கோலியின் தாக்குதல் பாணி ஆட்டம் என்னை அபாரமாக பந்துவீச வைத்தது

கோலியின் தாக்குதல் பாணி ஆட்டம்தான் என்னை அபாரமாக பந்துவீச வைத்தது என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் தெரிவித்தார்.
கோலியின் தாக்குதல் பாணி ஆட்டம் என்னை அபாரமாக பந்துவீச வைத்தது

கோலியின் தாக்குதல் பாணி ஆட்டம்தான் என்னை அபாரமாக பந்துவீச வைத்தது என்று இந்திய சுழற்பந்து வீச்சாளர் யுவேந்திர சாஹல் தெரிவித்தார்.
சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற முதல் ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் இந்திய அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 26 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவை தோற்கடித்தது. 
இதில் யுவேந்திர சாஹல் 5 ஓவர்களில் 30 ரன்களைக் கொடுத்து மேக்ஸ்வெல் உள்ளிட்ட 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தி, இந்தியாவின் வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தார். 
இதன்பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த அவர் மேலும் கூறியதாவது: மணிக்கட்டை பயன்படுத்தி பந்துவீசக்கூடிய சுழற்பந்து வீச்சாளர்கள் பெரும்பாலும் தாக்குதல் பாணியில் அபாரமாக பந்துவீசக் கூடியவர்களாக இருப்பார்கள். கேப்டன் தாக்குதல் பாணி ஆட்டத்தைக் கடைப்பிடிக்கக் கூடியவராக இருக்கும்போது, அந்த அணியின் பந்துவீச்சாளர்கள் அதிக சுதந்திரத்தோடு செயல்பட முடியும். 
நானும், குல்தீப் யாதவும் தாக்குதல் பாணியிலான பந்துவீச்சாளர்கள் என்பதால் விக்கெட்டை வீழ்த்துவதிலேயே தீவிரம் காட்டுகிறோம். முதலில் குல்தீப் யாதவ் பந்துவீசினால், பந்து எங்கிருந்து சுழல்கிறது, எப்படி எதிரணி பேட்ஸ்மேனை வீழ்த்துவது என்பது குறித்து நான் அவருக்கு ஆலோசனை சொல்வது வழக்கம். 
விக்கெட்டை வீழ்த்தும் முனைப்பில் செயல்படுவதால் பாதுகாப்பாக பந்துவீசுவது என்ற பேச்சுக்கே இடமில்லை. அப்படி பந்துவீச நினைத்தால், வெற்றி பெற முடியாது. 
ஐபிஎல் போட்டியில் மேக்ஸ்வெல்லுக்கு அதிக அளவில் பந்துவீசிய அனுபவம் எனக்கு உண்டு. இன்றைய (ஞாயிற்றுக்கிழமை) ஆட்டத்தைப் பொறுத்தவரையில் எங்களால் பெரிய அளவில் ரன் கொடுக்காமல் பாதுகாப்பாக பந்துவீச முடியவில்லை. அதனால் எங்களின் பந்துவீசும் திட்டத்தில் மாற்றம் செய்தோம். மேக்ஸ்வெல் நல்ல ஷாட்களை மட்டுமே ஆடினால், நீண்ட நேரம் தாக்குப்பிடிப்பார். அதேநேரத்தில் அவர் ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே விளையாடினால் விரைவில் ஆட்டமிழப்பார் என நினைத்தோம். 
அதனால் மேக்ஸ்வெல் தனது கால்களை எப்படி நகர்த்துகிறார் என்பதைப் பொறுத்து ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே பந்துவீசுமாறு தோனியும், கோலியும் என்னிடம் தெரிவித்தார்கள். அதன்படி சிறப்பாக பந்துவீசி அவரை வீழ்த்திவிட்டேன்.
ஆடுகளம் பேட்டிங்கிற்கு சாதகமாக இல்லாதபோதும், தோனியும், ஹார்திக் பாண்டியாவும் விளையாடிய விதம் மிக அற்புதமானதாகும். இங்கு நாங்கள் 230 முதல் 240 ரன்கள் வரை எடுத்திருந்தால், அதுவே நல்ல ஸ்கோராக இருந்திருக்கும். இந்த ஆட்டத்தில் நாங்கள் 87 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்தபோது, ஆஸ்திரேலியா வெற்றி பெறுவதற்கு 70 சதவீத வாய்ப்பு இருந்தது. ஆடம் ஸம்பா ஓவரில் பாண்டியா விளையாடிய விதம் (5 பந்துகளில் 23) ஆட்டத்தின் போக்கை மாற்றிவிட்டது. நாங்களும் சிறப்பாக பந்துவீசிவிட்டோம் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com