கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது எப்போது?: ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.15 கோடி 6 மாதங்களாக காத்திருப்பு

கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகளுக்கு ரூ.15 கோடி நிதி வழங்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும், போட்டி நடத்தப்படவில்லை.
கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் நடைபெறுவது எப்போது?: ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.15 கோடி 6 மாதங்களாக காத்திருப்பு

கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கு தமிழகத்தில் உள்ள 12,524 ஊராட்சிகளுக்கு ரூ.15 கோடி நிதி வழங்கப்பட்டு 6 மாதங்கள் ஆகியும், போட்டி நடத்தப்படவில்லை. அதை விரைவில் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டுமென விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 
கிராமப்புற அளவில் திறமையான விளையாட்டு வீரர்களைக் கண்டறிந்து, மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்கச் செய்யும் வகையில் அவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி, மார்ச் மாதங்களில் கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு வருகின்றன. 
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட விளையாட்டு அலுவலகங்கள் சார்பில் நடத்தப்பட்டு வந்த இந்த விளையாட்டுப் போட்டி, கடந்த ஆண்டு முதல் சம்பந்தப்பட்ட ஊராட்சி நிர்வாகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
போட்டிகளை நடத்துவதற்காக ஊராட்சிக்கு ரூ.12 ஆயிரம் வீதம், தமிழகம் முழுவதுமுள்ள 12,524 ஊராட்சிகளுக்கு ரூ.15 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த நிதி, கடந்த 6 மாதங்களுக்கு முன்பே அந்தந்த வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மூலம் ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டுவிட்டது. இதில் ரூ.2ஆயிரம், சான்றிதழ் அச்சிடுதல், மாவட்ட விளையாட்டு அலுவலர்கள் பயணப்படி உள்ளிட்டவற்றுக்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதுதவிர அரசின் சார்பில் ஒவ்வொரு ஊராட்சிக்கும் ரூ.8 ஆயிரம் மதிப்பிலான பரிசுப் பொருள்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 
தடகளம், கபடி, கால்பந்து, வாலிபால் உள்ளிட்ட பல போட்டிகளை நடத்துவதற்கு அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், விளையாட்டு ஆர்வம் உள்ள சில ஊராட்சிகளில் மட்டுமே அதிக அளவிலான போட்டிகள் நடத்தப்படுகின்றன. கோல் கம்பம் உள்ளிட்ட கட்டமைப்பு வசதியில்லாத பல கிராமங்களில் தடகளம், கபடி உள்ளிட்ட போட்டிகளே பெரும்பாலும் நடத்தப்பட்டன. ஆண்டுக்கு ஒருமுறை நடத்தப்படும் இந்த வகை போட்டிகளால், அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் பல்வேறு ஊராட்சிகளில் அமைக்கப்பட்ட விளையாட்டுத் திடல்களும் புதுப் பொலிவு பெற்று வந்தன. ஆனால், நிகழாண்டுக்கான போட்டிகளை நடத்துவதற்கு நிதி ஒதுக்கீடு செய்து 6 மாதங்களாகியும், இதுவரை போட்டிகள் நடத்தப்படாமல் இருப்பது விளையாட்டு ஆர்வலர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து விளையாட்டு ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது: கிராம மக்களிடையே சமூக நல்லுணர்வு மற்றும் ஒற்றுமையை மேம்படுத்துவதில் கிராம ஊராட்சி விளையாட்டுப் போட்டிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. இந்தப்போட்டி, பல கிராமங்களில் முறையாக நடத்தப்படவில்லை என்ற புகார் ஒருபுறம் இருந்தாலும், விளையாட்டு ஆர்வம் உள்ள கிராமங்களில் சிறப்பாகவே நடத்தப்பட்டு வந்துள்ளது.
குறிப்பாக பிப்ரவரி மாதத்தில் இந்த போட்டிகள் நடத்தப்பட்டதால் தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையையொட்டி நடத்தப்படும் விளையாட்டு விழாவாக அமைந்தது. பல கிராமங்களில் போட்டிகள் நடத்தப்படுவதில் குறைகள் இருந்தாலும், அவற்றை சீரமைப்பு செய்து சிறப்பாக நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டும். இனியும் காலதாமதம் செய்யாமல் விரைவில் போட்டிகளை நடத்துவதற்கான அறிவிப்பினை அரசு வெளியிட வேண்டும் என தெரிவித்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com