ரஹானே தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்களில் ஷிகர் தவனுக்குப் பதிலாக அஜிங்க்ய ரஹானே தொடக்க வீரராக களமிறங்க
சென்னை சேப்பாக்கத்துக்கு பயிற்சிக்காக வந்தபோது உற்சாகமாக 'போஸ்' கொடுக்கும் ரோஹித் சர்மா.
சென்னை சேப்பாக்கத்துக்கு பயிற்சிக்காக வந்தபோது உற்சாகமாக 'போஸ்' கொடுக்கும் ரோஹித் சர்மா.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டங்களில் ஷிகர் தவனுக்குப் பதிலாக அஜிங்க்ய ரஹானே தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளதாக இந்திய அணியின் தொடக்க வீரரும், துணை கேப்டனுமான ரோஹித் சர்மா தெரிவித்தார்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது. இந்திய அணியின் தொடக்க வீரர்களில் ஒருவரான ஷிகர் தவனின் மனைவிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதால், அவர் முதல் 3 ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார்.
இந்த நிலையில் சென்னையில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த ரோஹித் சர்மா மேலும் கூறியதாவது: ஷிகர் தவன் முதல் 3 ஆட்டங்களில் விளையாடாதது பாதிப்புதான். இந்திய அணியின் சமீபத்திய வெற்றிகளில் அவருடைய பங்கு மிக முக்கியமானதாகும். சாம்பியன்ஸ் டிராபி முதல் இலங்கைக்கு எதிரான தொடர் வரை அவர் தனது பேட்டிங்கால் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தினார்.
எனினும் அவருடைய இடத்தை நிரப்பக்கூடிய சில வீரர்கள் இந்திய அணியில் இருக்கிறார்கள். அவர்களில் ரஹானேவும் ஒருவர். மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் பெரிய அளவில் ரன் குவித்த ரஹானே, தொடர் நாயகன் விருதையும் பெற்றார். அவரால் எந்த நேரத்திலும் தொடக்க வீரராக களமிறங்க முடியும் என்றார்.
உங்களுடைய தொடக்க ஜோடி மாறுவதால், உங்கள் ஆட்ட வியூகத்தில் ஏதாவது மாற்றம் இருக்குமா என ரோஹித் சர்மாவிடம் கேட்டபோது, "உண்மையை சொல்வதானால், என்னுடன் ஜோடி சேர்ந்து விளையாடும் வீரர் மாறுவது ஒரு விஷயமே அல்ல. மைதானத்தின் சூழல், ஆடுகளத்தின் தன்மை ஆகியவற்றைப் பொறுத்து மட்டுமே ஆட்ட வியூகம் மாறுபடும்.
எதிர்முனையில் இருக்கும் வீரர் ரன் குவிக்க முடியாமல் தடுமாறினால், நான் பொறுப்பை உணர்ந்து சிறப்பாக ஆட வேண்டும். நான் திணறும்போது எதிர்முனையில் இருக்கக் கூடியவர் சிறப்பாக ஆட வேண்டும். இதுதான் எங்கள் அணியின் திட்டம்' என்றார்.
கே.எல்.ராகுல், இலங்கை தொடரில் மிடில் ஆர்டரில் களமிறங்கியிருந்தாலும், ஆரம்பத்தில் தொடக்க வீரராகத்தானே களம் கண்டார். அவர் தொடக்க வீரராக களமிறங்க வாய்ப்புள்ளதா என ரோஹித் சர்மாவிடம் கேட்டபோது, "அது குறித்து எனக்கு எதுவும் தெரியாது. ஒவ்வொரு வீரரையும் எந்த நிலையில் களமிறக்க வேண்டும் என்பது குறித்து பயிற்சியாளரும், கேப்டனும் ஆலோசித்து முடிவு செய்திருப்பார்கள் என்று நினைக்கிறேன். மேற்கிந்தியத் தீவுகள் தொடரில் ரஹானே தொடக்க வீரராக களமிறங்கினார். அதனால் இந்தத் தொடரிலும் அவர் களமிறங்கலாம் என்பது எனது அனுமானம். நான் எல்லா அணிகளுக்கு எதிராகவும் சிறப்பாக ஆட விரும்புகிறேன். எனினும் ஆஸ்திரேலியா போன்ற வலுவான அணிக்கு எதிராக தொடர்ந்து சிறப்பாக ஆடி வருவது மகிழ்ச்சியளிக்கிறது' என்றார்.

மணிக்கட்டு சுழற்பந்து வீச்சாளர்கள் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடரில் மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்துவார்கள் என்று ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் ஆஷ்டன் அகர் தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் மேலும் கூறியதாவது: ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் மணிக்கட்டை பயன்படுத்தி லெக் ஸ்பின் வீசக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் அவர்கள் சார்ந்த அணிக்கு பெரிய அளவில் பலம் சேர்க்கிறார்கள். இரவு நேரங்களில் வலது கை சுழற்பந்து வீச்சாளர்கள் லெக் ஸ்பின் வீசும்போது அதை எதிர்கொள்வது மிகக் கடினமாகும். பொதுவாகவே அவர்கள் விக்கெட்டுகளை வீழ்த்தக் கூடிய பந்துவீச்சாளர்களாக திகழ்கிறார்கள். அவர்கள் தங்கள் அணிகளின் துருப்புச் சீட்டாக இருப்பார்கள். மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசும் அவர்கள், மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார்கள். இந்தத் தொடரைப் பொறுத்தவரையில் எங்கள் அணியில் இருக்கும் ஆடம் ஸம்பா, இந்திய சுழற்பந்து வீச்சாளர்கள் யுவேந்திர சாஹல், குல்தீப் யாதவ் ஆகியோர் மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசக் கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் ஆவர். அவர்களுக்கு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளம்தான் வேண்டும் என்பதில்லை. எந்தவொரு மைதானத்திலும் பல்வேறு வகையான பந்து
வீச்சைப் பயன்படுத்தி தாக்கத்தை ஏற்படுத்த அவர்களுக்கு தெரியும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com