5-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா மீண்டும் நெருக்கடி தருமா?

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா ஏற்கெனவே கைப்பற்றிவிட்ட நிலையில்...
5-வது ஒருநாள் போட்டி: ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா மீண்டும் நெருக்கடி தருமா?

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் ஆட்டத்தில் இந்தியா டக் வொர்த் லீவிஸ் முறைப்படி 26 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. 2-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. 3-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது இந்தியா. ஆனால் 4-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 21 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது ஆஸ்திரேலியா.

5 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரை இந்தியா ஏற்கெனவே கைப்பற்றிவிட்ட நிலையில், இந்த ஆட்டத்தில் வென்றதன் மூலம் முதல் வெற்றியைப் பதிவு செய்த ஆஸ்திரேலியா, இந்தியாவின் தொடர் வெற்றிக்கும் முற்றுப்புள்ளி வைத்தது. முன்னதாக இந்தியா தொடர்ச்சியாக 10 ஆட்டங்களில் வென்றிருந்தது.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையிலான 5-வது ஒரு நாள் கிரிக்கெட் ஆட்டம் நாகபுரியில் நாளை நடைபெறுகிறது.

தற்போதைய நிலையில் முதல் 3 ஆட்டங்களிலும் வெற்றி கண்ட இந்திய அணி, 4-வது போட்டியில் தோற்றுப்போனதால் நாளைய ஆட்டத்தில் மீண்டும் வெற்றிப் பாதையில் செல்ல முனைப்புடன் களமிறங்கும். கடந்த ஆட்டத்தில் சிறப்பாக விளையாடியதுபோல இந்தமுறையும் அதேபோல திறமையை வெளிப்படுத்தி ஆறுதல் வெற்றி பெற ஆஸ்தி்ரேலிய அணி முயற்சி செய்யும்.

பெங்களூரில் ஆட்டத்தில் இந்திய அணியில் 3 மாற்றங்கள் செய்யப்பட்டிருந்தன. புவனேஸ்வர் குமார், ஜஸ்பிரித் பூம்ரா, குல்தீப் யாதவ் ஆகியோருக்குப் பதிலாக முகமது சமி, உமேஷ் யாதவ், அக்ஷர் படேல் ஆகியோர் சேர்க்கப்பட்டனர். இந்நிலையில் இந்திய அணியில் நாளைய மாற்றங்கள் எவ்வாறு இருக்கும் என்கிற ஆவல் எழுந்துள்ளது. 

இந்தியாவின் பேட்டிங்கைப் பொறுத்தவரையில் தொடக்க வீரர்கள் அஜிங்க்ய ரஹானே, ரோஹித் சர்மா ஆகிய இருவரும் அபாரமாக ஆடி வருகின்றனர். இந்தத் தொடரில் ரோஹித் சர்மா 171 ரன்களும் ரஹானே 183 ரன்களும் எடுத்துள்ளார்கள். ரோஹித் சர்மா, எப்போதுமே ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சிறப்பாக ஆடக்கூடியவர் என்பது இந்தியாவுக்கு கூடுதல் பலமாகும். ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இரு இரட்டைச் சதங்களை விளாசியிருக்கிறார் ரோஹித் சர்மா. அதில் முதல் இரட்டைச் சதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக விளாசப்பட்டதாகும். ரஹானே மீண்டும் ரன்கள் குவிக்கத் தொடங்கியிருப்பது இந்திய அணியின் பேட்டிங் பலத்தை நிரூபிக்கிறது. இந்தத் தொடரில் மூன்று அரை சதங்கள் எடுத்த ஒரே வீரர், ரஹானே மட்டுமே. 

மிடில் ஆர்டரைப் பொறுத்தவரையில் கேப்டன் விராட் கோலி, எம்.எஸ்.தோனி, ஹார்திக் பாண்டியா ஆகியோர் பலம் சேர்க்கின்றனர். ஒரு நாள் தொடரில் பிரமாண்ட சிக்ஸர்களை விளாசி ரசிகர்களுக்கு விருந்து படைத்து வருகிறார் பாண்டியா. அவரை கட்டுப்படுத்த முடியாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் திணறி வருகிறார்கள். நாளைய ஆட்டத்திலும் பாண்டியா சோதனை அடிப்படையில் முன்வரிசையில் களமிறக்கப்பட வாய்ப்புள்ளது. இந்தத் தொடரில் 222 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் எடுத்த பேட்ஸ்மேன்களில் முதலிடத்தில் உள்ளார். மேலும் அவர் இந்தத் தொடரில் 12 சிக்ஸர்கள் அடித்துள்ளார்கள்.

இதுவரை வாய்ப்பு கிடைக்காத கே.எல்.ராகுல் இந்த ஆட்டத்தில் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அவர் களமிறங்கும்பட்சத்தில் மணீஷ் பாண்டே நீக்கப்படுவார். இந்தத் தொடரில் ஆஸி. வீரர்களான ஃபிஞ்ச், வார்னர் ஆகிய ஒருவரும் தலா ஒரு சதம் எடுத்துள்ளார்கள். ஆனால் ஒரு இந்திய பேட்ஸ்மேனும் இந்தத் தொடரில் சதமடிக்கவில்லை. அந்தக் குறையை நாளைய ஆட்டத்தில் தீர்ப்பார்கள் என நம்பலாம். 

வேகப்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் உமேஷ் யாதவ், ஷமி ஆகிய இருவருக்கும் மற்றுமொரு வாய்ப்பு வழங்கப்படும் எனத் தெரிகிறது. இல்லாவிட்டால் ஷமிக்குப் பதிலாக பூம்ரா அணியில் இடம்பிடிக்கலாம். அதேபோல சுழற்பந்து வீச்சில் யுவேந்திர சாஹலும் அக்‌ஷர் படேலும் மீண்டும் களமிறங்கலாம். இல்லாவிட்டால் அக்‌ஷருக்குப் பதிலாக குல்தீப் யாதவ் விளையாடவும் வாய்ப்புண்டு. 

ஆஸ்திரேலிய பேட்டிங்கின் முதுகெலும்பாக கேப்டன் ஸ்டீவன் ஸ்மித்தும், டேவிட் வார்னரும் திகழ்கிறார்கள். பெங்களூர் போட்டியில் ஆஸ்திரேலியாவின் தொடக்க வீரர்களான ஆரோன் ஃபிஞ்ச் (94), டேவிட் வார்னர் (124) ஜோடி முதல் விக்கெட்டுக்கு 35 ஓவர்களில் 231 ரன்கள் குவித்து வெற்றி தேடித்தந்தது. எனவே இந்தப் போட்டியிலும் இவர்களுடைய பங்களிப்பை ஆஸ்திரேலியா எதிர்பார்க்கும். ஆஸ்திரேலிய அணி ஆரோன் ஃபிஞ்சின் வருகையால் நம்பிக்கை பெற்றுள்ளது. தொடரில் விளையாடிய இரண்டு ஒருநாள் போட்டிகளில் 218 ரன்கள் எடுத்துள்ளார். ஆரோன் ஃபிஞ்ச், டேவிட் வார்னர், ஸ்டீவன் ஸ்மித் ஆகிய 3 பேரும் எப்படி ஆடுகிறார்கள் என்பதைப் பொறுத்தே ஆஸ்திரேலியாவின் ரன் குவிப்பு அமையும். மிடில் ஆர்டரில் டிராவிஸ் ஹெட்,  பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மார்க்ஸ் ஸ்டோனிஸ் போன்ற வலுவான பேட்ஸ்மேன்கள் நம்பிக்கையளிக்கிறார்கள். 

வேகப்பந்துவீச்சைப் பொறுத்தவரையில் முன்னணி பந்துவீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேஸில்வுட் ஆகியோர் இந்தத் தொடரில் விளையாடாதது ஆஸ்திரேலியாவுக்கு பெரும் பின்னடைவாக கருதப்பட்டாலும் பேட் கம்மின்ஸ், நாதன் கோல்ட்டர் நீல், ரிச்சர்ட்சன் ஆகியோர் சிறப்பாகப் பந்துவீசி வருகிறார்கள். பெங்களூர் போட்டியில் ஆஸி. அணி வெற்றி பெற இந்த மூவரும் முக்கியக் காரணம். சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆஷ்டன் அகர் வலது கை சுண்டு விரலில் ஏற்பட்ட காயம் காரணமாக இந்தத் தொடரிலிருந்து விலகிவிட்டார். அதனால் சுழற்பந்து வீச்சைப் பொறுத்தவரையில் ஆடம் ஸம்பாவையே நம்பியுள்ளது ஆஸ்திரேலியா.

இந்தியா (உத்தேச லெவன்): ரோஹித் சர்மா, அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி (கேப்டன்), மணீஷ் பாண்டே/கேஎல் ராகுல், கேதார் ஜாதவ், எம்.எஸ்.தோனி (விக்கெட் கீப்பர்), ஹார்திக் பாண்டியா, உமேஷ் யாதவ், ஷமி/பூம்ரா, அக்‌ஷர் படேல்/குல்தீப் யாதவ், யுவேந்திர சாஹல். 

ஆஸ்திரேலியா (உத்தேச லெவன்): டேவிட் வார்னர், ஃபிஞ்ச், டிராவிஸ் ஹெட், ஸ்டீவன் ஸ்மித் (கேப்டன்), பீட்டர் ஹேண்ட்ஸ்காம்ப், மேத்யூ வேட்/ கிளன் மேக்ஸ்வெல், மார்கஸ் ஸ்டோனிஸ், நாதன் கோல்ட்டர் நீல், பேட் கம்மின்ஸ், ஸம்பா, கேன் ரிச்சர்ட்சன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com