ஆஸி. சிறப்பான தொடக்கம்: 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள்!

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளார்கள்...
ஆஸி. சிறப்பான தொடக்கம்: 16 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 100 ரன்கள்!

இந்தியாவுக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய தொடக்க வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை அளித்துள்ளார்கள். 

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் பெங்களூரில் இன்று நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் வெல்லும்பட்சத்தில் இந்திய அணியின் ஒரு நாள் கிரிக்கெட் வரலாற்றில் தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வென்ற பெருமையைப் பெறும். இந்திய அணி தனது 926-வது ஆட்டத்தில் மேற்கண்ட சாதனையை படைக்கும் வாய்ப்பை நெருங்கியுள்ளது. கடந்த ஜூலைக்குப் பிறகு இந்திய அணி ஒரு நாள் ஆட்டத்தில் தோல்வியை சந்திக்கவில்லை. அதேநேரத்தில் ஆஸ்திரேலிய அணி வெளிநாட்டு மண்ணில் கடைசியாக விளையாடிய 11 ஆட்டங்களிலும் தோற்றுள்ளது.

பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் இந்தியாவும், ஆஸ்திரேலியாவும் 6 ஆட்டங்களில் மோதியுள்ளன. அதில் இந்தியா 4 வெற்றிகளையும், ஒரு தோல்வியையும் சந்தித்துள்ளது.

தற்போதைய நிலையில் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்ட இந்திய அணி, தொடரையும் கைப்பற்றிவிட்டது. எனவே இந்த ஆட்டத்தில் எவ்வித நெருக்கடியும் இன்றி இந்திய அணி களமிறங்கியுள்ளது. ஆனால் ஆஸ்திரேலிய அணி, இந்தத் தொடரில் எஞ்சிய இரு ஆட்டங்களிலும் தோற்குமானால், தரவரிசையில் இறக்கத்தைச் சந்திக்கும். அதாவது 3-வது இடத்தில் இருந்து 4-வது இடத்துக்குத் தள்ளப்படும். எனவே கடும் நெருக்கடிக்கு மத்தியில் களமிறங்கியுள்ளது ஆஸ்திரேலியா.

டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி, பேட்டிங்கைத் தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் குல்தீப், பூம்ரா, புவனேஸ்வர் ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்குப் பதிலாக அக்‌ஷர் படேல், ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளார்கள். ஆஸ்திரேலிய அணியில் மேத்யூ வேட், ஆடம் ஸம்பா இடம்பெற்றுள்ளார்கள். மேக்ஸ்வெல் அணியிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். காயம் காரணமாக அகர் தொடரிலிருந்து விலகியுள்ளார்.

பூம்ரா, புவனேஸ்வர் குமார் இல்லாததால் ஆஸி. தொடக்க வீரர்கள் அதிரடியாக விளையாடினார்கள். ஷமி, உமேஷ் யாதவின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டார்கள். தொடர்ந்து பவுண்டரிகள் அடித்து ஸ்கோரை நன்கு உயர்த்தினார்கள். வார்னரும் ஃபிஞ்சும் ஒன்றாகச் சேர்ந்து 53 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார்கள். இருவரில் டேவிட் வார்னர் முதலில் அரை சதம் எடுத்தார். 1 சிக்ஸர், 8 பவுண்டரிகளுடன் 45 பந்துகளில் அரை சதம் எடுத்தார். பிறகு, 15.4 ஓவர்களில் 100 ரன்கள் எட்டினார்கள். இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 300 ரன்களுக்கு அதிகமாக எடுக்கும் என்கிற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com