தந்தைக்கு அனுமதி மறுப்பு: கொந்தளித்த சாய்னா, சரிசெய்த இந்திய ஒலிம்பிக் சங்கம்

தந்தைக்கு அனுமதி மறுப்பு: கொந்தளித்த சாய்னா, சரிசெய்த இந்திய ஒலிம்பிக் சங்கம்

தந்தைக்கு அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் இந்திய நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் கோபமடைந்தார்.

ஏப்ரல் 15-ஆம் தேதி முதல் ஆஸ்திரேலியாவில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கி நடைபெறவுள்ளன. இதில் பங்கேற்க இந்திய வீரர், வீராங்கனைகள் ஆஸ்திரேலியா சென்றடைந்தனர். அப்போது இந்தியாவின் பிரபல நட்சத்திர பாட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவால் தந்தை ஹர்வீர் சிங்கிற்கு காமன்வெல்த் கிராமத்தில் அனுமதி மறுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்கள் உடனிருப்பவர்கள், பயிற்சியாளர் ஆகியோருக்கு இந்த கிராமத்தில் அனுமதி வழங்கப்படுவது வாடிக்கை. அவ்வகையில் தனது தந்தைக்கு பணம் செலுத்தி விண்ணப்பதித்த பிறகும் அனுமதி மறுக்கப்பட்டது தொடர்பாக சாய்னா நேவால் கோபமடைந்தார். மேலும் இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் காமன்வெல்த் சம்மேளனம் மற்றும் இந்திய ஒலிம்பிக் சங்கம் ஆகியவற்றுக்கு புகார் அளித்தார்.

இதில் உடனடியாக நடவடிக்கை எடுத்த இந்திய ஒலிம்பிக் சங்கம் இப்பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைத்தது. சாய்னா நேவால் தந்தைக்கு அனுமதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டது. இதற்கு நன்றி தெரிவித்து சாய்னா நேவால் மீண்டும் ட்வீட் செய்தார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

எனது புகார் தொடர்பாக உடனடியாக நடவடிக்கை எடுத்து தீர்வு ஏற்படுத்தியதற்கு நன்றி. இதன்மூலம் மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜ்யவர்தன் ராத்தோர், இந்திய ஒலிம்பிக் சங்க செயலர் ராஜீவ் மேத்தா ஆகியோருக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். இதில் யாருக்காவது நான் இக்கட்டான சூழலை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com