இந்தியா-ஆஸி. முதல் ஒரு நாள் ஆட்டம்: சென்னையில் இன்று நடைபெறுகிறது

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்தியா-ஆஸி. முதல் ஒரு நாள் ஆட்டம்: சென்னையில் இன்று நடைபெறுகிறது

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5 ஆட்டங்கள் கொண்ட ஒரு நாள் கிரிக்கெட் தொடரின் முதல் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.
இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் 30 ஆண்டுகளுக்குப் பிறகு சென்னையில் நடைபெறுகிறது. அதனால் இந்த ஆட்டத்தின் மீது மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
சமீபத்தில் இலங்கைக்கு எதிரான ஒரு நாள் கிரிக்கெட் தொடரை 5-0 என்ற கணக்கில் கைப்பற்றிய கோலி தலைமையிலான இந்திய அணி, சென்னையில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் வென்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை வெற்றியோடு தொடங்குவதில் தீவிரமாக உள்ளது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் கைப்பற்றுமானால் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும். அதேநேரத்தில் இந்தத் தொடரை ஆஸ்திரேலியா 4-1 என்ற கணக்கில் வெல்லுமானால் அந்த அணி முதலிடத்தைப் பிடிக்கும். தற்போதைய நிலையில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும், ஆஸ்திரேலியா மற்றும் இந்திய அணிகள் முறையே 2 மற்றும் 3-ஆவது இடங்களிலும் உள்ளன. 
வலுவான பேட்டிங்: இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் முன்னணி தொடக்க வீரரான ஷிகர் தவன் முதல் 3 ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். அதனால் ரோஹித் சர்மாவுடன் அஜிங்க்ய ரஹானே தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
சமீபகாலமாக உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் ரோஹித் சர்மா, எப்போதுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடியவர் என்பது இந்தியாவுக்கு கூடுதல் பலமாகும். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரு இரட்டைச் சதங்களை விளாசியிருக்கிறார் ரோஹித் சர்மா. அதில் முதல் இரட்டைச் சதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளாசப்பட்டதாகும். எனவே இந்த ஆட்டத்திலும் அவருடைய அதிரடி தொடரும் என நம்பலாம். 
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி கலக்கிய அஜிங்க்ய ரஹானே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி சிறப்பாக ஆடி, இந்திய அணியில் தனது இடத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள முயற்சிப்பார் என நம்பலாம். 
மிடில் ஆர்டரில் கேப்டன் விராட் கோலி மிகப்பெரிய பலமாகத் திகழ்கிறார். எதிரணிகளால் எளிதில் கட்டுப்படுத்த முடியாதவரான கோலி, ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களை பதம்பார்க்க காத்திருக்கிறார். 4-ஆவது பேட்ஸ்மேன் இடத்தைப் பிடிப்பதில் மணீஷ் பாண்டே, கே.எல்.ராகுல் ஆகியோரிடையே போட்டி நிலவி வருகிறது. கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா ஆகியோரும் மிடில் ஆர்டரில் பலம் சேர்க்கின்றனர். கேதார் ஜாதவ், மணீஷ் பாண்டே ஆகியோர் பெரிய அளவில் ரன் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.
மிரட்டும் குல்தீப்: வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அக்ஷர் படேலுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே குல்தீப் யாதவுடன் 2-ஆவது சுழற்பந்து வீச்சாளராக யுவேந்திர சாஹல் இடம்பெறுவார் என தெரிகிறது. மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசக்கூடிய குல்தீப், சாஹல் கூட்டணி ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா: ஆஸ்திரேலிய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் ஆரோன் ஃபிஞ்சுக்கு காயம் ஏற்பட்டுள்ளதால், அவர் ஆரம்பக்கட்ட ஆட்டங்களில் விளையாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே வார்னருடன், டிராவிஸ் ஹெட் தொடக்க வீரராக களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய மண்ணில் எப்போதுமே சிறப்பாக ஆடக்கூடியவரான டேவிட் வார்னர், இந்த ஆட்டத்திலும் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பார் என நம்பலாம். 
மிடில் ஆர்டரில் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் போன்றவர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள் என்பதால், அவர்களுக்கு இங்குள்ள சூழல் குறித்து நன்கு தெரியும். எனினும் அவர்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பு அமையும். முருகன் அஸ்வின், ஜியாஸ் போன்ற சுழற்பந்து வீச்சாளர்களை பந்துவீச வைத்து ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்கள் பயிற்சி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. 
வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் முன்னணி பந்துவீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோர் இந்தத் தொடரில் விளையாடாதது ஆஸ்திரேலியாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. நாதன் கோல்ட்டர் நீல், பேட் கம்மின்ஸ், ஜேம்ஸ் 
ஃபாக்னர் ஆகியோரையே வேகப்பந்து வீச்சில் நம்பியுள்ளது ஆஸ்திரேலியா. சுழற்பந்து வீச்சில் ஆடம் ஸம்பாவை மட்டுமே நம்பியுள்ளது. கிளன் மேக்ஸ்வெல் பகுதி நேர பந்து வீச்சாளராக பயன்படுத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தியா (உத்தேச லெவன்): ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே/கே.எல்.ராகுல், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா. 
ஆஸ்திரேலியா (உத்தேச லெவன்): டேவிட் வார்னர், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், மேத்யூ வேட் 
(விக்கெட் கீப்பர்), ஜேம்ஸ் ஃபாக்னர், நாதன் கோல்ட்டர் நீல், பேட் கம்மின்ஸ், ஆடம் ஸம்பா. 

30 ஆண்டுகளுக்குப் பிறகு...

சென்னையில் 30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் ஒரு நாள் ஆட்டத்தில் மோதவுள்ளன. இதற்கு முன்னர் 1987 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியின்போது சென்னையில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் மோதின. அதில் ஒரு ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா வெற்றி கண்டது குறிப்பிடத்தக்கது.


ரோஹித் 1,104

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக இதுவரை 13 ஆட்டங்களில் விளையாடியுள்ள இந்திய தொடக்க வீரர் ரோஹித் சர்மா 1,104 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அவருடைய சராசரி 110.4, ஸ்டிரைக் ரேட் 102.88.

முதல் 3 ஆட்டம்: அக்ஷர் விலகல்; ஜடேஜா சேர்ப்பு

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 3 ஒரு நாள் ஆட்டங்களில் இருந்து இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் அக்ஷர் படேல் விலகியுள்ளார். இடது கணுக்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக அவர் விலகியிருக்கிறார். 
அவருக்குப் பதிலாக ரவீந்திர ஜடேஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் என பிசிசிஐ சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மைதானம் எப்படி?

சேப்பாக்கம் மைதானத்தைப் பொறுத்தவரையில் சமீப காலங்களில் நடைபெற்ற ஒரு நாள் போட்டிகளில் பெரிய அளவில் ரன் குவிக்கப்படவில்லை. இங்கு முதல் இன்னிங்ஸின் சராசரி ஸ்கோர் 264 ஆகும். மதிய வேளையில் மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 


கே.எல்.ராகுல் தனித்துவமிக்க வீரர். அவர், அனைத்துவிதமான போட்டிகளிலும் தனது திறமையை நிரூபித்துள்ளார். அவர் மீது எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அவர் ஓர் ஆட்டத்தில் சிறப்பாக ஆடி ஃபார்முக்கு திரும்பிவிட்டால், அதன்பிறகு தனது அபார ஆட்டத்தால் எங்கள் அணிக்கு வெற்றி தேடித்தர ஆரம்பித்துவிடுவார். மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசக்கூடிய இரு சுழற்பந்து வீச்சாளர்கள் (குல்தீப், சாஹல்) எங்கள் அணியில் இருப்பது கூடுதல் பலமாகும்.

-விராட் கோலி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com