ஜப்பான் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன்: இரு பிரிவுகளின் பிரதான சுற்றுக்கு சாத்விக்சாய்ராஜ் முன்னேற்றம்

ஜப்பான் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஆடவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரதான சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினார்.

ஜப்பான் சூப்பர் சீரிஸ் பாட்மிண்டன் போட்டியில் இந்திய வீரர் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி ஆடவர் இரட்டையர் மற்றும் கலப்பு இரட்டையர் பிரிவில் பிரதான சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினார்.
டோக்கியோவில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியின் ஆடவர் இரட்டையர் பிரிவில் சிரக் ஷெட்டியுடன் ஜோடி சேர்ந்துள்ளார் சாத்விக்சாய்ராஜ். இந்த ஜோடி தனது முதல் சுற்றில் ஜப்பானின் ஹிரோகட்சு ஹஷிமோடோ-ஹிரோயுகி சேகி ஜோடியை 14-21, 22-20, 21-18 என்ற செட் கணக்கில் வீழ்த்தியது.
2-ஆவது சுற்றில் ஜப்பானின் கீசிரோ மட்சுய்-யோஷினோரி டேகியுசி ஜோடியை 21-18, 21-12 என்ற நேர் செட் கணக்கில் வென்று பிரதான சுற்றுக்கு முன்னேறியது. சாத்விக்சாய்ராஜ்-சிரக் ஜோடி, அந்த சுற்றில் போட்டித் தரவரிசையில் 3-ஆவது இடத்தில் உள்ள இந்தோனேஷியாவின் மார்கஸ் ஃபெர்னால்டி கிடியான்-கெவின் சஞ்சயா சுகாமுல்ஜோ ஜோடியை புதன்கிழமை சந்திக்கிறது.
இதேபோல், கலப்பு இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, தனது முதல் சுற்றில் 21-13, 21-15 என்ற நேர் செட் கணக்கில் ஜப்பானின் ஹிரோகி மிடோரிகவா-நட்சு சைடோ இணையை வீழ்த்தியது. அதே ஜோடி தனது 2-ஆவது சுற்றில் ஜப்பானின் ஹிரோகி ஒகாமுரா-நாரு ஷினோயா ஜோடியை 21-18, 21-9 என்ற செட் கணக்கில் வென்றது. இதையடுத்து சாத்விக்சாய்ராஜ்-அஸ்வினி பொன்னப்பா ஜோடி புதன்கிழமை தனது பிரதான சுற்றில் தாய்லாந்தின் டின் இஸ்ரியானெட்-பச்சராபுன் சோசுவாங் ஜோடியை எதிர்கொள்கிறது.
இந்நிலையில் கலப்பு இரட்டையர் பிரிவின் பிரதான சுற்றில், இந்தியாவின் பிரணவ் ஜெர்ரி சோப்ரா-சிக்கி ரெட்டி ஜோடி தனது 2-ஆவது சுற்றில் 21-19, 17-21, 21-15 என்ற செட் கணக்கில் ஜப்பானின் டோமோயா டகாஷினா-ரீ எடோ ஜோடியை வென்றது.
இதனிடையே, இப்போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவு முதல் தகுதிச்சுற்றில் 21-15, 21-14 என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் எமில் ஹோல்ஸ்டை வென்ற இந்தியாவின் பி.காஷ்யப், 2-ஆவது தகுதிச் சுற்றில் ஜப்பானின் யு இகாரஷியிடம் 11-21, 21-18, 14-21 என்ற செட் கணக்கில் வீழ்ந்து போட்டியிலிருந்து வெளியேறினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com