கடைசி பந்தில் டேர் டெவில்ஸ் அணி திரில் வெற்றி

மும்பை இண்டியன்ஸ் அணியுடனான ஆட்டத்தில் டேர் டெவில்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. 
கடைசி பந்தில் டேர் டெவில்ஸ் அணி திரில் வெற்றி

மும்பை இண்டியன்ஸ் அணியுடனான ஆட்டத்தில் டேர் டெவில்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது. 
முன்னதாக ஆடிய மும்பை இண்டியன்ஸ் அணி 194/7 ரன்களை குவித்தது. பின்னர் ஆடிய தில்லி அணி 195/3 ரன்களை எடுத்தது.
மும்பை வான்கடே மைதானத்தில் இரு அணிகளுக்கு இடையே ஆன ஐபிஎல் 9-வது போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன.
முதலில் டாஸ் வென்ற டேர் டெவில்ஸ் அணி பீல்டிங்கை தேர்வு செய்தது. இதைத் தொடர்ந்து மும்பை அணி சார்பில் சூர்யகுமார் யாதவ்-எவின் லெவிஸ் இணை களமிறங்கியது. தொடக்கம் முதலே இருவரும் அதிரடியாக ஆடி டேர் டெவில்ஸ் பந்து வீச்சை சிதறடித்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 102 ரன்களை சேர்த்திருந்தனர். லெவிஸ் தலா 4 பவுண்டரி, சிக்ஸருடன் 28 ரன்களை குவித்த நிலையில் ராகுல் தேவடியா பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து 7 பவுண்டரியுடன் 53 ரன்களை குவித்த சூர்யகுமார் யாதவும், ராகுல் பந்தில் ஆட்டமிழந்தார்.
பின்னர் களமிறங்கிய இஷான் கிஷன் 2 சிக்ஸர், 5 பவுண்டரியுடன் 44 ரன்களை குவித்து கிறிஸ்டின் பந்தில் போல்டானார். மும்பை கேப்டன் ரோஹித் சர்மா 18, பொல்லார்ட் 0, க்ருணால் பாண்டியா 11, ஹர்திக் பாண்டியா 2 என சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். மார்கண்டே, அகிலா தனஞ்செயா ஆகியோர் தலா 4 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தனர். டேர் டெவில்ஸ் தரப்பில் டிரென்ட் பெüல்ட், ராகுல், கிறிஸ்டியன் ஆகியோர் தலா 2 விக்கெட்டையும், முகமது ஷமி 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். மும்பை அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 194 ரன்களைக் குவித்தது. 
வெற்றிக்கு 195 ரன்கள் என்ற இலக்குடன் டேர் டெவில்ஸ் அணி அடுத்து களமிறங்கியது. ஜேசன் ராய், கேப்டன் கம்பீர் இணை தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். கம்பீர் 15 ரன்களில் முஸ்தபிசூர் பந்தில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஜேசன் அதிரடியாக ஆடினார்.
அவருடன் இணை சேர்ந்த ரிஷப் பந்தும் சேர்ந்து அதிரடி ஆட்டம் மேற்கொண்டனர். 25 பந்துகளில் 6 பவுண்டரி, 2 சிக்ஸருடன் ரிஷப் பந்த் 47 ரன்களைக் குவித்து க்ருணால் பாண்டியா பந்தில் ஆட்டமிழந்தார். மற்றொரு அதிரடி வீரரான கிளென் மேக்வெல் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். அப்போது தில்லி அணி 14 ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 137 ரன்களை எடுத்திருந்தது.
ஜேசன் ராயுடன் இணை சேர்ந்து ஷ்ரேயஸ் ஐயரும் அதிரடியாக மும்பையின் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தனர். 18-வது ஓவர் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 179 ரன்களை தில்லி அணி குவித்திருந்தது.
6 பவுண்டரி, 6 சிக்ஸருடன் 47 பந்துகளில் அதிரடியாக ஆடி ஜேசன் ராய் 91 ரன்களைக் குவித்தார். ஷ்ரேயஸ் ஐயர் 3 பவுண்டரி, 1 சிக்ஸருடன் 27 ரன்களை குவித்தார். 
19.5-வது ஓவரின் போது வெற்றிக்கு 1 ரன் தேவைப்பட்ட நிலையில் ஜேசன் ராய் வெற்றிக்கான ரன்னை எடுத்தார். இதையடுத்து 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மும்பை அணியை தில்லி வென்றது. தில்லி அணி 20 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 195 ரன்களை எடுத்தது. மும்பை அணி தரப்பில் க்ருணால் பாண்டியா 2விக்கெட்டுகளையும், முஸ்தபிசூர் ரஹ்மான் 1 விக்கெட்டையும் வீழ்த்தினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com