ஆகியோருக்கு மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் எனத் தெரிகிறது. மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேதார் ஜாதவ், மணீஷ் பாண்டே, ராகுல் ஆகிய மூவரில் இருவருக்கு மட்டுமே இடமுண்டு. ராகுல் அல்லது பாண்டே ஆகிய இருவரில் ஒருவர் தேர்வாக வாய்ப்புண்டு. பந்துவீச்சிலும் அசத்துவதால் ஜாதவ், அணியில் நிச்சயம் இடம்பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் இந்த ஆட்டத்தில் குல்தீப் யாதவ், அக்ஷர் படேல் அணியில் இடம்பெற வாய்ப்புண்டு. மேலும், ஜஸ்பிரித் பூம்ரா-புவனேஸ்வர் குமார் கூட்டணியே இந்த ஆட்டத்திலும் நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மணிக்கட்டைப் பயன்படுத்தி பந்துவீசக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

இரவு நேரங்களில் வலது கை சுழற்பந்து வீச்சாளர்கள் லெக் ஸ்பின் வீசும்போது அதை எதிர்கொள்வது மிகக் கடினமாகும். பொதுவாகவே அவர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடிய பந்துவீச்சாளர்களாக திகழ்கிறார்கள். அவர்கள் தங்கள் அணிகளின் துருப்புச் சீட்டாக இருப்பார்கள். மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசும் அவர்கள், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இந்தத் தொடரைப் பொறுத்தவரையில் எங்கள் அணியில் இருக்கும் ஆடம் ஸம்பா, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசக் கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவர். அவர்களுக்கு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம்தான் வேண்டும் என்பதில்லை. எந்தவொரு மைதானத்திலும் பல்வேறு வகையான பந்து
வீச்சைப் பயன்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்த அவர்களுக்கு தெரியும் என்கிறார் ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆஷ்டன் அகர்.

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரான ஆரோன் ஃபிஞ்சுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் சேர்க்கப்பட்டுள்ளார். ஆரோன் ஃபிஞ்ச் கடந்த வியாழக்கிழமை சென்னையில் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது அவருடைய காலில் தசை நார் முறிவு ஏற்பட்டது. அவருடைய ஸ்கேன் அறிக்கையை ஆராய்ந்த மருத்துவர்கள், சில நாள்கள் ஓய்வுக்குப் பிறகு விளையாடலாம் என தெரிவித்துள்ளனர். எனவே அவர் இந்தத் தொடரில் முதல் 3 ஆட்டங்களில் விளையாடமாட்டார் எனத் தெரிகிறது.

ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணிக்கு ஆசியாவில் சுழற்பந்து வீச்சை எதிர்கொள்வது மிகப்பெரிய சவாலான காரியம். எனினும் சென்னையில் சமீபத்தில் நடைபெற்ற பயிற்சி ஆட்டத்தில் வார்னர் 48 பந்துகளில் 64, ஸ்மித் 68 பந்துகளில் 55 ரன்களும் டிராவிஸ் ஹெட் 63 பந்துகளில் 65 ரன்களும் எடுத்தார்கள். அதன்பின்பு மார்கஸ் ஸ்டாய்னிஸ் 60 பந்துகளில் 5 சிக்ஸர், 4 பவுண்டரிகளுடன் 76 ரன்களும் மேத்யூ வேட் 24 பந்துகளில் 4 சிக்ஸர், 2 பவுண்டரிகளுடன் 45 ரன்களும் எடுத்தார்கள். இதனால் ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கில் மிகுந்த நம்பிக்கையுடன் ஒருநாள் போட்டியை எதிர்கொள்கிறது. 

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர் டேவிட் வார்னர், கேப்டன் ஸ்மித் ஆகியோர் பேட்டிங்கில் முன்னிலை வகிக்கின்றனர். இதுதவிர டிராவிஸ் ஹெட், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோரும் அணியின் பெரிய ஸ்கோருக்கு உத்தரவாதம் அளிப்பவர்கள். ஜேம்ஸ் ஃபாக்னர், மார்கஸ் ஸ்டாய்னிஸ், நாதன் கோல்ட்டர் நீல் போன்ற ஆல்ரவுண்டர்கள் அந்த அணிக்கு பலம் சேர்க்கின்றனர். இவர்கள் அனைவரும் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். இந்தத் தொடரின் மூலம் ஆஷஸ் தொடருக்கான விக்கெட் கீப்பர் மற்றும் 6-ஆவது இடத்துக்கான பேட்ஸ்மேன் தேர்வு செய்யப்படுவார் என கேப்டன் ஸ்மித் அறிவித்துள்ளார். அதனால் இந்த பயிற்சி ஆட்டம் மேத்யூ வேடுக்கு மிக முக்கியமானதாகும்.

ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க் இந்தத் தொடரில் விளையாடவில்லை. அவர் விளையாடினால், நிச்சயம் தாக்கத்தை ஏற்படுத்துவார். எனினும் ஆஸ்திரேலிய அணியில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வீரர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள். அவர்களுக்கு இங்குள்ள சூழல் தெரியும். அதனால் அந்த அணியை எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது.

மழையால் ஆட்டம் பாதிக்கப்படாவிட்டால் ஒரு பெரிய விருந்து கிரிக்கெட் ரசிகர்களுக்குக் காத்திருக்கிறது.

ஆஸ்திரேலிய அணி: ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), டேவிட் வார்னர், ஆஷ்டன் அகர், ஹில்டன் கார்ட்ரைட், நாதன் கோல்ட்டர் நீல், பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ் ஃபாக்னர், டிராவிஸ் ஹெட், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட்,ஆடம் ஸம்பா, பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப்.

இந்திய அணி: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், அஜிங்க்ய ரஹானே, தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, அக்ஸர் படேல், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், முகமது சமி.

நேரம்: மதியம் 1.30 (இந்திய நேரம்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com