காமன்வெல்த் கேம்ஸில் இந்தியா: அதிகப் பதக்கங்களை அள்ளிய மாநிலங்களில் தமிழகத்துக்கு 2-ம் இடம்!

ஆனால் ஹரியானா வீரர்களுக்குக் கிடைக்கும் தொகையில் மூன்றில் ஒரு பங்குதான் தமிழக வீரர்களுக்குக் கிடைக்கிறது... 
காமன்வெல்த் கேம்ஸில் இந்தியா: அதிகப் பதக்கங்களை அள்ளிய மாநிலங்களில் தமிழகத்துக்கு 2-ம் இடம்!

கோல்ட்கோஸ்ட் நகரில் நடைபெற்ற 21-வது காமன்வெல்த் போட்டி ஞாயிற்றுக்கிழமையுடன் நிறைவடைந்தது. மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா மூன்றாம் இடம் பெற்றுள்ளது.

பிரிட்டிஷ் முடியாட்சியின் கீழ் ஆளப்பட்டு சுதந்திரம் பெற்ற நாடுகள் காமன்வெல்த் நாடுகள் என்று அழைக்கப்படுகின்றன. 53 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்டு காமன்வெல்த் கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஜனநாயகம், மனித உரிமைகள் போன்றவற்றுக்கு காமன்வெல்த் முக்கியத்துவம் அளித்துவருகிறது. 53 நாடுகளே உறுப்பினர்களாக இருந்தாலும், 71 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் இதில் கலந்து கொள்கின்றனர். காமன்வெல்த் நாடுகளிடையே நெருக்கம், தோழமை ஏற்படும் வகையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படுகின்றன. பிரிட்டிஷ் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகள் என்று அழைக்கப்படும் இப்போட்டிகளில் முதல் போட்டிகள் கடந்த 1930-ம் ஆண்டு தொடங்கியது.

கடந்த 4-ம் தேதி கோல்ட்கோல்ஸ்ட் காமன்வெல்த் போட்டி வண்ணமயமாகத் தொடங்கி 12 நாள்களாக நடைபெற்று வந்தது. இதில் 71 நாடுகளைச் சேர்ந்த 4500 வீரர், வீராங்கனைகள் பங்கேற்று பல்வேறு போட்டிகளில் பதக்கங்களை வென்றனர். 26 தங்கம் உள்பட மொத்தம் 66 பதக்கங்களுடன் இந்தியா பதக்கப் பட்டியலில் மூன்றாவது இடத்தைப் பெற்றுள்ளது. ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இங்கிலாந்து இரண்டாம் இடத்திலும் உள்ளன.

இந்தமுறை பளு தூக்குதலில் 9, துப்பாக்கி சுடுதலில் 16, டேபிள் டென்னிஸில் 8, பாட்மிண்டனில் 6, தடகளத்தில் 3, மல்யுத்தத்தில் 12, குத்துச்சண்டையில் 9, ஸ்குவாஷில் 2, பவர்லிப்டிங்கில் 1 என மொத்தம் 66 பதக்கங்களை இந்தியா வென்றது.

இந்திய வீரர்களுக்குக் கிட்டத்தட்ட இணையாக சாதித்துள்ளார்கள் இந்திய வீராங்கனைகள். இந்திய அணி வென்ற 26 தங்கங்களில் 13-ஐ ஆண்களும் 12-ஐ பெண்களும் பெற்றுள்ளார்கள். வெள்ளிப் பதக்கங்களில் ஆண்கள் 9 பெற்றார்கள். வீராங்கனைகள் ஒன்று அதிகமாக 10 வெள்ளிப் பதக்கம் பெற்று இந்திய அணிக்குப் பெருமை சேர்த்துள்ளார்கள்.

இந்தியாவின் மொத்த பதக்கங்கள் - 66 (வீரர்கள்: 35, வீராங்கனைகள்: 28, கலப்பு: 3)

தங்கம் - 26 (வீரர்கள்: 13, வீராங்கனைகள்: 12, கலப்பு: 1)
வெள்ளி - 20 (வீரர்கள்: 9, வீராங்கனைகள்: 10, கலப்பு: 1)
வெண்கலம் - 20 (வீரர்கள் 13, வீராங்கனைகள்: 6, கலப்பு: 1)
அதிகப் பதக்கங்கள் - மனிகா பத்ரா - 4 (தங்கம்: 2, வெள்ளி: 1, வெண்கலம்: 1)

இந்நிலையில் காமன்வெல்த் போட்டியில் இந்திய அணி வென்ற 66 பதக்கங்களில் அதிக பதக்கம் வாங்கிய மாநிலம் என்கிற பெருமையை ஹரியானா பெற்றுள்ளது. 9 தங்கம், 6 வெள்ளி, 7 வெண்கலம் என அந்த மாநிலம் 22 பதக்கங்களை இந்தியாவுக்குப் பெற்றுத் தந்துள்ளது.

அடுத்த இடத்தில் உள்ளது தமிழ்நாடு. 4 தங்கம், 5 வெள்ளி, 2 வெண்கலம் என 11 பதக்கங்களைப் பெற்று தமிழ்நாட்டுக்கும் இந்தியாவுக்கும் பெருமை தேடித் தந்துள்ளார்கள் தமிழக வீரர்கள். தமிழகத்தை விடவும் குறைவான பதக்கங்களைப் பெற்றாலும் மஹாராஷ்டிரா அதிக தங்கங்களை வென்றுள்ளது. 5 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என அந்த மாநிலம் 8 பதக்கங்களைப் பெற்றுத் தந்துள்ளது. தெலங்கானா 7 பதக்கங்களையும் (4 தங்கம், 1 வெள்ளி, 2 வெண்கலம்) ஆந்திரா 6 பதக்கங்களையும் (4 தங்கம், 2 வெள்ளி) வென்றுள்ளன. 

ஜம்மு & காஷ்மிர், ஒடிஷா, உத்தராகண்ட், ஹிமாசல் பிரதேசம், சட்டிஸ்கர், ஜார்கண்ட் ஆகிய மாநில வீரர்களிடமிருந்து இந்தியாவுக்கு ஒரு பதக்கமும் கிடைக்கவில்லை.

இந்தியா சர்பாக கலந்துகொண்ட 218 வீரர்களில் 38 பேர் ஹரியானாவைச் சேர்ந்தவர்கள். தங்கம் வென்ற ஹரியானா வீரர்களுக்கு அந்த மாநில அரசு ரூ. 1.50 கோடியும் வெள்ளிக்கு ரூ. 75 லட்சமும் வெண்கலத்துக்கு ரூ. 50 லட்சமும் ஊக்கத்தொகையாக வழங்குகிறது. 

ஆனால் ஹரியானா வீரர்களுக்குக் கிடைக்கும் தொகையில் மூன்றில் ஒரு பங்குதான் தமிழக வீரர்களுக்குக் கிடைக்கிறது. காமன்வெல்த் போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு ரூ. 50 லட்சம் மட்டுமே தமிழக அரசால் வழங்கப்படுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com