இளைஞருடன் கடுமையான மோதலில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ்: வெளியான வீடியோவால் பரபரப்பு!

பிரிஸ்டோலில், 27 வயது இளைஞருடன் மோதலில் ஈடுபட்டதற்காக கைதாகி விடுதலையானார், இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ்...
இளைஞருடன் கடுமையான மோதலில் ஈடுபட்ட பென் ஸ்டோக்ஸ்: வெளியான வீடியோவால் பரபரப்பு!

பிரிஸ்டோலில், 27 வயது இளைஞருடன் மோதலில் ஈடுபட்டதற்காக கைதாகி விடுதலையானார், இங்கிலாந்து அணியின் துணை கேப்டன் பென் ஸ்டோக்ஸ். இந்நிலையில் குறிப்பிட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. இதில் ஓர் இளைஞருடன் கடுமையான மோதலில் ஸ்டோக்ஸ் ஈடுபட்டதைக் கண்டு கிரிக்கெட் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளார்கள். 

இங்கிலாந்து-மேற்கிந்தியத் தீவுகள் இடையிலான 3-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் பிரிஸ்டோலில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. அதில் இங்கிலாந்து 124 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதன்பிறகு அங்குள்ள இரவு நேர கேளிக்கை விடுதியில் திங்கள்கிழமை அதிகாலையில் வெற்றியைக் கொண்டாடினார்கள். அப்போது, பென் ஸ்டோக்ஸுக்கும், அங்கு வந்த 27 வயது இளைஞருக்கும் இடையே சாலை ஓரத்தில் மோதல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் அவரைத் தாக்கியுள்ளார். அதில் முகத்தில் பலத்த காயமடைந்த அந்த இளைஞர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், பென் ஸ்டோக்ஸைக் கைது செய்தனர். எனினும் வழக்கு எதுவும் பதிவு செய்யாமல், விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையோடு பென் ஸ்டோக்ஸ் விடுவிக்கப்பட்டார். இதேபோல் அலெக்ஸ் ஹேல்ஸும் விசாரணைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் இருவரும் அணியினருடன் லண்டன் செல்லவில்லை. இதையடுத்து பென் ஸ்டோக்ஸ் மற்றும் அவருடன் இருந்த மற்றொரு கிரிக்கெட் வீரரான அலெக்ஸ் ஹேல்ஸ் ஆகியோர் ஓவலில் நேற்று நடைபெற்ற மேற்கிந்தியத்தீவுகள் அணிக்கு எதிரான 4-வது ஒரு நாள் ஆட்டத்தில் இருந்து நீக்கப்பட்டார்கள். 

இந்நிலையில் ஸ்டோக்ஸ் மோதல் தொடர்பான வீடியோவை இங்கிலாந்தைச் சேர்ந்த தி சன் பத்திரிகை வெளியிட்டுள்ளது. இதில் குறிப்பிட்ட இளைஞருடன் ஸ்டோக்ஸ் கடுமையான மோதலில் ஈடுபட்டிருப்பது தெளிவாகத் தெரிகிறது. ஒருநாள் தொடர் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வேளையில் இங்கிலாந்து அணியின் பிரபல கிரிக்கெட் வீரர் இதுபோன்ற ஒரு செயலில் ஈடுபட்டது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சிக்கு ஆளாக்கியுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஆஷஸ் டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் விளையாடவுள்ள 16 பேர் கொண்ட இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் பென் ஸ்டோக்ஸ் இடம்பெற்றுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com