பேட்டிங்கைப் பலப்படுத்தும் ஆஸ்திரேலியா; இந்தூரில் தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

இந்திய அணி, வெற்றியைத் தொடரும் முனைப்பில் 3-வது ஆட்டத்தில் களமிறங்குகிறது...
பேட்டிங்கைப் பலப்படுத்தும் ஆஸ்திரேலியா; இந்தூரில் தொடரைக் கைப்பற்றுமா இந்தியா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இந்த ஆட்டத்தில் வெற்றி கண்டதன் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட இந்தத் தொடரில் 2-0 என முன்னிலை பெற்றுள்ளது இந்தியா. மேலும் இந்திய அணி, ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் தொடர்ந்து 8-வது வெற்றியைப் பெற்றுள்ளது. 

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் இந்தூரில் நாளை நடைபெறுகிறது. சென்னை மற்றும் கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் இரு ஆட்டங்களில் ஆஸ்திரேலியாவை வீழ்த்தியதன் மூலம் இந்தத் தொடரை வெற்றிகரமாகத் தொடங்கியிருக்கும் இந்திய அணி, வெற்றியைத் தொடரும் முனைப்பில் 3-வது ஆட்டத்தில் களமிறங்குகிறது. அதேநேரத்தில் ஸ்மித் தலைமையிலான ஆஸ்திரேலிய அணி வெற்றிப் பாதைக்கு திரும்புவதில் தீவிரமாக உள்ளது. 

இந்திய அணியின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் முன்னணி தொடக்க வீரரான ஷிகர் தவன் முதல் 3 ஆட்டங்களில் இருந்து விலகியுள்ளார். அதனால் இந்தப் போட்டியிலும் ரோஹித் சர்மாவுடன் அஜிங்க்ய ரஹானே தொடக்க வீரராகக் களமிறங்குவார். ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே ஆகியோர் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பது அவசியமாகும். கடந்த ஆட்டத்தில் சொற்ப ரன்களில் வெளியேறிய ரோஹித் சர்மா இந்த ஆட்டத்தில் சிறப்பாக ஆடினால் மட்டுமே இந்திய அணியால் பெரிய அளவில் ரன் குவிக்க முடியும். சமீபகாலமாக உச்சகட்ட ஃபார்மில் இருக்கும் ரோஹித் சர்மா, எப்போதுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடியவர் என்பது இந்தியாவுக்கு கூடுதல் பலமாகும். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரு இரட்டைச் சதங்களை விளாசியிருக்கிறார் ரோஹித் சர்மா. அதில் முதல் இரட்டைச் சதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளாசப்பட்டதாகும். ரஹானே மீண்டும் ரன்கள் குவிக்கத் தொடங்கியிருப்பது இந்திய அணியின் பேட்டிங் பலத்தை நிரூபிக்கிறது. மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒரு நாள் தொடரில் தொடக்க வீரராக களமிறங்கி கலக்கிய ரஹானே, கடந்த போட்டியில் அரை சதம் எடுத்தார். 64 பந்துகளில் 7 பவுண்டரிகளுடன் 55 ரன்கள். அதுபோலவே இந்தமுறையும் வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி, இந்திய அணியில் தனது இடத்தை ஸ்திரப்படுத்திக் கொள்ள முயற்சிப்பார் என நம்பலாம்.

மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் கோலி மிகப்பெரிய பலமாக திகழ்கிறார். கடந்த ஆட்டத்தில் 92 ரன்கள் எடுத்த கோலி, இந்த ஆட்டத்திலும் சிறப்பாக விளையாடுவார் எனஎதிர்பார்க்கப்படுகிறது. 4-வது பேட்ஸ்மேன் இடத்தில் களமிறங்கும் மணீஷ் பாண்டே, ரன்கள் குவிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார். இல்லாவிட்டால் அவருடைய வாய்ப்பு கேஎல் ராகுலுக்குச்சென்றுவிடும். கேதார் ஜாதவ், விக்கெட் கீப்பர் தோனி, ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார் ஆகியோரும் பேட்டிங்கில் பலம் சேர்க்கின்றனர். முதல் போட்டியைப் போல இந்தூரிலும் தோனி - பாண்டியா ஜோடி ஆஸ்திரேலியப் பந்துவீச்சைப் பதம் பார்க்கும் என ரசிகர்கள் எண்ணுகிறார்கள். தோனி, கோலி, ரோஹித் சர்மா, தவன் வரிசையில் பாண்டியாவும் இந்திய ஒருநாள் அணியில் தவிர்க்கமுடியாத வீரராகியுள்ளார். சென்னை ஒருநாள் போட்டியில் சிக்ஸர் மழை பொழிந்து இந்திய ரசிகர்களிடம் மேலும் நம்பிக்கை பெற்றுள்ளார்.

வேகப்பந்து வீச்சில் புவனேஸ்வர் குமார்-ஜஸ்பிரீத் பூம்ரா கூட்டணி சிறப்பாகப் பந்துவீசி வருகிறது. கடந்த போட்டியில் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 6.1 ஓவர்களில் 9 ரன்களை மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். 

சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் அக்ஷர் படேலுக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டுள்ளது. எனவே குல்தீப் யாதவ் - யுவேந்திர சாஹல் கூட்டணி இந்தூரிலும் தொடரவுள்ளது. கடந்த இருஆட்டங்களிலும் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன்களுக்குச் சிம்மசொப்பனமாக திகழும் இந்த ஜோடி, இந்த ஆட்டத்திலும் கலக்கக் காத்திருக்கிறது. கொல்கத்தா போட்டியில் சுழற்பந்து வீச்சாளர் குல்தீப் யாதவ் ஹாட்ரிக் விக்கெட்டுகளை எடுத்தார். 33-வது ஓவரை வீசிய குல்தீப் யாதவ், 2-ஆவது பந்தில் மேத்யூ வேட் (2), 3-ஆவது பந்தில் ஆஷ்டன் அகர் (0), 4-ஆவது பந்தில் பேட் கம்மின்ஸ் (0) ஆகியோரை வீழ்த்தி ஹாட்ரிக் சாதனை படைத்தார். இதனால் அவர் மீது கூடுதல் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஆஸ்திரேலிய அணியைப் பொறுத்தவரையில் கடந்த இரு ஆட்டங்களிலும் காயம் காரணமாக விலகிய ஃபிஞ்ச், இந்த ஆட்டத்தில் களமிறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அவரும் வார்னரும் அதிரடியாக விளையாடுகிற பட்சத்தில் அது இந்திய அணிக்குக் கடும் நெருக்கடியை அளிக்கும். ஆசிய மண்ணில் எப்போதுமே சிறப்பாக ஆடக்கூடியவரான டேவிட் வார்னர், இந்த ஆட்டத்திலும் சிறப்பான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுப்பார் என நம்பலாம். டேவிட் வார்னர், ஃபிஞ்ச் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித், கிளன் மேக்ஸ்வெல் ஆகியோரின் ஆட்டத்தைப் பொறுத்தே ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பு அமையும். கடந்த இரு ஆட்டங்களிலும் முக்கியமான கட்டங்களில் சிக்ஸர்களை விளாசி மிரட்டிய மேக்ஸ்வெலின் அதிரடி, இந்த ஆட்டத்திலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆல்ரவுண்டர் மார்கஸ் ஸ்டாய்னிஸின் சிறப்பான பேட்டிங் ஆஸி. அணிக்கு மிகுந்த நம்பிக்கையை அளித்துள்ளது. அவர், 65 பந்துகளில் 3 சிக்ஸர், 6 பவுண்டரிகளுடன் 62 ரன்கள் சேர்த்து ஆட்டமிழக்காமல் இருந்தார். விக்கெட் கீப்பர் மேத்யூ வேடுக்குப் பதிலாக பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப் களமிறங்கும் வாய்ப்புண்டு. விக்கெட் கீப்பிங் பயிற்சிகளில் அவர் ஈடுபட்டதால் இந்த எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. ஸ்மித், மேக்ஸ்வெல், ஸ்டாய்னிஸ் போன்றவர்கள் ஐபிஎல் போட்டியில் விளையாடிய அனுபவம் கொண்டவர்கள் என்பதால், அவர்களுக்கு இங்குள்ள சூழல் குறித்து நன்கு தெரியும். எனினும் அவர்கள் இந்திய சுழற்பந்து வீச்சாளர்களை எப்படி எதிர்கொள்கிறார்கள் என்பதைப் பொறுத்தே ஆஸ்திரேலியாவுக்குச் சாதகமான சூழல் ஏற்படும். ஃபிஞ்ச், ஹேண்ட்ஸ்காம்ப் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டால் அது ஆஸி. அணியின் பேட்டிங்கை மேலும் பலப்படுத்தும். இந்திய அணியின் பந்துவீச்சுக்குக் கடும் சவாலை அளிக்கும்.

வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரையில் முன்னணி பந்துவீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோர் இந்தத் தொடரில் விளையாடாதது ஆஸ்திரேலியாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது. எனினும் இரு போட்டிகளிலும் நாதன் கோல்ட்டர் நீல், பேட் கம்மின்ஸ் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசினார்கள். கொல்கத்தா போட்டியில் ஆஸ்திரேலிய அணியில் ஜேம்ஸ் ஃபாக்னர், ஆடம் ஸம்பா ஆகியோருக்குப் பதிலாக கேன் ரிச்சர்ட்சன், ஆஷ்டன் அகர் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். அவ்விருவரும் இந்தூரிலும் விளையாடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான தொடரை இந்தியா 5-0 என்ற கணக்கில் கைப்பற்றுமானால் தரவரிசையில் முதலிடத்தைப் பிடிக்கும். தற்போதைய நிலையில் தென் ஆப்பிரிக்கா முதலிடத்திலும், இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் முறையே 2 மற்றும் 3-வது இடங்களிலும் உள்ளன.

இந்தூரில் கடந்த இரண்டு வாரங்களாகத் தொடர் மழை பெய்துள்ளது. நாளையும் மழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. ஆடுகளம் பேட்டிங்குக்குச் சாதகமாக உள்ளதால், மழையால் நாளைய ஆட்டம் பாதிக்கப்படாவிட்டால் இந்த ஆடுகளத்தில் 300 ரன்களைக் குவிக்க முடியும் என்று கூறப்படுகிறது.

இந்தியா (உத்தேச லெவன்): ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே, கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, புவனேஸ்வர் குமார், குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல், ஜஸ்பிரித் பூம்ரா. 

ஆஸ்திரேலியா (உத்தேச லெவன்): டேவிட் வார்னர், ஃபிஞ்ச், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டாய்னிஸ், நாதன் கோல்ட்டர் நீல், பேட் கம்மின்ஸ், ஆஷ்டன் அகர், கேன் ரிச்சர்ட்சன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com