நேற்று 0-2, இன்று 3-2: இந்திய டென்னிஸ் வீரர்கள் அசத்தல்!

நேற்று வாடிப்போயிருந்த இந்திய டென்னிஸ் ரசிகர்கள் அனைவரும் இன்று கொண்டாட்ட மனநிலையில் உள்ளார்கள்...
நேற்று 0-2, இன்று 3-2: இந்திய டென்னிஸ் வீரர்கள் அசத்தல்!

நேற்று வாடிப்போயிருந்த இந்திய டென்னிஸ் ரசிகர்கள் அனைவரும் இன்று கொண்டாட்ட மனநிலையில் உள்ளார்கள்.

சீனாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை தகுதிச்சுற்றுப் போட்டியில் நேற்று நடைபெற்ற இரு ஒற்றையர் ஆட்டங்களிலும் இந்திய அணி தோல்வியடைந்தது.

இன்று நடைபெற்ற இரட்டையர் ஆட்டத்தின் முதல் செட்டையும் இழந்து, இரண்டாவது செட் டை பிரேக்கர் வரைக்கும் சென்றது. அந்தத் தருணத்தில் இந்திய அணி, சீனாவை வீழ்த்தும் என எத்தனை பேர்
எண்ணியிருக்கமுடியும்?

ஆனால் அதன்பிறகு நடந்ததெல்லாமே அதிசயத்துக்கு நிகரானது. 

இரட்டையர் ஆட்டத்தில், லியாண்டர் - போபண்ணா ஜோடி மாவோ ஜின் - ஷாங்க் ஜீ ஜோடியை 5-7, 7-6, 7-6 எனத் தோற்கடித்து இந்திய அணிக்கு முதல் புள்ளியைப் பெற்றுத் தந்தது. இதற்கு முன்பு லியாண்டர் பயஸ், இரட்டையர் பிரிவில் 42 வெற்றிகளை பெற்றிருந்தார். இத்தாலியின் நிக்கோலா பிட்ரான்சலியுடம் 42 வெற்றிகளை பெற்றுள்ள நிலையில் இன்றைய போட்டியில் லியாண்டர் பயஸ்
வெற்றி பெற்று 43 வெற்றிகளுடன் உலக சாதனை நிகழ்த்தியுள்ளார்.

இதையடுத்து ஒற்றையர் ஆட்டங்கள் நடைபெற்றன. முதல் ஆட்டத்தில் ராம்குமார், 7-6(4) 6-3 என்ற நேர் செட்களில் வென்று 2-2 என சமநிலைக்குக் கொண்டுவந்தார். 

யாருமே எதிர்பாராத திருப்பம். கடைசி ஒற்றையர் ஆட்டம் தொடங்கும் முன்பு இரு அணிகளும் சமநிலையில் உள்ளன. கடைசி ஆட்டத்தை வெற்றி பெறும் அணி அடுத்தக் கட்டத்துக்குச் செல்லும்.

நெருக்கடியான இந்த ஆட்டத்தில் சுமித் நாகலுக்குப் பதிலாகக் களமிறங்கிய பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், 6-4, 6-2 என்ற நேர் செட்களில் யிபிங் வு-வைத் தோற்கடித்து அசத்தினார்.

இதனால் 0-2 என்கிற நிலையில் இருந்து சீனாவுக்கு எதிரான இந்தத் தகுதிச்சுற்றுப் போட்டியை 3-2 என்கிற கணக்கில் வென்று அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறியுள்ளது இந்திய அணி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com